பாதுகாப்பு அமைச்சகம்

மும்பை கடற்படை கப்பல் பழுதுபார்ப்பு மையம் குறைந்த செலவிலான வெப்பமறியும் சாதனத்தை வடிவமைத்துள்ளது

Posted On: 02 APR 2020 11:25AM by PIB Chennai

மும்பையில் உள்ள கடற்படையின் கப்பல் பழுதுபார்ப்பு தளம் கைகளில் எளிதாக எடுத்து பயன்படுத்தக் கூடிய, அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தும், வெப்பம் அறியும் சாதனத்தை வடிவமைத்து, தயாரித்துள்ளது. பெருமளவிலான நபர்கள் கப்பல் தளங்களின் நுழைவாயில்களில் வரும்போது, அவர்களில் உடல் வெப்ப நிலை மாறுபாடு இருப்பவர்களை உடனடியாகக் கண்டறிந்து, பிரிப்பதற்கு இது உதவியாக இருக்கும். அவர்களுக்கு அதன் பிறகு நுட்பமான பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் (சந்தையில் உள்ள வெப்பநிலை அறியும் சாதனங்களின் விலையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே) இதை உருவாக்கியுள்ளது.

உலகை தற்போது உலுக்கி வரும் கோவிட்-19 தொற்று, சமீப கால வரலாற்றில் உலகில் மிகப் பெரிய மருத்துவ அவசர நிலையை உருவாக்கியுள்ளது. நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. நாடுகளின் மருத்துவ கட்டமைப்புகளின் தரம் இப்போது சவால் மிகுந்ததாக இருக்கிறது.

மேற்கு கப்பல் படை பிரிவின் 285 ஆண்டு காலம் பழமையான கடற்படை கப்பல் பழுதுபார்ப்பு தளம், தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் வந்து செல்லும் பகுதியாக இருக்கிறது. கோவிட்-19 பாதிப்பு சூழலில், அந்தத் தளத்திலும், மேற்கு பிராந்தியத்திலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு, அங்கு வரும் அனைவருக்கும் முதல்கட்டமாக உடல் வெப்ப நிலையை அறியும் பரிசோதனை நடத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது. ஒரு நபரைத் தொடாமலே அவருடைய உடலின் வெப்ப நிலையை அறிந்து கொள்வது தான், இதில் மிக ஆரம்ப நிலை பரிசோதனையாக உள்ளது.

நோய்த் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, தொடாமல் பயன்படுத்தும் தெர்மாமீட்டர்கள் அல்லது வெப்பம் அறியும் சாதனங்கள் சந்தையில் பற்றாக்குறையாகிவிட்டன, பல இடங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டன. பற்றாக்குறையைச் சமாளிக்கவும், பெருமளவிலான தேவையைக் கருத்தில் கொண்டும், மும்பையில் உள்ள கடற்படை கப்பல் பழுதுபார்ப்பு தளம், அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தும், கைகளில் எடுத்துச் செல்லும் வெப்பம் அறியும் சாதனத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. இது 0.02 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாறுபாட்டுடன் துல்லியமாக வெப்பத்தைக் கண்டறிகிறது. தொடாமல் பயன்படுத்தும் இந்த தெர்மாமீட்டரில் அகச்சிவப்பு சென்சார் ஒன்றும், எல்.இ.டி. திரை ஒன்றும் உள்ளது. இவை 9 வோல்ட் பேட்டரியில் இயங்கும் மைக்ரோ கண்ட்ரோலருடன் இணைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில்களில் வரும் அதிக எண்ணிக்கையிலானவர்களை  முதல்கட்ட சோதனையிலேயே பிரிப்பதற்கு வசதியாக இந்த சாதனம் அமைந்துள்ளது. இதன் மூலம் நுழைவாயிலில் காவல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் பணிச்சுமை குறையும்.



(Release ID: 1610351) Visitor Counter : 153