மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில் ஐ.ஐ.டி. வளாகங்களின் ஆயத்த நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக 22 ஐ.ஐ.டி.களின் இயக்குநர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியல் `நிஷாங்க்' தலைமையில் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு
கோவிட்-19 பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யும்படி ஐ.ஐ.டி.களுக்கு திரு நிஷாங்க் அறிவுறுத்தல்
Posted On:
01 APR 2020 5:26PM by PIB Chennai
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியல் `நிஷாங்க்' தலைமையில் 22 இந்திய தொழில்நுட்பக்கழகங்களின் (IIT) இயக்குநர்களுடன் இன்று புதுடெல்லியில் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர், வளாகத்தில் உள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் ஆகியோரின் நலன்களை ஐ.ஐ.டி. நிர்வாகங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பதைத் தெரிவித்த அமைச்சர், அதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆன்லைன் கல்வித் திட்டங்கள் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.ஐ.டி. நிர்வாகங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். கல்வித் திட்டங்களை SWAYAM / SWAYAM PRABHA - தளங்களில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும், மதிப்பெண் கிரெடிட் மாற்றித் தரும் நடைமுறை குறித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். முடக்கநிலை காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன ஆரோக்கியம் தொடர்பான சவால்களை அனைத்து ஐ.ஐ.டி. நிலையங்களும் முறையாகக் கையாள வேண்டும் என்றும், அதற்காக ஹெல்ப்லைன் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்காக ஒவ்வொரு ஐ.ஐ.டி. நிலையமும் ஒரு பணிக் குழுவை உருவாக்க வேண்டும் என்றும், அதில் மன நல ஆலோசகர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊதியம் / ஓய்வூதியம்/ கல்வி உதவித் தொகைகளைப் பொருத்த வரையில், உரிய காலத்தில் அவை வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இடைக்கால, ஒப்பந்த மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கான பணம் வழங்குவதைப் பொருத்த வரையில், இந்த அலுவலர்களுக்கு பணம் பெறுவதில் எந்தவிதமான சிரமமும் இருக்கக் கூடாது என்றும், ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான முழு சம்பளமும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு - PM CARES நிதிக்கு - அனைத்து ஐ.ஐ.டி.களும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், கோவிட்-19 குறித்து ஐ.ஐ.டி.கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
(Release ID: 1610019)
Visitor Counter : 206