உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

கொவிட்-19 பரவல் காரணமாக உணவு பதப்படுத்துதல் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் பணிக்குழு அமைப்பு ; ஹர்சிம்ரத் கவுர் பாதல்

Posted On: 30 MAR 2020 7:33PM by PIB Chennai

கொவிட்-19 முடக்கத்தால், உணவு பதப்படுத்துதல் மற்றும் துணைத்தொழில்கள் எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அத்தொழில் துறைப் பிரதிநிதிகளுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் உறுதி அளித்துள்ளார்.

சிஐஐ, ஃபிக்கி, அசோசம், பிஎச்டிசிசிஐ, ஏஐஎப்பிஏ, ஐசிசி, எப்ஐஎன்இஆர், டிஐசிசிஐ (CII, FICCI, ASSOCHAM, PHDCCI, AIFPA, ICC, FINER and DICCI) போன்ற முக்கியமான தொழில்துறை சங்கங்களுடன் இன்று காணொளி மூலம் உரையாடிய மத்திய அமைச்சர், இந்தப் பணிக்குழுவில், உணவு பதப்படுத்துதல் துறையின் அனைத்து மூத்த அதிகாரிகள் , இன்வெஸ்ட் இந்தியாவின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார். இந்தக் குழு ஏற்கனவே, 222 மனுக்களைப் பெற்றுள்ளதாகவும், அதில் 98-மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மற்றவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தாரர்.

காணொளி உரையாடலின் போது, உற்பத்தி மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ள போதிலும், அது மாநில அரசுகளால் வெவ்வேறு விதத்தில் பொருள் கொள்ளப்படுவதாக திருமதி . ஹர்சிம்ரத் கவுர் பாதலிடம், தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்தனர். உற்பத்தி மற்றும் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்ல அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தேவை என அவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சாலை மூடல், கிடங்குகள் இயங்க அனுமதி, பணியாளர்கள் நடமாட்டம், போக்குவரத்துத் தடங்கல் தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சுமுகமான உற்பத்திக்குத் தேவையான தொழிலாளர்கள் இல்லாத நிலை, போக்குவரத்துப் பற்றாக்குறை நிலவுவதாக தொழில்துறை பிரதிநிதிகள் தங்கள் குறைகளைப் பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் மளிகைக் கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவற்றுடன் தொடர்பு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

உணவுப்பொருள் விநியோகம் சுமுகமாக நடப்பதற்கும், உணவு பதப்படுத்துதல் துறைக்கு மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்முயற்சி எடுக்கப்படும் என்று உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் கூறினார்.

தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்த அனைத்து யோசனைகளையும் ஆய்வு செய்வதாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட குறைகளை பணிக்குழுவிடம் தெரிவிப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

*****



(Release ID: 1609465) Visitor Counter : 127