அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கையில் புதிய கிருமிநாசினி கருவி ¬- புனே சைட்டெக் பூங்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தொழில்நுட்பம்
Posted On:
30 MAR 2020 4:07PM by PIB Chennai
புனே சைட்டெக் பூங்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஓர் அறைக்குள் கிருமிகள் பாதிப்பு அளவை வெகுவாகக் குறைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு. கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் சிறந்த தீர்வை இது தருவதாக அமைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் உருவாக்கப்பட்ட நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தத் துறை ரூ ஒரு கோடி ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் நிறுவுவதற்காக 1000 கருவிகள் விரைவில் தயாராகிவிடும். ஜே-கிளீன் வெதர் டெக்னாலஜிஸ் என்ற புனே நிறுவனம், இந்தச் சாதனத்தை உற்பத்தி செய்கிறது.
சைட்டெக் ஏரான் என்று பெயரிடப்பட்டுள்ள நெகடிவ் அயனி உருவாக்கும் இந்தச் கருவி, மூடி வைக்கப்பட்டுள்ள அறையில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் இது உதவிகரமாக இருக்கிறது. கோவிட் 19 பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட, பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் கிருமி நீக்கத்துக்கும் இது உதவிகரமாக உள்ளது. எனவே, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பகுதிகளில் 24 மணி நேரமும் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோரின் உடல்நலனைப் பாதுகாப்பதற்கு இது உதவியாக இருக்கும். அவர்களுடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடும் திறனை அதிகரிக்கச் செய்வதாக இது இருக்கும்.
நோய்களை உருவாக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்வதில் இது பயனுள்ளதாக உள்ளது என்று, உலக அளவில் பிரசித்தி பெற்ற பல ஆய்வகங்களால் அறிவியல் பூர்வமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், முற்றிலும் மூடப்பட்டுள்ள தோட்ட வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்ற மூடிய சூழ்நிலையில் இயங்கும் பகுதிகளில் இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மணி நேரம் இந்தச் சாதனத்தை இயக்கினால் அந்த மூடப்பட்ட அறைக்குள், அதன் அளவைப் பொருத்து 99.7 சதவீதம் அளவுக்கு வைரஸ் பாதிப்பை இது குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
*********
(Release ID: 1609307)
Visitor Counter : 217