சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட-19 தற்போதைய நிலவரம்

இந்தியா, ஈரானிலிருந்து தனது குடிமக்களை அழைத்துக்கொண்டு வந்தது

Posted On: 11 MAR 2020 3:57PM by PIB Chennai

கோவிட்- 19 நோய் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள
இந்தியக் குடிமக்களையும், இதர தேசத்தவர்களையும் அங்கிருந்து
இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக, இந்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.


கோவிட் -19 நோய் தொற்று ஈரானில் விரைவாகப் பரவுகிறது என்று தெளிவாகத்
தெரிந்ததையடுத்து, அந்த நாட்டிலுள்ள இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாகவும்
பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு, இந்திய அரசு பல நடவடிக்கைகளை
மேற்கொண்டது.


யாத்திரீகர்கள், மாணவர்கள், மீனவர்கள் உட்பட பல இந்திய நாட்டவர்கள்
ஈரானில் உள்ளனர்.



7 மார்ச் 2020 அன்று ஈரானிலிருந்து 108 மாதிரிகள் கிடைக்கப்பெற்றன.


இந்த மாதிரிகள் எய்ம்ஸ் மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில்
பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ
சி எம் ஆர்) ஆறு விஞ்ஞானிகள், ஈரானுக்கு அனுப்பப்பட்டு பணியில் உள்ளனர்.
அவர்கள் அங்கு ஒரு ஆய்வுக் கூடத்தை நிறுவுவதற்குத் தேவையான
உபகரணங்களும், வேதிப் பொருட்களும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன.


ஈரானிலிருந்து 10 மார்ச் 2020 அன்று இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட
முதல் குழுவில் 25 ஆண்கள், 31 பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம்
58 பேர் இருந்தனர். தற்போது இவர்களில் ஒருவருக்கும் கோவிட-19 நோய்
அறிகுறி ஏதும் இல்லை.


கோவிட-19 பாதித்த நாடுகளில் இருந்து இதுவரை 948 பயணிகளை இந்திய அரசு
அழைத்துக் கொண்டு வந்துள்ளது.



இவர்களுள் 900 பேர் இந்தியக் குடிமக்கள். 48 பேர், மாலத்தீவு, மியான்மர்,
வங்கதேசம், சீனா, அமெரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, நேபாளம்,
தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.


முன்னதாக சீனாவின் ஹுபேய் மாகாணத்திலுள்ள வூஹான் நகரம் கோவிட்-19
நோய்த்தொற்றின் ஆதார மையமான போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள்
அந்நகரத்தில் சிக்கித் தவித்தனர். அப்போது ஏர் இந்தியா இரண்டு சிறப்பு
விமானங்கள் மூலம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி, இந்தியாவிற்கு
அழைத்துக் கொண்டு வந்தது. இவ்விமானங்களின் மூலம் 654 பயணிகள்
இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 647 பேர் இந்தியக்
குடிமக்கள்.



1 பிப்ரவரி 2020 அன்று சீனாவிலிருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள்
அழைத்துக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்களுள் 104 பேர் இந்திய திபெத்
எல்லை காவல் படையின் சாவ்லா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு,
கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மானேசர் இராணுவ முகாமில் 220 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.


இரண்டாவது குழுவில் அழைத்துவரப்பட்ட 330 பயணிகளில் மாலத்தீவு குடிமக்கள்
7 பேர். இந்திய தூதரக அதிகாரிகள் இருவர். இந்த அதிகாரிகள் இம்மக்களை
அங்கிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக
சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு 3 பிப்ரவரி 2020 அன்று
வந்து சேர்ந்தனர். இவர்களுள் 300 பேர் (7 மாலத்தீவினர் உட்பட) சாவ்லா
முகாமில் வைக்கப்பட்டனர். 30 பேர் மானேசருக்கு கண்காணிப்பிற்காக
அனுப்பப்பட்டனர்.

இவர்கள் அனைவருமே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்
வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்டதில்
கோவிட்-19 நோய் அவர்களுக்கு இல்லை என்று தெரியவந்தது. அவர்கள் 18
பிப்ரவரி 2020 அன்று முகாம்களில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.


சீனாவிலுள்ள ஹூபேய் மாகாணத்திலிருந்து 112 பயணிகளை, இந்திய விமானப்படை 26
பிப்ரவரி 2020 அன்று அழைத்து வந்தது. இவர்களுள் 76 பேர் இந்தியக்
குடிமக்கள். மற்றவர்கள், மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு, சீனா,
அமெரிக்கா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.


இவர்கள் அனைவரும் 27 பிப்ரவரி 2020 அன்று, இந்தியா வந்தடைந்தனர். இவர்கள்
இந்திய திபெத் எல்லைக் காவல் படையினர் முகாமில் 14 நாட்களுக்கு
வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் எவருக்கும் கோவிட்- 19 நோய் இல்லை என்று
முதலாவது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்திய விமானப்படை விமானம்
சீனாவிற்கு ஒரு நல்லெண்ணச்செயல் அடிப்படையில் மருத்துவச் சாதனங்களை
எடுத்துச் சென்றது.



ஜப்பானிய சுற்றுலா கப்பல் டைமண்ட் பிரின்சஸ்கப்பலிலிருந்து 124
பயணிகள் , ஜப்பானின் யோகொஹமா துறைமுகத்திலிருந்து, ஏர் இந்தியா விமானம்
மூலம், இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டனர். 124 பயணிகளில் 5 பேர் இலங்கை,
நேபாளம், தென்னாபிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள்
அனைவரும் மானேசர் இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முதலாவது
பரிசோதனையில், இவர்களில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்று
கண்டறியப்பட்டுள்ளது.



தடுப்பு நடவடிக்கையாக, 10 மார்ச் 2020 அன்று இந்திய அரசாங்கத்தால்
வெளியிடப்பட்ட பயண அறிவுரையின்படி, சீனா, ஹாங்காங், தென் கொரியா ,
ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ்,
ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த எந்தப் பயணியாக
இருந்தாலும், அவர்கள் தாங்கள் இந்தியாவிற்கு வந்த நாளிலிருந்து 14
நாட்கள் தங்களைத் தாங்களே, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அறிவுறுத்தப்பட்டது வீட்டிலிருந்தே
பணி செய்வதற்கான சூழலை இந்த காலத்திற்கு, அவர்களது நிறுவனங்கள்
அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது



தற்போது இந்தியாவில் 60 பேருக்கு நோய் தொற்று இருப்பதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் நோய் தொற்று இருப்பதாகக்
கண்டறியப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு
விட்டார்கள்). நேற்றைய தினத்திலிருந்து இன்றுவரை 10 புதிய நபர்களுக்கு
கோவிட் 19 நோய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில் 8 பேர் கேரள
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ஒருவர்
டில்லியைச் சேர்ந்தவர்.



(Release ID: 1608599) Visitor Counter : 242