நிதி அமைச்சகம்

கொரோனா வைரசுக்கு எதிராக ஏழைகள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம் ) கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை அறிவித்தார் நிதி அமைச்சர்

Posted On: 26 MAR 2020 5:12PM by PIB Chennai

கோவிட் 19க்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 50 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

* 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் 1 கிலோ அவர்களுக்கு விருப்பமான பருப்பு வகை ஆகியவை  அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.

* ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ 500 அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், நாள் ஒன்றுக்கு ரூ 182ல் இருந்து ரூ 202 ஆக உயர்வு. இதனால் 13.62 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

* 3 கோடி மூத்த குடிமக்கள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 1,000 கருணைத் தொகை.

* பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ 2,000 ஏப்ரல் முதல் வாரத்தில் முன்கூட்டியே வழங்கப்படும். இதனால் 8.7 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

* கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா வைரசுக்கு எதிராக ஏழைகள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம்) கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், "ஏழைகளிலும் ஏழைகளாக உள்ளோரின் கைகளில் பணமும் உணவும் சென்றடைவைதற்காக இன்றைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கும், அவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்களுக்கு சிக்கல்கள் இருக்காது," என்றார்.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார். பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு. அட்டானு சக்ரபொர்த்தி மற்றும் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு. டேபாஷிஷ் பண்டா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண்  தொகுப்பின் கூறுகள் வருமாறு:

பிரதான் மந்திரி கரிப் கல்யாண்  தொகுப்பு

I. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கோவிட் 19 எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்

* தூய்மைப் பணியாளர்கள், வார்டு பாய்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள், வல்லுநர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் இந்த சிறப்புக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

* கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது சுகாதாரப் பணியாளர் யாருக்காவது விபத்துகளை சந்திக்க நேரிட்டால் அவருக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

* அனைத்து அரசு சுகாதார மையங்கள், ஆரோக்கிய மையங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தத் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சுமார் 22 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த காப்பீடு பொருந்தும்.

 

II. பிரதமர் கரிப் கல்யாண்  அன் யோஜனா

* அடுத்த மூன்று மாதங்களுக்கு, எந்த ஒருவரும், குறிப்பாக எந்த ஏழை குடும்பமும், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் வாடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது.

* 80 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு, இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.

* தற்சமயம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை விட இரு மடங்கு பொருள்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு  இவர்களுக்கு அளிக்கப்படும்.

* இந்தக் கூடுதல் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

 

பருப்புகள்:

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழைக்குடும்பங்களுக்குப்  போதுமான புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த பகுதியினரின் விருப்பத்திற்கு ஏற்ற பருப்புகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, குடும்பத்துக்கு 1 கிலோ வீதம் வழங்கப்படும்

* இந்திய அரசால் இந்தப் பருப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

 

 

 

 

IIIபிரதான் மந்த்ரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், விவசாயிகளுக்கான நன்மைகள்:

* பிரதமரின் கிஸான் யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு 2020 – 21இன் முதல் தவணையான ரூ 2,000 முன்கூட்டியே வழங்கப்படும்.

* இதனால் 8.7 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

 

IV. பிரதான் மந்த்ரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் பணப் பரிமாற்றம்:

ஏழைகளுக்கான உதவி:

* பிரதமரின் ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ 500 அடுத்த மூன்று மாதங்களுக்கு கருணைத் தொகையாக வழங்கப்படும்.

சமையல் எரிவாயு உருளைகள்:

பிரதான் மந்த்ரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அமைப்புசார்ந்த துறைகளில் பணிபுரியும் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு உதவி:

* 100 பணியாளர்களுக்கும் கீழ் வேலை செய்யும் நிறுவனங்களில் மாதம் ரூ 15,000க்கு கீழ் சம்பாதிப்போர் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

* இந்தத் தொகுப்பின் கீழ் அவர்களின் மாத ஊதியத்தில் 24 சதவீதத்தை அவர்களுடைய பி எஃப் கணக்குகளில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசே செலுத்திவிடுவது என்று முடிவெடுத்துள்ளது.

* அவர்களின் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை இது தடுக்கும்.

மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டோர்), விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு:

* கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால் சுமார் 3 கோடி வயதானோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதிப்படையும் நிலையில் உள்ளனர்.

அவர்கள் தங்கள் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசு ரூ 1,000 வழங்கும்.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 1 ஏப்ரல், 2020 முதல் ரூ 20 உயர்த்தப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஊதிய உயர்வின் மூலம் ஒவ்வொரு பணியாளருக்கும் ஆண்டுக்கு ரூ 2000 அதிகம் கிடைக்கும்.

* இதனால் 13.62 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.

 

V. சுய உதவிக் குழுக்கள்:

* 63 லட்சம் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பெண்கள்   6.85 கோடி வீடுகளுக்கு அதரவு அளிக்கிறார்கள்.

. சுய உதவிக்குழுக்களுக்கு பிணை இல்லாக் கடன் தொகையின் அளவு ரூ 10 முதல் ரூ 20 லட்சம் வரை உயர்த்தப்படும்.

VI. பிரதம மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் இதர கூறுகள்

அமைப்புசார்ந்த துறை:

* பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீத பணம் அல்லது மூன்று மாத சம்பளம், இரண்டில் எது குறைவோ, அதனை திரும்பத் தரத் தேவையில்லாத முன்பணமாக பணியாளர்களின் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு வழங்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் தொற்று நோய்ப் பரவலும் ஒரு காரணமாக சேர்க்கப்படும்.

* பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ள 4 கோடி பணியாளர்களின் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறும்.

கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி:

* மத்திய அரசு சட்டத்தின் மூலம் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

* 3.5 கோடி தொழிலாளர்கள் இதில் பதிவு செய்துகொண்டுள்ளார்கள்.

* தொழிலாளர்களை பொருளாதார பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக இந்த நிதியை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்படும்.

மாவட்ட கனிம நிதி

* கோவிட் 19  நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருத்துவ சோதனைகள், பரிசோதனைகள் மற்றும் இதர தேவைகளுக்கு உதவி செய்ய மாவட்ட கனிம நிதியில் இருக்கும் பணத்தை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்படும்.



(Release ID: 1608428) Visitor Counter : 1575