பிரதமர் அலுவலகம்
அச்சு ஊடக பத்திரிகையாளர்கள், அதனுடன் தொடர்புடையவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
கொவிட்-19 சவாலை எதிர்கொள்வதில் ஊடகங்களின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு
மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பது அவசியம்-பிரதமர்
தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்
Posted On:
24 MAR 2020 2:36PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்துவருவதாக பிரதமர் கூறினார். ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாயந்ததாக மாற்றியுள்ளது.
செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன என்றும், ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனோ வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தகவல்கள் செய்தித்தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் ,அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாகச் செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்களை சர்வதேச தரவுகள், பிறநாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர், வதந்திகள் , அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதைச் சமாளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். கொவிட் -19 தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக, அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளைச் செயல்படுத்த பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்தனர். அச்சு ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தத் தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக அவர்கள் கூறினர்.
கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக பொறுப்புணர்வை மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தினார்.
அரசின் தீவிரக்கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக பத்திரிகையாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை அச்சு ஊடகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
***
(Release ID: 1607936)
Visitor Counter : 385
Read this release in:
Telugu
,
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam