மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட்-19 எதிரொலி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வுகளையும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்க கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

Posted On: 18 MAR 2020 11:30PM by PIB Chennai

நோவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மனிதவள அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி, தேசிய பரிசோதனை முகமை, தேசிய திறந்த நிலைக் கல்வி நிறுவனம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை தங்களது அனைத்து தேர்வுகளையும் இம்மாதம் 31ஆம் தேதிவரை ஒத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்வு வாரியங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது நடந்து வரும் தேர்வுகளை, மார்ச் 31ஆம் தேதிக்குப்பின்னர் மாற்றியமைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுத் தாள்கள் திருத்தும் பணியையும் மார்ச்-31ஆம் தேதிக்குப் பின்னர்  மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்  மற்றும் தேர்வு வாரியங்கள் மின்னணு தொடர்பு சாதனங்கள் மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு முறையான தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இதுதொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்வி திட்டத்தை முறைப்படி பராமரிக்கவும், அனைத்து இயன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                ******



(Release ID: 1607153) Visitor Counter : 222