பிரதமர் அலுவலகம்

தேசப்பிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு

இந்தியாவுக்கும் பங்களாதேஷிக்கும் இடையேயான ஆழமான உறவுகள், பங்கபந்து ஏற்படுத்திய உணர்வுகள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட பாரம்பரிய மரபுகள் அடிப்படையில் அமைந்தவை என்று பிரதமர் கூறியுள்ளார்

Posted On: 17 MAR 2020 8:24PM by PIB Chennai

தேசப்பிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.03.2020) காணொலி செய்தி மூலமாகப் பங்கேற்றார்.

சென்ற நூற்றாண்டின் மாபெரும் மனிதர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்று வர்ணித்த திரு மோடி, “அவரது வாழ்க்கை முழுமையும் நம் அனைவருக்கும் மிகப்பெரிய எழுச்சி ஊட்டக் கூடியவை” என்று கூறினார். 

பங்கபந்து மிகவும் தைரியமான மனிதர், கொள்கை பிடிப்பு உடையவர், அமைதியின் ஞானி என்று வருணித்த பிரதமர் திரு மோடி, பங்களாதேஷின் “தேசப்பிதா”-வான அவர், தமது காலத்திய இளைஞர்களுக்கு நாட்டின் விடுதலை சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கு உத்வேகம் அளித்தார் என்றும் கூறினார்.

கொடூரமான, ஒடுக்குமுறையுடன் கூடிய அரசு, அனைத்து ஜனநாயக நெறிகளையும் கைவிட்டு, ‘பங்களா பூமியில்’ அநீதியான ஆட்சியை கட்டவிழ்த்து விட்டு மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது என்று குறிப்பிட்ட பிரதமர், பங்களாதேஷை இத்தகைய இன்னல்கள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றி, நாட்டை ஆக்கப்பூர்வமான முற்போக்குடைய சமுதாயமாக மாற்றுவதற்கு பங்கபந்து எவ்வாறு பாடுபட்டார் என்பதை நினைவுகூர்ந்தார்.

“எந்தவொரு நாட்டின் மேம்பாட்டுக்கும் வெறுப்பு, எதிர்மறை அணுகுமுறை அடித்தளமாக இருக்க முடியாது என்பதில் மிகவும்  தெளிவாக இருந்தார் பங்கபந்து என்றும், எனினும், ஒரு சிலர் அவரது கருத்துக்களையும், முயற்சிகளையும் விரும்பவில்லை என்பதால், அவரது உயிரை பிரித்துவிட்டனர்” என்றும் பிரதமர் கூறினார்.

“பயங்கரவாதம், வன்முறை, அரசியல் மற்றும் ராஜதந்திர ஆயுதங்கள் ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் அழிக்கின்றன என்பதை நாம் கண்டு வருகிறோம். பயங்ரவாதம் மற்றும் வன்முறையின் ஆதரவாளர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள், எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்து வரும் அதேசமயம், பங்களாதேஷ் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது” என்று பிரதமர் கூறினார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கனவு கண்ட “பொன் பங்களாதேஷ்”-ஐ உருவாக்க அந்த நாட்டு மக்கள் இரவு பகல் என்று பாராமல் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

பங்கபந்து-வினால் உத்வேகம் பெற்ற பங்களாதேஷ் மாண்புமிது ஷேக் ஹசினா தலைமையில், உள்ளடக்கிய மற்றும் மேம்பாட்டை நோக்கிய கொள்கைகளால் முன்னேறிவருவதைப் பாராட்டுவதாக பிரதமர் கூறினார்.  பொருளாதாரம், இதர சமூக குறியீடுகள், விளையாட்டுக்கள் போன்ற துறைகளில் பங்களாதேஷ் புதிய உச்சங்களை நிர்ணயித்து வருகிறது என்று அவர் கூறினார். திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், மகளிருக்கு அதிகாரமளித்தல், குறுமநிதி அளிப்பு போன்ற பல துறைகளில் பங்களாதேஷ், முன் எப்போதும் இல்லாத முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

“கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் பொன் அத்தியாயம் ஒன்றை ஏற்படுத்தி, இருநாடுகளுக்குமான புதிய பரிமாணம் மற்றும் முன்னேற்ற திசையை இந்தியாவும், பங்களாதேஷும் நிர்ணயித்துள்ளன” என்று குறிப்பிட்ட பிரதமர், சிக்கலான எல்லைப்பிரச்சினைக்கு நட்புறவு அடிப்படையிலான தீர்வுகாண்பதில் பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்தி இருப்பதே இதற்கு காரணம் என்றார்.

தெற்காசியாவில் பங்களாதேஷ்தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி என்பது மட்டுமன்றி, மேம்பாட்டிலும் நட்பு நாடாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.  மின்சார விநியோகம், நட்புறவுக் குழாய் பாதை, சாலை, ரயில், இண்டர்நெட், விமான போக்குவரத்து, நீர்வழிப்பாதை போன்ற இருநாட்டு மக்களையும் இணைக்கும் நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை அவர் பட்டியலிட்டார்.

 தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், உஸ்தாத் அலாவுதின் கான், லாலோன் ஷா, ஜீபானந்த தாஸ், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற அறிஞர்களிடமிருந்து இருநாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியம் உருவாகியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

பங்கபந்துவின் உத்வேகம் மற்றும் பாரம்பரியம் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான மரபு சார்ந்த உறவுகள் விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.  கடந்த பத்தாண்டில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் எழுச்சியின் வலுவான அடிப்படை, பங்கபந்து காட்டிய மார்க்கத்தில் அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இருநாடுகளுக்கும் பொதுவான எதிர்கால முக்கிய நிகழ்வுகளாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பங்களாதேஷ் விடுதலையின் 50-வது ஆண்டு விழா, 2022-ல் கொண்டாடப்படவுள்ள இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும்  இடையே மேம்பாட்டை மட்டுமின்றி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என்று திரு மோடி கூறினார்.

                                                                                               *********



(Release ID: 1606861) Visitor Counter : 177