பிரதமர் அலுவலகம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுடன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்

Posted On: 17 MAR 2020 9:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.03.2020) சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மேன்மைமிகு முகமது பின் சல்மான் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இரு தலைவர்களும் கோவிட்-19 உலகளாவிய நோய் தொற்றாக உருவெடுத்துள்ள நிலையில் உலக நிலவரம் குறித்து பேசினார்கள். 

     இந்த உலக சவாலை எதிர்கொள்ள போதுமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  கோவிட்-19 பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தையும், உடல் நலத்தையும் பாதித்திருப்பதோடு, உலகின் பல பகுதிகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.

     இந்த நிலையில், சமீபத்தில் சார்க் நாடுகளுடன் காணொலி மூலமான மாநாட்டை இந்தியா சமீபத்தில் நடத்தியது பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

     இதேபோன்ற ஒரு மாநாட்டை ஜி-20 நாடுகளின் தலைவர்கள் நிலையில், இந்த அமைப்பின் தலைவராக உள்ள சவுதி அரேபியாவின் முயற்சியின்கீழ் நடத்துவது உலக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கோவிட்-19 உலக அளவில் பரவியிருப்பதால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும், உலக மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் இத்தகைய மாநாடு உதவும் என்றும் அவர்கள் உடன்பட்டனர்.

     இந்த நோய் தொற்று தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் அடிக்கடி நெருங்கி தொடர்பு கொள்ளச் செய்வது என பிரதமரும், இளவரசரும் முடிவு செய்தனர்.

                           ********



(Release ID: 1606860) Visitor Counter : 105