பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியின் 24 பேர் கொண்ட குழுவைப் பிரதமர் சந்தித்தார்

Posted On: 14 MAR 2020 8:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில்  திரு அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவைச் சந்தித்தார்.

     பிரதமர் தமது கலந்துரையாடல் நிகழ்வின்போது, ஜம்மு காஷ்மீரில் மாற்றத்தைக் கொண்டுவர மக்களின் பங்கேற்பு அவசியம் என்று வலியுறுத்தினார். மேலும், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிர்வாகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  விரைவான அரசியல் ஒருங்கிணைப்பு நடைமுறைகள் மூலமாக அந்தப் பிராந்தியத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் குறித்துப் பேசிய பிரதமர், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உந்துசக்தியாகத் திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும், திறன் மேம்பாட்டையும் உருவாக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலமாகவும், சுற்றுலா போன்ற துறைகளில் புதிய முதலீடுகளை  உருவாக்குவதன் வாயிலாகவும், பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் அந்தக் குழுவினரிடம் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

மக்கள் தொகை மாற்றம், மறுவரையறைப் பணிகள், மாநில அந்தஸ்து வழங்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் குழுவினரிடம் பிரதமர் கலந்துரையாடினார். நாடாளுமன்றத்தில் தாம் அளித்த அறிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர், ஜம்மு காஷ்மீருக்கு கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான அனைத்துப் பிரிவு மக்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த அரசு பாடுபடும் என்றார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் முடிவை மேற்கொண்டதானது, ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் ஒளி ஏற்படுத்திய தருணமாக அமைந்தது என்று அப்னி கட்சித்தலைவர் திரு அல்தாப் புகாரி குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பிரதமர் அளித்து வரும் உறுதியான ஆதரவு மற்றும் இடையறாத முயற்சிகளுக்கு  குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது  தொடர்பாக அரசு எடுத்து வரும் முயற்சிகளையும், பாதுகாப்பு முகமைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் அவர்கள் பாராட்டினார்கள்.

-----



(Release ID: 1606466) Visitor Counter : 152