பிரதமர் அலுவலகம்

இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது பிரதமர் திரு.நரேந்திர மோடி பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கை

Posted On: 25 FEB 2020 3:48PM by PIB Chennai

எனது நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் அவர்களே,

மதிப்பிற்குரிய அமெரிக்க குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகளே,

தாய்மார்களே, சகோதரர்களே,

வணக்கம்


அதிபர் டிரம்ப்-பையும், அவரது குழுவினரையும் இந்தியாவுக்கு மீண்டும் ஒருமுறை உற்சாகத்துடன் வரவேற்கிறோம். இந்தப் பயணத்தில், தனது குடும்பத்தினருடன் அவர் வந்திருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் டிரம்ப்-புக்கும் எனக்கும் இடையே கடந்த 8 மாதங்களில் 5-வது முறையாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. மோட்டேரா-வில் அதிபர் டிரம்ப்-புக்கு வரலாற்றுப்பூர்வமான மற்றும் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அளிக்கப்பட்ட வரவேற்பு, எப்போதும் நினைவில் இருக்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு, இரு நாடுகளுக்கும் இடையேயானது மட்டுமல்லாமல், மக்களால் இயக்கப்படுவது மற்றும் மக்களை அடிப்படையாகக் கொண்டது என்பது நேற்று மீண்டும் தெளிவாகியுள்ளது. இந்த நல்லுறவு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நல்லுறவாக உள்ளது. இதனை ஒருங்கிணைந்த சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு எடுத்துச் செல்ல நானும், அதிபர் டிரம்ப்-பும் இன்று முடிவுசெய்துள்ளோம். இருதரப்பு நல்லுறவை இந்த அளவுக்கு கொண்டுசெல்வதில் அதிபர் டிரம்ப், மதிப்பிட முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.

நண்பர்களே,

இன்று நாங்கள் நடத்திய ஆலோசனையின்போது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச இணைப்பு, வர்த்தக உறவுகள் அல்லது மக்களுக்கு இடையேயான நல்லுறவு என எதுவாக இருந்தாலும், இருதரப்பு நல்லுறவின் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்தும் சாதகமான முறையில் பரிசீலித்தோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்துவரும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புத் திறன் அதிகரித்துள்ளது. நமது விநியோக நடவடிக்கைகளில், நமது பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் பங்குதாரர்களாக மாறியுள்ளனர். அமெரிக்கப் படைகளுடன் இந்தியப் படைகள் தற்போது மிகப்பெரும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நமது படைகளுக்கு இடையேயான செயல்பாடுகள், இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன.

நண்பர்களே,
 

இதேபோல, நமது உள்நாட்டு மண்ணைப் பாதுகாக்கவும், சர்வதேச குற்றங்களுக்கு எதிராக போரிடவும், ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் நாம் இன்று மேற்கொண்ட முடிவு, இந்த ஒத்துழைப்புக்கு மேலும் வலுவூட்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களையும் பொறுப்பாளியாக்குவதற்கான நமது நடவடிக்கைகளை அதிகரிக்க நாங்கள் இன்று முடிவுசெய்துள்ளோம். போதை மருந்துகள் மற்றும் ஓபியாய்டு பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல், போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் போன்ற தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள, புதிய வழிமுறைகளை பின்பற்ற நாங்கள் இன்று முடிவுசெய்துள்ளோம். நண்பர்களே, நமது எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு, சற்று முன்பு, வலுவாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் பரஸ்பர முதலீடு அதிகரித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பதில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆதாரமாக அமெரிக்கா மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நமது எரிசக்தி வர்த்தகம், சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது அணுசக்தி என எதுவாக இருந்தாலும், நமது ஒத்துழைப்புக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது.

நண்பர்களே,

இதேபோல, இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு, புத்தாக்கம் மற்றும் செயலாக்கத்தில் தொழில்துறை 4.0 மற்றும் 21-ம் நூற்றாண்டின் மற்ற வளரும் தொழில்நுட்பங்கள், புதிய நிலையை எட்டச் செய்துள்ளன. அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்ப தலைமைப்பண்பை இந்தியாவின் திறன்வாய்ந்த தொழில் வல்லுநர்கள் வலுப்படுத்தியுள்ளனர்.


நண்பர்களே,

பொருளாதாரத் துறையில் வெளிப்படையான, நியாயமான மற்றும் சமச்சீரான வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் நமது இருதரப்பு வர்த்தகம், இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றது. மேலும், அதிக அளவில் சமநிலைத்தன்மையைப் பெற்றுள்ளது. எரிசக்தி, பயணிகள் விமானங்கள், ராணுவம் மற்றும் உயர்கல்வி ஆகிய 4 துறைகள் மட்டுமே, இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதார நல்லுறவில், கடந்த 4-5 ஆண்டுகளில் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்களிப்பை செய்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு அதிபர் டிரம்ப்-பின் கொள்கைகளும், முடிவுகளுமே காரணம். இந்த எண்ணிக்கை, வரும் காலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு உயரும் என்று நான் நம்புகிறேன். இருதரப்பு வர்த்தக விவகாரத்தில், நமது வர்த்தக துறை அமைச்சர்களுக்கு இடையே சாதகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நமது வர்த்தக அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலை, சட்டப்பூர்வமாக மாற்ற நமது குழுவினரை அனுமதிப்பது என நானும், அதிபர் டிரம்ப்-பும் இன்று முடிவுசெய்துள்ளோம். மிகப்பெரும் வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவது என்றும் நாங்கள் முடிவுசெய்துள்ளோம். பரஸ்பர நலன் அடிப்படையில் இது நல்ல பலனை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நண்பர்களே,

சர்வதேச அளவில் இந்தியா, அமெரிக்கா இடையேயான நல்லுறவு, நமது பொதுவான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நோக்கங்கள் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச நிலைத்தன்மை, குறிப்பாக, இந்தோ-பசிபிக் மற்றும் சர்வதேச மக்களின் நிலைத்தன்மைக்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. உலகில் மக்களுக்கு இடையேயான இணைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு நீடித்த மற்றும் வெளிப்படையான முறையில் நிதியளிப்பது முக்கியம் என்று நாங்கள் இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளோம். நமக்கு இடையேயான இந்த பரஸ்பர புரிந்துணர்வு என்பது, நம் இருவருக்கு மட்டுமல்லாமல், உலகின் நலன் சார்ந்து உள்ளது.

நண்பர்களே,

இந்தியா-அமெரிக்கா இடையேயான இந்த சிறப்புவாய்ந்த நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடித்தளமாக, நமது மக்களுக்கு இடையேயான நல்லுறவு திகழ்கிறது. தொழில் முறை வல்லுநர்களாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, அமெரிக்காவில் மிகப்பெரும் பங்களிப்பை இந்திய வம்சாவளியினர் அளித்து வருகின்றனர். இந்தியாவின் இந்த தூதர்கள், தங்களது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம், அமெரிக்க பொருளாதாரத்துக்கு பங்களிப்பை செய்வதோடு மட்டுமன்றி, அமெரிக்க சமூகத்தை, அவர்களது ஜனநாயக மதிப்புகள் மற்றும் தலைசிறந்த கலாச்சாரத்தின் மூலம் வலுப்படுத்தி வருகின்றனர். நமது தொழில் முறை நிபுணர்களின் சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் வகையிலான totalisation உடன்பாட்டை மேற்கொள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என அதிபர் டிரம்ப்-பை நான் கேட்டுக் கொள்கிறேன். இது பரஸ்பர நலனுக்கானதாக இருக்கும்.

நண்பர்களே,

இந்த அனைத்து பரிமாணங்களிலும் நமது நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்-பின் பயணம் வரலாற்றுப்பூர்வமான பங்களிப்பாக இருக்கும். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதற்கும், இந்திய-அமெரிக்க நல்லுறவை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றதற்கும் அதிபர் டிரம்ப்-புக்கு மீண்டும் ஒரு முறை மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

 

குறிப்பு: பிரதமரின் உரை இந்தி மொழியில் இடம்பெற்றது. இது உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.

 

*****



(Release ID: 1605333) Visitor Counter : 187