சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 நிலவரம்
ஜப்பானிலிருந்து 124 பேரையும், வூஹானிலிருந்து 112 பேரையும் மீட்டிருப்பதாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் தகவல்
Posted On:
27 FEB 2020 1:02PM by PIB Chennai
ஜப்பானிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 124 பேரை மீட்டிருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியிருக்கிறார். இன்று (27.02.2020) காலை தில்லியில் இதைத் தெரிவித்த அமைச்சர், இவர்களில் 119 பேர் இந்தியர்கள் என்றும் ஏனைய ஐந்து பேர் இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். மேலும், கோவிட் – 19 முதலில் தோன்றிய சீனாவின் வூஹான்-லிருந்து 112 பேர் இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் மீட்கப்பட்டிருப்பதாக கூறினார்.
ஜப்பானிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மானேசார் ராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள் என்றும், வூஹானிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சாவ்லாவில் உள்ள இந்திய – திபெத் எல்லைப்படை முகாமில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறினார். சீன மக்கள் கோவிட்-19 தொற்று காரணமாக இன்னல்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக, இந்தியா 15 டன் மருத்துவ நிவாரணப் பொருட்களை வூஹானுக்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவல் தொடர்பான உலக நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளுடன் கூடுதலாக சிங்கப்பூர், கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்திய மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார். கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளிலிருந்து வருபவர்களும், இந்த நாடுகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு சென்று வந்தவர்களும் இந்தியா வந்தவுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மாநிலங்களில், கோவிட் -19, கண்காணிப்பு மற்றும் நிர்வாக தயார் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக, தமது அமைச்சகதத்தின் இணைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள், அங்கு செல்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
இதுவரை 4,787 விமானங்களிலிருந்து வந்த 4,82,927 பயணிகள் சோதனையிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 21 விமான நிலையங்கள், 12 பெரிய துறைமுகங்கள், 65 சிறிய துறைமுகங்கள், தரைப்பகுதியில் எல்லைகளைக் கடந்து வருவதற்கான நிலைகள், ஆகியவற்றில் பயணிகள் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை சோதனைக்கென அனுப்பப்பட்ட 2,836 மாதிரிகளில் 2,830-ல் நோய் தொற்று இல்லை என்றும், முன்னதாக 3 கேரள நபர்களின் மாதிரிகளில் தொற்று காணப்பட்டதாகவும் (தற்போது சிகிச்சைக்கு பிறகு இவர்கள் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர்) 3 மாதிரிகளின் சோதனை நடைபெற்று வருவதாகவும், அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
------
(Release ID: 1604585)
Visitor Counter : 146