பிரதமர் அலுவலகம்

இந்தியா செயல் திட்டம் 2020 மாநாட்டில் பிரதமர் சிறப்புரை


கடந்த 8 மாதங்களில் 100 முடிவுகளை மேற்கொண்டு அரசு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்

நடைமுறைகள் சார்ந்த வரிவிதிப்பு முறை குடிமக்கள் சார்ந்த வரி விதிப்பு முறையாக மாற்றப்பட்டுள்ளது

புதிய இந்தியாவை படைப்பதில் ஊடகங்கள் மாபெரும் ஆக்கப்பூர்வ பணியாற்ற வேண்டும்

இந்தியா புதிய உச்சத்தை அடைய ஒவ்வொரு குடிமகனும் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்

Posted On: 12 FEB 2020 9:15PM by PIB Chennai

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி புதுதில்லியில் இன்று (12.02.2020) நடத்திய, இந்தியா செயல்திட்டம் 2020 பற்றிய மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் பேசிய திரு மோடி, உலகின் இளைய நாடான இந்தியா,  புதிய தசாப்தத்திற்கான செயல் திட்டத்தை வகுத்து வரும் நிலையில், இளைய நாடான இந்தியா மெதுவாக பயணிக்க விரும்பவில்லை என்றார். 

இந்த உணர்வை அரசு முழுமையாக பின்பற்றி செயல்படுவதன் காரணமாக, கடந்த சில மாதங்களில் மட்டும் 100 முக்கிய முடிவுகளை மேற்கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

இதுபோன்ற மாற்றங்கள்  சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும், புதிய ஆற்றலைப் புகுத்தி, நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். 

தற்போது நாட்டில் உள்ள ஏழைகளும் தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, வறுமையை அகற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை பெற்றிருப்பதாக  குறிப்பிட்ட பிரதமர், இதேபோன்று விவசாயிகளும் தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் – சிறிய மாநகரங்கள் மற்றும் நகரங்கள் மீது கவனம் செலுத்துதல்:

“அடுத்த ஐந்தாண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக விரிவுபடுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.  “இந்த லட்சியத்தை அடைய இலக்கு நிர்ணயித்து செயல்படுவது சிறந்தது.  இந்த இலக்கை அடைவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், அடைய முடியாத இலக்கும் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைய, நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதோடு, நாட்டின் ஏற்றுமதி அளவை அதிகரிக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக  அவர் கூறினார். 

இதுபோன்ற முயற்சிகளுக்கு இடையே, பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு  என்ற அடிப்படையிலும், சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாகவும், இந்தியா பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முதன்முறையாக, நாட்டில் உள்ள சிறிய மாநகரங்களின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவற்றை வளர்ச்சிக்கான புதிய மையங்களாக உருவாக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

வரி விதிப்பு முறையை மேம்படுத்துதல்:

“வரி விதிப்பு முறையை மேம்படுத்த ஒவ்வொரு அரசும்  தயக்கம் காட்டி வந்தன.  இந்த நிலைமையில், பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.  தற்போது நாங்கள்தான் நடைமுறைகள் சார்ந்த வரி விதிப்பு முறையிலிருந்து குடிமக்கள் நலன் சார்ந்த வரி விதிப்பு முறைக்கு  மாறியிருக்கிறோம்.  வரி செலுத்துவோரின் விவரங்களை நடைமுறைப்படுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரவுள்ளது.  இந்த விவரப்பட்டியல், வரிசெலுத்துவோரின் உரிமைகளை தெளிவாக எடுத்துரைக்கும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். 

வரி ஏய்ப்பு செய்வோர் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோரிடம் காட்டப்படும் இரட்டை அணுகுமுறை  பற்றியும், ஒவ்வொரு இந்தியரும்  சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  நாட்டின் அனைத்து குடிமக்களும் பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதோடு தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார். 

வளமான இந்தியாவை உருவாக்குவதில் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு இந்தியரும் தங்களது கடமைகளை நிறைவேற்றினாலே, தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இருக்காது. இதன்மூலம் நாடு புதிய வலிமை மற்றும் புதிய சக்தியை பெறும். இதுவே இந்த தசாப்தத்தில்  இந்தியாவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்” என்றும் அவர் தெரிவித்தார்.

****************


(Release ID: 1603044) Visitor Counter : 176