பிரதமர் அலுவலகம்
சிறிய நகரங்களே புதிய இந்தியாவின் அடித்தளம். குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் பிரதமர் மாநிலங்களவையில் கருத்து
2024-ஆம் ஆண்டிற்குள் மேலும் 100 விமானநிலையங்கள் உருவாக்கப்படும் என்றார் பிரதமர்
प्रविष्टि तिथि:
06 FEB 2020 7:10PM by PIB Chennai
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். 5 ட்ரில்லியன் அளவிலான பொருளாதாரம் என்ற இலக்கு மிகவும் பேராவலான ஒன்றுதான். என்றாலும் நாம் பெரிதாகச் சிந்தித்து முன்னேறத்தான் வேண்டும் என்று பிரதமர் கூறினார். “இந்தியாவின் பொருளாதாரம் மிகுந்த வலுவோடு இருக்கிறது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரம் என்ற கனவை இந்தியா முழு வேகத்துடனும் முழுத்திறனுடனும் தொடர்ந்து வருகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரம் என்ற கனவை நிறைவேற்ற கிராம, நகர கட்டமைப்பு, சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள், நெசவாலைகள், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகிய துறைகளின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் துறைகள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முழக்கத்திற்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் வரிக்கான கட்டமைப்பு உள்ளிட்டு அனைத்துச் செயல்பாடுகளும் எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் நாட்டில் உற்பத்தி குறித்த புதியதொரு உத்வேகம் உருவாவதை உறுதிப்படுத்தும். வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இணைப்பு தொடர்பான கொள்கை அர்த்தமுள்ள பயன்களை தரத் தொடங்கியுள்ளன.
சிறிய நகரங்கள்தான் புதிய இந்தியாவின் அடித்தளம்
மிகுந்த அபிலாஷைகள் கொண்ட இந்த நாட்டின் இளைஞர்கள் சிறு நகரங்களில்தான் வசிக்கின்றனர். அவைதான் புதிய இந்தியாவின் அடித்தளமும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “ இன்று நாட்டில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சிறு நகரங்களில் இருந்துதான் நடந்து வருகின்றன. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய தொழில்முனைவுகளில் பாதி இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்துதான் செய்யப்பட்டுள்ளன. எனவேதான் நவீன கட்டமைப்புகளை துரிதமான வேகத்தில் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நெடுஞ்சாலை, ரயில் தொடர்பு ஆகியவையும் மிக வேகமாக மேம்பட்டு வருகின்றன” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டிற்குள் மேலும் 100 விமான நிலையங்கள்
உதான் திட்டத்தின்கீழ் 250வது வழித்தடம் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள 250 சிறிய நகரங்களுக்கு விமானப் பயணம் மூலமாகச் சென்றடைவதை இது எளிதாக ஆக்கியுள்ளது. “நாடு விடுதலை பெற்றதில் இருந்து 2014 வரை நாட்டில் செயல்திறன் மிக்க விமான நிலையங்கள் மொத்தம் 65 மட்டுமே இருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அது நூறுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டிற்குள் மேலும் 100 விமான நிலையங்களை, குறிப்பாக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் உருவாக்குவது என்பதுதான் நமது இலக்கு” என்றும் பிரதமர் கூறினார்.
*******
(रिलीज़ आईडी: 1602468)
आगंतुक पटल : 327