பிரதமர் அலுவலகம்

லக்னோவில் பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அது மகத்தான வாய்ப்பு என பிரதமர் கூறினார்
“டிஜிட்டல் பாதுகாப்பு மாற்றம்” நாளைய சவால்களை பிரதிபலிக்கிறது
பாதுகாப்புத் துறை உற்பத்தியை உள்நாட்டு மயமாக்கும் அடல் பிஹாரி வாஜ்பேயின் கனவு நனவாகிறது என்கிறார் பிரதமர்
புதிய இந்தியாவுக்கு புதிய இலக்குகள்: பிரதமர்

Posted On: 05 FEB 2020 5:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11 ஆவது பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.  இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின்  ராணுவக் கண்காட்சி, உலகளாவில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக நாடு உருவெடுப்பதை பிரதிபலிப்பதாகும்.  பாதுகாப்புக் கண்காட்சி 2020 இந்தியாவின் பெரிய பாதுகாப்பு கண்காட்சித் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன் உலகளவில் முன்னோடி பாதுகாப்புக் கண்காட்சியாகவும் திகழ்கிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 150 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

11 ஆவது பாதுகாப்பு கண்காட்சிக்கு இந்தியாவின் பிரதமராக மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அனைவரையும் வரவேற்பதில் இரட்டை மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  “இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் மக்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.  மேக் இன் இண்டியா திட்டம் இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளையும்  உருவாக்கும்.  வருங்காலத்தில் பாதுகாப்பு ஏற்றுமதியையும் இது ஊக்குவிக்கும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும்  அது மகத்தான வாய்ப்பு

இன்றைய பாதுகாப்புக் கண்காட்சி, இந்தியாவின் அகன்ற பரப்பு, துணிச்சல், இதன் பன்முகத்தன்மை, உலகில் விரிந்த பங்கேற்பு ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்கிறது.  பாதுகாப்புத் துறையில் வலுவான பங்குடன் இந்தியா முன்னேறிச் செல்கிறது என்பதற்கு இது ஆதாரமாகும்.  இந்தக் கண்காட்சி பாதுகாப்புத் தொடர்பான தொழிலை மட்டுமல்லாமல்  இந்தியாவின் மீதான உலகின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும்  அது மகத்தான வாய்ப்பாகும் என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.

“டிஜிட்டல் பாதுகாப்பு மாற்றம்” நாளைய சவால்களை பிரதிபலிக்கிறது

பாதுகாப்புக் கண்காட்சியின் துணைக் கருப்பொருளான “டிஜிட்டல் பாதுகாப்பு மாற்றம்” நாளைய சவால்களையும், கவலைகளையும் பிரதிபலிக்கிறது.    வாழ்க்கை தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிவரும் நிலையில், பாதுகாப்புக்குறித்த கவலைகள் மற்றும் சவால்கள் மேலும் தீவிரமாக மாறிவருகின்றன.   இது இன்றைக்கு மட்டுமல்லாமல் நமது வருங்காலத்திற்கும் முக்கியமாகும்.  உலகளவில் பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வருகின்றன.    இந்தியாவும், உலகத்திற்கு இணையாக வேகத்தை பராமரித்து வருகிறது.  ஏராளமான மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  அடுத்த ஐந்தாண்டுகளில் பாதுகாப்புத் துறையில் குறைந்தபட்சம் 25 செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை  உருவாக்குவதே நமது லட்சியமாகும். 

அடல் பிஹாரி வாஜ்பேயின் கனவு நனவாகிறது

மற்றொரு காரணத்திற்காகவும் லக்னோ பாதுகாப்புக் கண்காட்சி முக்கியமானதாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.  முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, உள்நாட்டு  பாதுகாப்பு உற்பத்தி குறித்து கனவு கண்டார்.  அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

“அவரது தொலைநோக்கைப் பின்பற்றி, பல்வேறு பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியை நாம் விரைவுப்படுத்தினோம்.  2014 ஆம் ஆண்டே 217 பாதுகாப்பு உரிமங்களை நாம் வழங்கினோம்.    அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது.  பீரங்கிகள், விமானந்தாங்கி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் என ஒவ்வொன்றையும் இந்தியா தற்போது உற்பத்தி செய்து வருகிறது.  உலகளவில் பாதுகாப்பு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கும் அதிகரித்துள்ளது.  கடந்த இரண்டாண்டுகளில் இந்தியா சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி  செய்துள்ளது.  தற்போது பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக  உயர்த்துவதே நமது  நோக்கமாகும்” என்று பிரதமர் கூறினார். 

பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது தேசத்தின் கொள்கையில் முக்கியமான பகுதி.

“கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பதை தேசத்தின் கொள்கையில் முக்கியப் பகுதியாக எங்கள் அரசு ஆக்கியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், உற்பத்திக்கும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தீர்க்கமான அணுகுமுறையுடன் அனைத்துத் தடைகளையும் நீக்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டுக்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் தயாரான சூழ்நிலைக்கு இது வழிவகுத்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார்.

பயன்பாட்டாளருக்கும், உற்பத்தியாளருக்கும் இடையே உடன்பாடு

பயன்பாட்டாளருக்கும், உற்பத்தியாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்படுத்துவதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற முடியும் என்று பிரதமர் கூறினார்.

“பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியை அரசு நிறுவனங்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக் கூடாது, தனியார் துறையுடன் சமமான பங்கேற்பும், கூட்டும் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

புதிய இந்தியாவுக்கு புதிய இலக்குகள்

இந்தியாவில் இரண்டு பெரிய பாதுகாப்பு தளவாடங்களுக்கான பாதைகள் அமைக்கப்பட இருப்பதாக பிரதமர் கூறினார். ஒன்று தமிழ்நாட்டிலும், மற்றொன்று உத்தரப்பிரதேசத்திலும் அமைக்கப்படும். உத்தரப்பிரதேச பாதுகாப்பு தளவாடப் பாதையில் லக்னோ தவிர அலிகார், ஆக்ரா, ஜான்சி, சித்திரகூடம், கான்பூர் ஆகிய இடங்களில் முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு தொழில் உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிப்பதற்கு புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

“அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உற்பத்தியில் 15,000-க்கும் அதிகமான குறு சிறு நடுத்தர தொழில்களைக் கொண்டு வருவது நமது இலக்காகும். ஐ-டெக்ஸ் எனப்படும் புதிய கண்டுபிடிப்பு ஆலோசனையை விரிவாக்கும் விதமாக பாதுகாப்புத் தொழில் துறையில் புதிதாக 200 நிறுவனங்களைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 புதிய தொழில்நுட்பங்களையும், பொருட்களையும் உருவாக்கவும் முயற்சி உள்ளது. பாதுகாப்புத் தொழில் துறைக்கு பொதுவான ஒரு தளத்தை நாட்டின் பெரிய தொழில்துறை அமைப்புகள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்புத் தொழில் துறையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில் அவை ஆதாயம் அடைய முடியும் என்று நான் கூறுவேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

******


(Release ID: 1602127) Visitor Counter : 230