நிதி அமைச்சகம்

உள்நாட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க, காலணிகள் மற்றும் பர்னிச்சர்களுக்கான சுங்கவரி உயர்த்தப்படும்


சிகரெட்டுகள் & இதர புகையிலைப் பொருட்களுக்கான சுங்கவரி உயர்த்தப்படும் ; பீடிகளுக்கான வரி விகிதத்தில் மாற்றமில்லை

Posted On: 01 FEB 2020 2:37PM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு காலணிகளுக்கான சுங்கவரியும், (25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக), பர்னிச்சர்களுக்கான சுங்கவரியும் (20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக) உயர்த்தப்படுகிறது.  நாடாளுமன்றத்தில் இன்று 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்த பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டின் சிறு, குறு  மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காலணிகள் மற்றும் பர்னிச்சர்களை தரமாக உற்பத்தி செய்யவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். குறைந்த விலையில் தரம் குறைவான இந்த பொருட்களின் இறக்குமதி காரணமாக, உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுவதாகக்  கூறினார்.

            சுகாதார சேவைகளுக்கு ஆதாரங்களை உருவாக்கும் நோக்கிலும், உள்நாட்டு மருத்துவ  உபகரணத் தொழிலுக்கு உத்வேகம் அளிக்கவும் ஏதுவாக மருத்துவ உபகரணத் தொழிலுக்கு மிகக் குறைந்த தீர்வை (5 சதவீத அளவில்) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் கூறினார்.

    நாட்டின் பெரும்பாலான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுத்தப்படுத்தப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்திற்கான தீர்வையை ரத்து செய்ய   அரசு திட்டமிட்டுள்ளது. ஜவுளி இழைகள் மற்றும் துணிநூல் தொழிலுக்கு இந்த அமிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

   இறக்குமதி செய்யப்படும் செய்தித்தாள்களுக்கான காகிதத்திற்கு அடிப்படை சுங்கவரியைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எடைகுறைவான படிம காகிதத்திற்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றார். 

   தேசிய பேரிடர் தீர்வை என்ற ரீதியில் சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கான கலால் தீர்வையை உயர்த்த மத்திய  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீடிகள் மீதான தீர்வை விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என்றார் திருமதி நிர்மலா சீதாராமன்.  

   எதிர்வரும் மாதங்களில் சுங்கவரி சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அரசின் கொள்கைக்கு ஏற்ப  நடைமுறைப்படுத்துவது  உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

     உள்நாட்டு தொழில்துறையைப் பாதிக்கும் வகையில் அளவுக்கு அதிகமான இறக்குமதி செய்யப்படும் போது தொழில் துறையைப் பாதுகாக்கும் வகையிலான வரி விகிதம் தொடர்பான விதிமுறைகளும் வலுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

-----



(Release ID: 1601559) Visitor Counter : 151