நிதி அமைச்சகம்

புதிய தனிநபர் வருமான வரி ஏற்பாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதாக இருக்கும்


புதிய வரி ஏற்பாடு வரிசெலுத்துவோரின் விருப்பத்தின் அடிப்படையில் அமைகிறது

புதிய வரிவிகிதங்களின் விளைவாக ஆண்டுக்கு ரூ. 40,000 கோடி வரையில் அரசு வருவாய் இழப்பு ஏற்படும்

Posted On: 01 FEB 2020 2:43PM by PIB Chennai

தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கவும், வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்தவும் மத்திய அரசின் பட்ஜெட் புதிய, எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி ஏற்பாட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிடித்தங்கள், விலக்குகள் ஆகியவற்றை தவிர்த்து விட்டு வருமான வரி செலுத்த முன்வரும் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதங்கள் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் 2020-21 நிதியாண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பொதுநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் “வரி செலுத்துவோரைப் பொறுத்தவரையில் புதிய வரி விகித ஏற்பாடு என்பதை அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது” என்று குறிப்பிட்டார். வருமான வரி சட்டத்தின் கீழ் தற்போது அதிகமான பிடித்தங்கள், விலக்குகள் ஆகியவற்றை பெற்றுவரும் எந்தவொரு தனிநபரும் விரும்பினால் அவற்றை பழைய வரி விகித ஏற்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய தனிநபர் வருமான வரி விகித ஏற்பாடு கீழ்க்கண்ட வரி விகிதத்தைக் கொண்டதாக இருக்கும் என முன்மொழியப்படுகிறது:

வரிவிதிப்பிற்குரிய வருமான அளவு

தற்போதுள்ள வரி விகிதங்கள்

புதிய வரிவிகிதங்கள்

0 - 2.5 லட்சம் வரை

விலக்களிக்கப்பட்டது

விலக்களிக்கப்பட்டது

2.5 – 5 லட்சம் வரை

5%

5%

5 – 7.5 லட்சம் வரை

20%

10%

7.5 – 10 லட்சம் வரை

20%

15%

10 – 12.5 லட்சம் வரை

30%

20%

12.5 -15 லட்சம் வரை

30%

25%

15 லட்சத்திற்கும் மேல்

30%

30%

 

வருமான வரி செலுத்தும் ஒருவர் அவர் தேர்வு செய்யும் விலக்குகள், பிடித்தங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப புதிய வரிவிகித முறையில் கணிசமான அளவிற்கு வரிப் பயன் அவருக்குக் கிடைக்கும். உதாரணமாக, ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர் எந்தவொரு பிடித்தத்தையும் தன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பழைய வரி ஏற்பாட்டில் ரூ. 2,73,000 வரியாக செலுத்த வேண்டியிருக்கும் எனில், புதிய வரி ஏற்பாட்டில் ரூ. 1,95,000 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் புதிய வரி ஏற்பாட்டில் அவரது வரிச்சுமையில் ரூ. 78,000 குறையும். பழைய வரிவிதிப்பு ஏற்பாட்டின் கீழ் வருமான வரி சட்டத்தின் பிரிவு VI-A –இன் பல்வேறு துணைப்பிரிவுகளின் கீழ் ரூ. 1.5 லட்சம் அளவிற்கு பிடித்தங்களை அவர் எடுத்துக் கொண்டாலும் கூட புதிய வரி விகித ஏற்பாட்டில் அவர் பயன்பெறுவார்.

இந்தப் புதிய வரிவிகித ஏற்பாடு வரி செலுத்துவோரின் விருப்பத்தைப் பொறுத்தது. நிதி மசோதாவில் இந்த விதிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்ட அறிவிக்கையின்படி வர்த்தக ரீதியான வருமானம் ஏதும் பெறாத தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முந்தைய ஆண்டிற்கு இந்த விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதர வகையினரைப் பொறுத்தவரையில் முந்தைய ஆண்டிற்கு எதை விருப்பமாகத் தேர்வு செய்கிறாரோ அதுவே முந்தைய ஆண்டிற்கும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துவதாக இருக்கும். இந்தச் சட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் இதர விதிமுறைகளுக்கு உகந்தவராக உள்ள எந்தவொரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த நபரைப் பொறுத்தவரையில் முந்தைய ஆண்டு அல்லது முந்தைய ஆண்டுகளுக்கான விருப்பம் மதிப்பற்றதாக ஆகிவிடும்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வருமான வரி விகிதங்கள் விளைவாக ஆண்டுக்கு ரூ. 40,000 கோடி வரி இழப்பு ஏற்படும். “வருமான வரிக்கான படிவங்களை நாங்கள் முன்னதாக நிரப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை  செய்துள்ளோம். எனவே புதிய வரி விகித ஏற்பாட்டை தேர்வு செய்யும் எந்தவொரு தனிநபரும் இது தொடர்பான நிபுணர்கள் (அ) எவரது உதவியுமின்றி தனது படிவத்தைப் பூர்த்தி செய்து வருமான வரியைக் கட்டிவிடலாம்.” என்றும் திருமதி. சீதாராமன் தெரிவித்தார். வருமான வரி முறையை எளிமைப்படுத்துவதற்கென கடந்த பல தசாப்தங்களாக வரிவசூல் ஏற்பாட்டில் இருந்து வரும் விலக்குகள், பிடித்தங்கள் அனைத்தையும் தான் மறுபரிசீலனை செய்ததாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

தற்போதுள்ள பல்வேறு தன்மை கொண்ட (நூற்றுக்கும் மேற்பட்ட) பிடித்தங்கள், சுமார் 70 வகையான விலக்குகள் ஆகியவற்றை அகற்றுவதென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் வரி ஏற்பாட்டை மேலும் எளிமைப்படுத்தவும், வரி விகிதத்தை மேலும் குறைக்கவும் மீதமுள்ள விலக்குகள், பிடித்தங்கள்  ஆகியவை குறித்து பரிசீலனை செய்து வரும் ஆண்டுகளில் ஒழுங்கமைக்கப்படும். 

 

**********



(Release ID: 1601556) Visitor Counter : 330