நிதி அமைச்சகம்

சுகாதாரத் துறைக்கு மத்திய பட்ஜெட் 2020-21-ல் ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2020 2:28PM by PIB Chennai

நாட்டின் குடிமக்களுக்கு ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், முழுமையான சுகாதார வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு 2020-21 பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.  பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு 6,400 கோடி ரூபாயும் இதில் அடங்கும்.

     நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தற்போது பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், 20,000-க்கும் அதிகமான மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு அடுத்த நிலை நகரங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் நிலையில் மேலும் அதிகமான மருத்துவமனைகளை இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் கூறினார். தனியார் பங்களிப்புடன் கூடிய முறையில் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், முதலில் விருப்பம் தெரிவித்துள்ள மாவட்டங்களில் இத்தகைய மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றார்.  இந்தப் பகுதிகளில் தற்போது ஆயுஷ்மான் பட்டியலில் இடம்பெற்ற மருத்துவமனைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மருத்துவமனைகள் பட்டியலில் சேர்க்கப்படுவதன் காரணமாக இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மருத்துவ சாதனங்கள் விற்பனையினால் கிடைக்கும் வரிகளைக் கொண்டு, இத்தகைய முக்கியமான சுகாதார கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

     சுகாதார அதிகாரிகளும், மருத்துவர்களும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட வியாதிகளை இனம் கண்டறிந்து இயந்திர மதிப்பீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் செயல்பட இயலும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். காசநோய் தோற்கும் தேசம் ஜெயிக்கும் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கான முயற்சிகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றுள்ளதாகக் கூறினார். 2024 ஆம் ஆண்டிற்குள் மலிவு விலை மருந்தகங்களை ஏனைய மாவட்டங்களுக்கு விரிவபுடுத்த இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

-----



(Release ID: 1601528) Visitor Counter : 161