பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் காந்திநகரில் 2020 ஜனவரி 28-ல் நடைபெறும் 3-வது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார்

தில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்பார்

Posted On: 26 JAN 2020 8:26PM by PIB Chennai

குஜராத்தின் காந்திநகரில் 2020 ஜனவரி 28-ல் அதாவது நாளை  நடைபெறும் 3-வது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார்.

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி, வர்த்தகம், தொழில், மதிப்புத் தொடர்ச்சி நிர்வாகம், இந்தப் பத்தாண்டுக்கான திட்டம் வகுத்தல் ஆகியவற்றில் வாய்ப்புகளையும், சாதனைகளையும் ஒட்டுமொத்தமாக பிரதமர் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் தற்போதைய மாநாடு மூன்றாவதாகும். ஒவ்வொரு பத்தாண்டுகள் இடைவெளியிலும் உருளைக்கிழங்குத் துறையில் சாதனைகளை ஏற்படுத்தப் பணியாற்றுவதும் வரவிருக்கும் பத்தாண்டுக்குத் திட்டமிடுவதும் அவசியமாகும்.  இந்தத் திசையில் 1999-லும், 2008-லும் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

துறை சார்ந்த அனைவரையும் ஒரே மேடைக்குக் கொண்டுவரும் வாய்ப்பை இந்த மாநாடு வழங்கும்.  இதனால், உருளைக்கிழங்கு தொடர்பான  அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்பட்டு, எதிர்காலத் திட்டங்கள் இதில் உருவாக்கப்படும். உருளைக்கிழங்கு ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளவர்களின் ஞானத்தையும், புதிய கண்டுபிடிப்பையும், நாட்டின் பலதரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் தனித்துவ நிகழ்வாகவும் இது இருக்கும்.

நாட்டில் முன்னிலை வகிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உருளைக்கிழங்கு சாகுபடி பரப்பு 19% அளவுக்கு அதிகரித்துள்ளது.  ஆனால், குஜராத்தில் இது 170%-மாக உள்ளது. (2006-07-ல் 49 ஆயிரத்து 700 ஹெக்டேரிலிருந்து 2017-18-ல் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது). ஹெக்டேருக்கு 30 டன்னுக்கும் அதிகம் என்ற உற்பத்தித் திறனில் குஜராத் கடந்த பத்தாண்டுகளாக நாட்டில் முதலாவது இடத்தைப் பெற்று வருகிறது. விவசாயத்திற்கு இம்மாநிலம் தெளிப்புநீர்ப்பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்துகிறது.

சிறந்த குளிர்பதன வசதிகளையும், தொடர்பு வசதிகளையும் பெற்றுள்ள    இம்மாநிலம், உருளைக்கிழங்கு பதனத் தொழிலில் நாட்டின் மிக முக்கிய மையமாக விளங்குகிறது. 

மேலும், பெரும்பாலான உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், நாட்டின் மிகமுக்கிய உருளைக்கிழங்கு சாகுபடி மையமாக இம்மாநிலம் உருவாகி வருகிறது.

இதன் காரணமாக மூன்றாவது உலக மாநாடு குஜராத்தில் நடைபெறவுள்ளது.

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, சிம்லாவில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், பெரு நாட்டின் லீமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டிற்கு இந்திய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.   

இந்த மாபெரும் நிகழ்வு மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும். (i) உருளைக்கிழங்கு மாநாடு (ii) வேளாண் கண்காட்சி (iii) உருளைக்கிழங்கு கள நாள்.

உருளைக்கிழங்கு மாநாடு 2020 ஜனவரி 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இது பத்து மையப் பொருட்களைக் கொண்டிருக்கும். இவற்றில் எட்டு மையப் பொருட்கள் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி சம்பந்தப்பட்டவையாகும். மற்ற இரண்டு மையப் பொருட்கள் உருளைக்கிழங்கு வர்த்தகம், மதிப்புத் தொடர்ச்சி நிர்வாகம், கொள்கை சார்ந்த விஷயங்கள்.

வேளாண் கண்காட்சி 2020 ஜனவரி 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறும். உருளைக்கிழங்கு அடிப்படையிலான தொழில்கள், வர்த்தகம், பதப்படுத்துதல், உருளைக்கிழங்கு உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் பொதுத்துறை-தனியார்துறை பங்களிப்பு  விவசாயிகள் தொடர்பான பொருட்கள் பற்றியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும்.

உருளைக்கிழங்கு களதினம் 2020 ஜனவரி 31 அன்று ஏற்பாடு செய்யப்படும். இதில் உருளைக்கிழங்கு சாகுபடி தொடர்பான எந்திரங்கள், உருளைக்கிழங்கு வகைகள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்படும்.

நடுதலுக்கான பொருள் பற்றாக்குறை, விநியோகத் தொடர் நடவடிக்கைகள், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், பதப்படுத்தலை விரிவுபடுத்துவதற்கான தேவைகள். ஏற்றுமதி, பலவகைப் பயன்பாடுகள், சான்றளிக்கப்பட்ட விதைகள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கும், தொலைதூர போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கும் தேவைப்படும் கொள்கை ஆதரவு என்பவை முக்கிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளப்படும். 

*******(Release ID: 1600673) Visitor Counter : 179