பிரதமர் அலுவலகம்

கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய சிறப்புமிக்க கட்டடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 11 JAN 2020 9:20PM by PIB Chennai

கொல்கத்தாவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நான்கு பாரம்பரியச் சிறப்புமிக்க கட்டடங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று (11.01.2020) நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கட்டடங்கள், பழைய கரன்ஸி கட்டடம், பெல்வடேர் இல்லம், மெட்கஃபே இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகும். 

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், ஏனெனில், இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய சிறப்புகளை பேணிக்காப்பதற்கான நாடுதழுவிய இயக்கத்தின் தொடக்கமாகும்.   அத்துடன் இதுபோன்ற சிறப்புமிக்க கட்டடங்களை புதுப்பித்து, புதிய பெயரிட்டு, புனரமைத்து, மறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் இந்நாள் உதாரணமாக திகழும். 

 

உலக பாரம்பரிய சுற்றுலா மையம்:

 

நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் சிறப்புமிக்க கட்டடங்களை பேணிக்காத்து நவீனப்படுத்தவே, இந்தியா எப்போதும் விரும்புவதாக திரு மோடி தெரிவித்தார்.  இந்த உணர்வுடன்தான் மத்திய அரசு இந்தியாவை, உலகின் மாபெரும் பாரம்பரிய சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

நாட்டில் உள்ள 5 வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  உலகில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகங்களுள் ஒன்றான கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலிருந்து இந்த பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

 

இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட ஏதுவாக, இந்தச் சிறப்புமிக்க கலாச்சார பாரம்பரிய மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள, இந்திய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக திரு மோடி தெரிவித்தார். 

 

கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு கட்டடங்களான - பழைய கரன்ஸி கட்டடம், பெல்வடேர் இல்லம், விக்டோரியா நினைவரங்கம் மற்றும்  மெட்கஃபே இல்லம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.   பெல்வடேர் இல்லத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சகத்தில், “நாணயங்கள் & வர்த்தக” அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  திரு மோடி தெரிவித்தார். 

 

புரட்சிகர இந்தியா (Biplabi Bharat)

 

“விக்டோரியா நினைவு அரங்கத்தில் உள்ள 5 காட்சிக் கூடங்களில் 3 நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தது சரியானதல்ல.  அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நாங்கள் முயற்சித்து வருகிறோம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறப்பை எடுத்துரைக்க இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த நான் விரும்புகிறேன்.  இந்த  இடத்திற்கு “புரட்சிகர இந்தியா” என்று பெயரிடலாம் என நான் கருதுகிறேன்.  இந்த அருங்காட்சியகத்தில் சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்த கோஷ், ராஸ் பிகாரி போஸ், பாகா ஜதின், பினாய், பாதல், தினேஷ் போன்ற தலைவர்களின் சிறப்புகளை இங்கு எடுத்துரைக்கலாம்” என்று பிரதமர் தெரிவித்தார். 

 

சுபாஷ் சந்திரபோஸ் நினைவக அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற பல்லாண்டு கால உணர்வுகளை மனதிற் கொண்டே, தில்லி செங்கோட்டையில்  அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்தமான்-நிகோபாரில் உள்ள ஒரு தீவிற்கும் அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். 

 

வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்றுத் தலைவர்களுக்கு மரியாதை

 

புதிய சகாப்தத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும்.

 

“திரு ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் 200-ஆவது பிறந்த நாள் விழாவை நாம் தற்போது கொண்டாடி வருகிறோம்.  அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், பிரசித்திபெற்ற சமூக சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான திரு ராஜாராம் மோகன்ராயின் 250-ஆவது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படவுள்ளது.  நாட்டின் தன்னம்பிக்கையை  மேம்படுத்தவும், இளைஞர்கள், மகளிர் மற்றும் பெண்குழந்தைகள்  நலனை ஊக்குவிக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் நினைவுகூர வேண்டியது அவசியம்.  அந்த வகையில் அவரது (ராஜாராம் மோகன்ராயின்) 250 ஆவது பிறந்த நாளை பிரமாண்ட விழாவாக நாம் கொண்டாட வேண்டும்”. 

 

இந்திய வரலாற்றை பேணிக்காத்தல்

 

இந்தியாவின் பாரம்பரியம், இந்தியாவின் தலைசிறந்த தலைவர்கள், இந்திய வரலாறு ஆகியவற்றை பேணிக்காப்பது, தேச வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் பிரதமர் தெரிவித்தார். 

 

“பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், பல்வேறு முக்கிய அம்சங்களைப் புறக்கணித்து விட்டது மிகவும் வருந்தத்தக்கது.  ‘இந்திய வரலாறு என்பது தேர்வுகளுக்காக நாம் படித்து மனப்பாடம் செய்வது அல்ல. அத்தகைய வரலாறு, வெளிநாட்டினர் எவ்வாறு நம்மீது படையெடுத்து வந்தனர், பிள்ளைகள் எப்படி அவர்களது தந்தைகளை கொல்ல முயற்சித்தனர் மற்றும் ஆட்சி அதிகாரத்திற்காக சகோதரர்கள் அவர்களுக்குள் எப்படி சண்டையிட்டுக் கொண்டனர் என்பதைப் பற்றிதான் கூறுகிறது.  இதுபோன்று சித்தரிக்கப்படும் வரலாறு, இந்திய குடிமக்கள், இந்திய மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதைப் பற்றிக்கூட தெரிவிக்காது.  இது அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காது’ என்று 1903-ல் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கூறிய ஒரு கருத்தை இங்கு சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன்”.  

 

“குருதேவ் கூறிய மற்றொரு கருத்து, ‘சூறாவளியின் வலிமை எதுவாக இருந்தாலும்,  மக்கள் எவ்வாறு அதனை எதிர்கொண்டு சமாளித்தனர்’ என்பதே ஆகும்”.

 

“நண்பர்களே, அந்த வரலாற்று ஆய்வாளர்கள், வெளியே இருந்து தான் சூறாவளியைக் கண்டிருப்பதாக, குருதேவின் கருத்து எடுத்துரைக்கிறது. 

சூறாவளியை சந்தித்தவர்களின் வீடுகளுக்குள் அவர்கள் சென்றதில்லை.  வெளியே இருந்து பார்த்தவர்களால், மக்கள் அதனை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதைப் பற்றி புரிந்துகொண்டிருக்க முடியாது”. 

 

“இதுபோன்ற பல அம்சங்களை அந்த வரலாற்று ஆய்வாளர்கள்

புறக்கணித்துவிட்டனர்” என்றும் அவர் தெரிவித்தார். 

 

“நிலையற்ற தன்மை நிலவிய அந்த காலக்கட்டத்திலும், போர்க் காலத்திலும் நாட்டின் மனசாட்சியை பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள், நமது தலைசிறந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசென்றனர்” 

 

“நமது கலை, நமது இலக்கியம், நமது மகான்கள், நமது துறவிகளால் தான் இதனை செயல்படுத்த முடிந்தது”  

 

இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்

 

“கலை மற்றும் இசையின் பல்வேறு வகைகளுடன் தொடர்புடைய சிறப்புமிக்க பாரம்பரியத்தை நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் காண முடிகிறது.  அதேபோன்று, அறிஞர்கள் மற்றும் புனிதர்களின் ஆதிக்கத்தையும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காணமுடிகிறது. இவர்களைப் போன்ற தலைசிறந்த தலைவர்கள், நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாபெரும் சமூக சீர்திருத்தங்களுக்கு தலைமையேற்று வழிநடத்தியுள்ளனர்.  அவர்கள் காட்டிய பாதை இன்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது.”

 

“பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளின் பாடல்கள் மற்றும் கருத்துக்கள் பக்தி இயக்கத்தை செழுமைப்படுத்தியது.  சந்த் கபீர், துளசிதாஸ் மற்றும் ஏராளமானோர் சமுதாயத்தை விழித்தெழச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தனர்”.

“மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சுவாமி விவேகானந்தர் கூறிய ‘இந்த நூற்றாண்டு உங்களுடையது, ஆனால், 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது’ என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அவரது தொலைநோக்கு  சிந்தனையை செயல்படுத்த நாம் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

***********



(Release ID: 1599264) Visitor Counter : 290