பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

வடகிழக்கு இயற்கை வாயு குழாய் பாதை கட்டமைப்பை உருவாக்க இந்திரதனுஷ் வாயு கட்டமைப்பு நிறுவனத்திற்கு நம்பகத்தன்மை இடைவெளி நிதியாக மூலதன மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JAN 2020 3:11PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கீழ்கண்ட ஒப்புதலை அளித்தது:

  • இந்திரதனுஷ் வாயு கட்டமைப்பு நிறுவனத்தின் வடகிழக்கு இயற்கை வாயு குழாய் பாதை கட்டமைப்புத் திட்டத்திற்கு, திட்ட மதிப்பீட்டு செலவினமான ரூ.9,265 கோடியில் (கட்டுமானத்தின் போது வட்டி உட்பட) 60 சதவீதம் அளவுக்கான நம்பகத்தன்மை இடைவெளி நிதி/ மூலதன மானியத்துடன் வழங்குதல்
  • இந்தத் திட்டத்திற்கான பெரிய நடவடிக்கைகளின் அடையாள அம்சங்களை பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகம் அடையாளம் கண்டுபிடித்து திட்டத்திற்கான முதலீடு மானியம் வழங்கும் நடவடிக்கையுடன் அதனை இணைக்கும்.
  • திட்ட செயலாக்கத்தைத் திறம்பட கண்காணிப்பதற்காக பெட்ரோலியம் இயற்கை வாயு அமைச்சகம், செலவினத் துறை, வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உரத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்டு குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு திட்ட அமலாக்கத்தின் முன்னேற்றத்தை அவ்வப்போது ஆய்வு செய்து அமலாக்கத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

திட்டத்திற்கான குழாய் பாதை மொத்த நீளம் 1,656 கிலோ மீட்டர், திட்டச் செலவினம் சுமார் ரூ.9,265 கோடி. திட்டத்தின்படி வடகிழக்கு மண்டலத்தில் உள்ள அருணாச்சலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் குழாய் பாதை கட்டமைப்பு உருவாக்கப்படும்.

தொழிலியல், வீட்டு உபயோக பிஎன்ஜி, போக்குவரத்து சிஎன்ஜி போன்ற பல வகை நுகர்வோருக்கு இயற்கை எரிவாயு வழங்க மூலதன மானியம் உதவும். திரவ எரிபொருளுக்கு மாற்றாக இது பெரிதும் பயன்படும். இந்த குழாய் பாதை கட்டமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு தடையற்ற இயற்கை வாயு வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்யும்.

இயற்கை வாயு கிடைப்பதால் இந்த மண்டலமெங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிலியல் வளர்ச்சி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மையான, பசுமை எரிபொருள் பயன்பாட்டினால் இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

 

சமூக பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்:

  • வடகிழக்கு மண்டலத்தில் உள்ள அருணாச்சலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தொழிலியல் சூழல் மேம்படும்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வாயு பயன்பாட்டினால் மண்ணெண்ணெய், விறகு ஆகியவற்றின் பயன்பாடு குறைந்து, மண்டலத்தின் சுற்றுச்சூழல் மேம்படும்.
  • இந்த மண்டலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.
  • துரப்பனம் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளைத் திட்டம் ஊக்குவிக்கும். இந்த மண்டலத்தின் இயற்கை ஆதாரங்களை விரைவாக பணமாக்கும் வகையில் மண்டல எரிவாயு ஆதாரங்கள் குழாய் பாதை கட்டமைப்புடன் இணைக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
  • போக்குவரத்து செலவினத்தைக் குறைப்பதற்காக எல்பிஜி வாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் ஆலைகள் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும். இந்த மண்டலத்தில் தடையற்ற எல்பிஜி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் சப்ளை உறுதி செய்யப்படும். இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

 

****

 

 

 

 


(Release ID: 1598815) Visitor Counter : 225