கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார அமைச்சகத்தின் ஓராண்டு சாதனைகள் – 2019
Posted On:
03 JAN 2020 1:01PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகம், நாட்டின் வளமிக்க கலை, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது. மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், கும்பமேளாவில் கலாச்சாரக் கும்பவிழா எனப்படும் 29 நாள் விழா, 10-வது தேசிய கலாச்சாரப் பெருவிழா, ஆசாத் ஹிந்த் எனப்படும் சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டதன் 76-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி, மகாராஷ்டிராவில் மாரக்கண்டேஸ்வரர் கோவிலின் கலைநயமிக்க கட்டடக்கலை மீட்புப்பணி, ஒரே பாரதம் – உன்னத பாரதம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இந்த ஆண்டு, கலாச்சார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் சில.
- பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, 29 நாள் கலாச்சாரக் கும்ப விழா:
பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, 29 நாள் கலாச்சாரக் கும்ப விழா 2019 ஜனவரி 10ஆம் தேதிமுதல் கொண்டாடப்பட்டது. நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும், செயல்நிலைக் கலை, கிராமியக் கலை, சாஸ்திரியக் கலை, கைவினைக் கலை போன்ற அதன் பல்வேறு பரிமாணங்களையும் காட்சிப்படுத்துவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாச்சாரக் கும்ப விழாவின் ஒரு பகுதியாக தேசிய சிற்ப விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரயாக்ராஜ் கும்பவிழாவின்போது பரமார்த்த நிகேதன் விழாவில் காந்தீய மீட்டெழுச்சி மாநாடு நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 காந்தியவாதிகளும், காந்திய அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
- பிரதமர் பெற்ற பரிசுகளின் ஏலம் 2 தொகுதிகளாக நடைபெற்றது:
கலாச்சார அமைச்சகத்தின் புதுதில்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் பிரதமர் பெற்ற பரிசுப் பொருட்களின் நேரடி ஏலம், 2019 ஜனவரி 28ல் நிறைவடைந்தது. இந்த ஏலத்திற்கு பின், எஞ்சி நின்ற பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம், 2019 ஜனவரி 29 முதல் 31-வரை நடைபெற்றது.
பிரதமர் பெற்ற பரிசுப் பொருட்களின் இரண்டாவது தொகுப்பு ஏலம், 2019 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 3ஆம் தேதிவரை நடைபெற்றது. நேரடி ஏலத்தின் முக்கிய அம்சமாக, கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட மரத்தினாலான இருசக்கர வாகனம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம் போனது. பிரதமர், ரயில் நிலைய நடைமேடையில் நிற்பது போன்ற சித்திரம், இதே தொகைக்கு ஏலம் போனது.
ஏலத்தில் கிடைத்த தொகை முழுவதும் நமாமி கங்கா திட்டத்திற்கு அளிக்கப்பட்டது.
- தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகம் நொய்டாவில் திறப்பு:
தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகம், நொய்டா நிறுவனங்கள் பகுதி, செக்டார் 62-ல் 2019 ஜனவரி 30ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வு உள்ளிட்ட நான்கு புதிய பாடங்களில் இந்த வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- கும்பமேளா குறித்த சிறப்பு தபால்தலை:
கும்பமேளா குறித்து சிறப்பு தபால்தலையை ரயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா, 2019 பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்டார். 5 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு முதல்நாள் தபால் உறையும் அன்று வெளியிடப்பட்டது.
- புதுதில்லியில் 20-வது வண்ணங்கள் பெருவிழா:
20-வது இந்திய வண்ணங்கள் திருவிழா எனப்படும் சர்வதேச இந்திய நாடக விழாவுக்கு தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
- 2017 சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்:
குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், 2019, பிப்ரவரி 6ஆம் தேதி, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2017ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார்.
- தாஜ் வழிப்பாதை பகுதியில், தாஜ் காட்சி தோட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா
தாஜ் வழிப்பாதை பகுதியில், தாஜ் காட்சி தோட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 2019 பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோட்டம், ஆக்ரா கோட்டைக்கும். தாஜ்மஹாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமையவுள்ளது.
மேலும், தாஜ்மஹாலின் கிழக்கு நுழைவுவாயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வையாளர் வசதி மைய வளாகத்தில், நிரந்தர புகைப்பட கண்காட்சி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
- வாரணாசி மான்-மஹாலில் மெய்நிகர் அனுபவ அருங்காட்சியகம்:
வாரணாசியில் தசாஸ்வமேத் துறைக்கு அருகே, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மான்-மஹாலில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள, மத்திய அரசு பாதுகாப்புக்கு உட்பட்ட நினைவுச் சின்னத்தில், மெய்நிகர் அனுபவ அருங்காட்சியகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, இதனை உருவாக்கியுள்ளது.
- புதுதில்லி செங்கோட்டை வளாகத்தில் “சுதந்திரத்தின் ஆர்வலர்கள்” அருங்காட்சியகம்:
தில்லி செங்கோட்டையில் சுதந்திரத்தின் ஆர்வலர்கள் என்ற அருங்காட்சியகம், 2019 மார்ச் 4ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம், இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது. தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, எவ்வகையிலும் பிரபலமாகாத அனைத்து தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
- தேசிய அறிவியல் அருங்காட்சிய சபை கூகுள் கலை மற்றும் கலாச்சார பிரிவுடன் ஒத்துழைப்பு:
தேசிய அறிவியல் அருங்காட்சியக சபை, கூகுள் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுடன் “ஒரு காலத்தில் ஒரு முயற்சி” என்ற ஆன்லைன் கண்காட்சியில் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி 2019 மார்ச் 7ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 23 நாடுகளைச் சேர்ந்த 110 பிரபல நிறுவனங்களின் தொகுப்புகள், கதைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
- இந்திய சுதந்திரப் போராட்ட (1857-1947) தியாகிகளின் அகராதி வெளியீடு:
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அகராதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் லோக் கல்யாண் மார்க் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2019 மார்ச் 7-ஆம் தேதி வெளியிட்டார். ஐந்து தொகுதிகளைக் கொண்ட இந்த அகராதியில், 1857ஆம் ஆண்டு இந்தியாவில் முதலாவது சுதந்திரப் போர் தொடங்கி, 1947-ல் இந்தியா விடுதலை பெற்றது வரை, விடுதலை இயக்கத்தில் உயிர்நீத்த தியாகிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கட்டடக் கலை நிறுவனம்:
நொய்டாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கட்டடக் கலை நிறுவனத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி 2919 மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன கட்டடக் கலை நிறுவனம் 25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 289 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையும், தீன்தயாள் அருங்காட்சியகமும் அன்றைய தினமே திறந்து வைக்கப்பட்டன.
- பல்ட்டால் என்ற இடத்தில் அமர்நாத் யாத்ரிகர்களுக்கான பண்பலை வானொலி டிரான்ஸ்மிட்டர் அமைப்பு:
அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில், பல்ட்டால் என்னுமிடத்தில் 103.7 மெகாஹெட்ஸ் அலைவரிசையில் பண்பலை வானொலி டிரான்ஸ்மிட்டரை கலாச்சார அமைச்சகத்தின் வேண்டுகோளின்பேரில், முதல்முறையாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. பல்ட்டால் அடிப்படை முகாமில் ஸ்டுடியோ வசதியும் உருவாக்கப்பட்டு, அமர்நாத் யாத்திரை நிகழ்ச்சிகள் இதில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த ஒலிபரப்புக்கான களஞ்சிய நிகழ்ச்சிகள், இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் கீழ் செயல்படும், தேசிய கலாச்சார காட்சிக் கேள்வி களஞ்சியத்திலிருந்து பெறப்படுகின்றன.
- இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூர், இந்தியாவின் 38வது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாகிறது:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தை உலகப் பாரம்பரிய இடங்களின் பட்டியலில் சேர்க்க, இந்தியா செய்திருந்த விண்ணப்பம், அஸர்பைஜான் நாட்டில் பாகூ என்ற இடத்தில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 43வது கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்த நகரம் 2019 ஜுலை 6-ஆம் தேதி, யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- மகாராஷ்ட்ரா மாநிலம், மார்க்கண்டேஸ்வர் கோவிலின் புனரமைப்புப் பணி:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள “விதர்பாவின் கஜுராஹோ” என்றழைக்கப்படும் மார்க்கண்டேஸ்வரர் கோவிலின் புனரமைப்புப் பணியை, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை 2019 ஜுலை மாதம் தொடங்கியது.
- புதுதில்லி சப்தர்ஜங் கல்லறையில் எல்ஈடி விளக்கு அலங்காரம்:
வரலாற்றுச் சிறப்புமிக்க சப்தர்ஜங் கல்லறையின் கட்டடக் கலை அம்சங்களான வளைவுகள், ஸ்தூபிகள் ஆகியவற்றின் அழகை இரவு நேரத்தில் மிளிரச் செய்வதற்காக 213 உயர்தொழில் நுட்ப எல்ஈடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் சாதாரண மின்சார விளக்குகளை விட, 62 சதவீதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்தக்கூடியவை.
- முதுநிலை / இளநிலை ஆய்வு படிப்பு உதவித் தொகைகள் திட்டம் நேபாளி மற்றும் சந்தாளி மொழிகளுக்கும் விரிவாக்கப்படுகிறது:
இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் வரும் மொழிகளில் 22 மொழிகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு முதுநிலை / இளநிலை ஆய்வு படிப்பு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் எஞ்சியுள்ள இரண்டு மொழிகளான நேபாளி மற்றும் சந்தாளி மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கும் இந்த உதவித்தொகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
- நடமாடும் நூலகத்தை தில்லி பொதுநூலகம் தொடங்கியுள்ளது:
தில்லி பொதுநூலகத்தின் ‘வீடுதோறும் புத்தகங்கள்’ என்ற திட்டத்தின் கீழ், நடமாடும் நூலகப் பேருந்துகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் உதவியுடன் இந்தப் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. தில்லி நகர குடிமக்களுக்கு குறிப்பாக, குடிசைப் பகுதிகள், குடியிருப்புகள், கிராமப்புற பகுதிகளுக்கு வீடுகளில் புத்தகங்களை வழங்கி படிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- மகாராஷ்ட்ர மாநிலம், புப்கோவன் என்ற இடத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அகழ்வாய்வுப்பணி:
சமீபத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மகாராஷ்ட்ரா மாநிலம், புப்கோவன் என்ற இடத்தில் நடத்திய அகழ்வாய்வில் விதர்பா பகுதியில் உலோக கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகள் 2018, டிசம்பர் முதல் 2019 மார்ச் வரை நடைபெற்றன.
- “மனுகாந்தியின் நாட்குறிப்பு” (1943-44) – மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி வெளியீடு:
“மனுகாந்தியின் நாட்குறிப்பு” (1943-44) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக அச்சு நிறுவனத்தின் உதவியுடன் இந்திய தேசிய ஆவணக் காப்பக நிறுவனத்தினால் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி புதுதில்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் நடைபெற்றது.
- 517 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய நினைவுச் சின்ன ஆணையத்தின், ஒருங்கிணைந்த தடையில்லாச் சான்று வழங்கும் ஒற்றைச்சாளர அமைப்பு:
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தி்னால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கான தடையில்லாச் சான்று வழங்குவதற்கென ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது புதிதாக 6 மாநிலங்களின் 517 உள்ளாட்சி அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- தாஜ்மஹால் வளாகத்தில் தண்ணீர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு, அவற்றை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் திறந்து வைத்தார்.
- தில்லியில் உள்ள பழைய கோட்டை எனப் பொருள்படும் புரானா கிலாவில் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட புராதன கலைப் பொருட்களின் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இதனை அமைத்துள்ளது.
- வரலாற்றுப் புகழ்பெற்ற தில்லியில் உள்ள குதுப்மினாரில் முதன்முறையாக எல்ஈடி விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளக்கு அலங்காரத்தை 2019, ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் தொடக்கி வைத்தார். விளக்கு அலங்காரத்திற்கு உயர்தொழில்நுட்ப 358 டப் எல்ஈடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- லே பகுதியில், முதலாவது நடமாடும் அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் இந்த நடமாடும் கண்காட்சியை 2019, செப்டம்பர் 5-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
- மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல், பிரிக்ஸ் நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பிரேஸில் நாட்டின் கியூரிடிபா நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்காலத்திய உலகப் பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
- மத்தியப்பிரதேசத்தில் 10-வது தேசிய கலாச்சாரப் பெருவிழாவை, 2019 அக்டோபர் 14ஆம் தேதி மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் முன்னிலையில் மகாராஷ்ட்ர ஆளுநர் திரு. லால்ஜி டான்டன் தொடங்கி வைத்தார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மையப் பொருளின் இந்தப் பெருவிழா நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
- “டிஜிட்டல் பாரதம், டிஜிட்டல் கலாச்சாரம்” என்ற நிகழ்ச்சியின்போது, கலாச்சார ஆதாரங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் வலைதளமும், யு-டியூப் அலைவரிசையும் தொடங்கப்பட்டன. தில்லியின் துவாரகா என்ற இடத்தில் உள்ள இந்த மையத்தின் தலைமையிடத்தில் 2019 அக்டோபர் 20ஆம் தேதி, இவை தொடங்கப்பட்டன.
- ஆஸாத் இந்தியா அரசு அமைந்ததன் 76-வது ஆண்டு நிகழ்ச்சி, தில்லி செங்கோட்டையில் 2019 அக்டோபர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- ஆந்திரப் பிரதேசத்தில் கொட்டிப்புரோலு என்ற இடத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் வரலாற்றின் முந்தைய காலத்தில் இந்த இடம் வர்த்தக மையமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், அந்த இடத்தில் பலமான செங்கல் சுற்றுச்சுவருடன் கூடிய மிகப்பெரிய குடியிருப்பு இருந்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன.
- திரைப்படத்துறையில் மும்பை நகரத்தையும், சிறப்பான சமையற்கலை துறையில் ஹைதராபாத் நகரத்தையும் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பின் உறுப்பினராக யுனெஸ்கோ தெரிவு செய்துள்ளது.
- ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச்சின்ன திருத்தச் சட்டம் 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா மக்களவையில் 2019, ஆகஸ்ட் 2ஆம் தேதியும், பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த நினைவிடத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரந்தர உறுப்பினராக இருப்பார் என்ற முந்தைய சட்டத்தின் பிரிவை நீக்கி, புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மற்றும் அவரது ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ் இயக்கம் குறித்த அனைத்து ஆவணங்களும் ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள 304 ஆவணங்கள் / கோப்புகளில் 303 ஏற்கனவே நேதாஜி வலைதளமான www.netajipapers.gov.in என்பதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ஜாலியன் வாலாபாக் மண்ணைக் கொண்ட கலசம் தேசிய அருங்காட்சியகத்தில் உயிர்நீத்த தியாகிகளின் மண் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கலசம் முதலில் பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டது. பின்னர், புதுதில்லி தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
- நாட்டின் வளமான பண்பாட்டு பாரம்பரியம் குறித்த தகவல்களை காட்சிப்படுத்தும் இந்திய கலாச்சார வலைதளத்தை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் தொடங்கி வைத்தார். மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகக் குழுவினர் இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் உள்ள காட்சிப் பொருட்களை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தயார் செய்துள்ளது.
- மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கான தேசியக் குழுவின் இரண்டாவது கூட்டம், குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தலைமையில் 2019 டிசம்பர் 19ஆம் தேதி, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், பிரபல காந்தியவாதிகள் மற்றும் போர்ச்சுக்கல் பிரதமர் மாண்புமிகு. அன்டோனியோ கோஸ்டா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
*******
(Release ID: 1598516)
Visitor Counter : 689