பிரதமர் அலுவலகம்

க்ரிஷி கர்மான் விருதுகளை பிரதமர் வழங்கினார்

பிரதமரின் கிசான் திட்டத்தின் 3-வது தவணைத் தொகையாக 6 கோடி பயனாளிகளுக்கு தலா ரூ.2000-ஐ பிரதமர் விடுவித்தார்

Posted On: 02 JAN 2020 5:23PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இன்று (02.01.2020) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னோடி விவசாயிகளுக்கு க்ரிஷி கர்மான் விருதுகளையும், மாநில அரசுகளுக்கான விருதுகளையும் வழங்கினார். பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2019 – மார்ச் 2020 வரையிலான காலத்திற்கான 3-வது தவணையாக ரூ.2000-ஐயும் அவர் விடுவித்தார். இதன் மூலம் சுமார் 6 கோடி பயனாளிகள் பயனடைவார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி கலன் மற்றும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளையும் பிரதமர் ஒப்படைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அடுத்த 10 ஆண்டு காலத்தின் தொடக்கமாக கருதப்படும் இந்தப் புத்தாண்டு தினத்தில், நமக்கு சோறு படைக்கும் நமது விவசாய சகோதர, சகோதரிகளை காண்பதில் மிகுந்த பெருமிதம் அடைவதாக கூறினார். 130 கோடி இந்திய மக்கள் சார்பில், அவர்களுக்காக உழைக்கும் விவசாயிகளுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

நாட்டில் உள்ள சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கிலேயே பிரதமரின் கிசான் திட்டத்திற்கான தவணைத் தொகையை வரவு வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கர்நாடகம் உற்று நோக்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 3-வது தவணையாக மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

 

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தை இதுவரை செயல்படுத்தாத மாநிலங்கள் அதனை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்ட பிரதமர், அந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளுக்கு உதவ முன் வருவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

 

நாட்டில் ஒருகாலத்தில், விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ரூபாயில், 15 காசுகள் மட்டுமே சம்பந்தப்பட்ட பயனாளிகளை சென்றடைந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். தற்போது, இடைத் தரகர்களின் தலையீடு இன்றி, ஏழை மக்களுக்கு உரிய பணம் சென்றடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பல ஆண்டுகாலமாக தடைபட்டு கிடந்த பாசனத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நமது விவசாயிகளின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி, பயிர்க் காப்பீடு, மண்வள சுகாதார அட்டைகள் மற்றும் 100% வேப்பஞ்சாறு கலந்த யூரியா உரங்கள் போன்றவை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இந்தியாவில் வாசனை திரவிய உற்பத்தியும், ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “இந்தியாவில் வாசனை திரவிய உற்பத்தி 2.5 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளது, எனவே ஏற்றுமதியும் ரூ.15 ஆயிரம் கோடியிலிருந்து சுமார் 19 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது”.

 

தென்னிந்தியா தோட்டக்கலை சாகுபடிக்கு மட்டுமின்றி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானிய சாகுபடியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

 

“இந்தியாவில் பருப்பு வகைகள் உற்பத்தியை ஊக்குவிக்க, உருவாக்கப்பட்டுள்ள விதை மையங்களில் 30-க்கும் மேற்பட்ட மையங்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில்தான் உள்ளன” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

மீன்வளத் துறையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்துறையை 3 கட்டங்களாக வலுப்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது என்றார்.

 

முதலாவதாக – மீனவர்களுக்கு நிதியுதவி அளித்து கிராம அளவில் மீன்பிடித் தொழிலை ஊக்குவித்தல்.

இரண்டாவதாக – நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன்பிடி படகுகளை நவீனமயமாக்குதல்.

மூன்றாவதாக – மீன் வர்த்தகம் சார்ந்த நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.

 

“மீனவர்கள் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரிய நதிகள் மற்றும் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு உதவும் வகையில், புதிய மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதிநவீன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.7.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு மீனவர்களின் படகுகள் நவீனப்படுத்தப்படுவதுடன், மீனவர்களின் பாதுகாப்புக்காக இஸ்ரோ உதவியுடன் நவீன  தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டு வருகிறது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஊட்டச்சத்து மிகுந்த தானிய வகைகள், தோட்டக்கலை மற்றும் இயற்கை வேளாண் பயிர்களை உற்பத்தி செய்வோருக்கும், க்ரிஷி கர்மான் விருது வழங்க புதிய பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இது போன்று செய்தால், இந்தத்  துறைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் மற்றும் மாநிலங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

******



(Release ID: 1598357) Visitor Counter : 196