வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி – கட்டுமானம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் பெருமளவிலான வேலைவாய்ப்பு


57 லட்சம் வீடுகள் கட்டும் பணி பல்வேறு நிலைகளில் உள்ளது – 30 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மொத்த முதலீடு ரூ.6 லட்சம் கோடி – மத்திய நிதியுதவி ரூ.1.5 லட்சம் கோடியில் – ரூ.60,000 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது
பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் இதுவரை 1.20 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

178 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்டும், 40 லட்சம் மெட்ரிக் டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Posted On: 27 DEC 2019 3:27PM by PIB Chennai

    மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர்  (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, நாட்டில் உள்ள நகர்ப்புறங்களில்  1.12 கோடி வீடுகள் தேவைப்படும் நிலையில், ஒரு கோடி வீடுகள் கட்ட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதில் 57 லட்சம் வீடுகளின் கட்டுமானப்பணி பல்வேறு நிலைகளில் உள்ள நிலையில், சுமார் 30 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முந்தைய ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில், குறைந்த எண்ணிக்கையிலான பணிகளை மேற்கொள்ள முந்தைய திட்டத்திற்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டம், 4.5 ஆண்டு காலத்திலேயே 10 மடங்கு அதிகப்பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.     பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்)  குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான உலகிலேயே மிகப் பெரியத் திட்டமாகும்.

 

  மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர்  திரு துர்கா சங்கர் மிஸ்ரா பேசுகையில், இந்தத் திட்டத்தின் கீழ், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 5.8 லட்சம் மூத்தகுடிமக்கள், 2 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள், 1.5 லட்சம் உள்நாட்டுத் தொழிலாளர்கள், 1.5 லட்சம் கைவினைஞர்கள், 0.63 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 770 திருநங்கைகள் மற்றும் 500 தொழு நோயாளிகள் இதுவரை பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.  மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வீட்டின் உரிமை பெண் தலைவரின் பெயர் அல்லது கூட்டுப் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. 

 

 பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டம்,     வீட்டுவசதித் துறையில், குறிப்பாக குறைந்த செலவிலான வீடு கட்டும் திட்டத்தில்  கணிசமான முதலீட்டை ஈர்த்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, அனுமதிக்கப்பட்ட வீடுகளுக்கான ரூ.5.70 லட்சம் கோடி முதலீட்டில், மத்திய உதவியாக  ரூ.1.6 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.  பல்வேறு அளவிலான இந்த வீடுகளுக்கு மத்திய அரசின் பங்காக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.1.00 லட்சம் முதல்  ரூ.2.67 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் ரூ.60,000  கோடி வரை மத்திய உதவியாக விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள்  நடைபெற்று வருவதுடன், 1.12 கோடி வீடுகளையும் கட்ட கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மொத்தப் பணிகளும் ரூ.7 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன.

 

     இத்திட்டம், அரசுகள் மற்றும் பொதுமக்களின் ஆற்றல்மிக்க ஒத்துழைப்பை மேம்படுத்தியது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப, மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பாக ரூ.1 - 2 லட்சம் வீதம் சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ.6 லட்சம் வரைகூட வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளும் தங்களது பங்களிப்பாக ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளனர்.

 

     கூடுதலாக தேவைப்படும் மத்திய நிதியுதவியை வழங்க ஏதுவாக, பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மேலாக, பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்ட நிதி ஆதாரங்களை ரூ.60,000 கோடி அளவிற்கு திரட்ட வகை செய்யப்பட்டு, இதுவரை ரூ.38,000 கோடி திரட்டப்பட்டு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அரசும், தேசிய வீட்டுவசதி வங்கியில் ரூ.10,000 கோடி தொடக்க முதலீடாகக் கொண்டு குறைந்த செலவிலான வீட்டுவசதி நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கான குறு நிதியுதவிக்காக, வங்கிகள் / நிதிநிறுவனங்களின் முன்னுரிமைத் திட்டங்களுக்கான கடன் பற்றாக்குறையை ஈடுகட்டும் விதமாக, இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

     வீட்டு வசதித்துறையில் முதல் முறையாக, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான மானிய உதவியுடன் கூடிய கடன் திட்டமும், 01 ஜனவரி, 2017 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் வரை உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த பயனாளிகள், தங்களது வீட்டுவசதி கடன்கள் மீது இத்திட்டத்தின் கீழ் வட்டிச்சலுகை கோர தகுதியுடையவர்கள் ஆவர்.  நடுத்தர வருவாய்ப் பிரிவினரால் கட்டப்படும் வீட்டின் பரப்பளவையும் அரசு 200 சதுர மீட்டராக அதிகரித்துள்ளது. இதன் விளைவு வங்கித்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், வீட்டு வசதித்துறைக்கான முதலீடு அதிகரித்துள்ளது. திட்டத்தை திறம்பட செயல்படுத்தி கோரிக்கைகளை குறைப்பதோடு, பொதுமக்கள் பங்களிப்பை உறுதி செய்ய ஏதுவாக, இணையதள அடிப்படையிலான உண்மை நிலை கண்காணிப்புக்கென “CLSS Awas Portal (CLAP)” ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது.

     இது தவிர, இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், பொருளாதாரத்தின் பிற துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழி வகுத்துள்ளன. எஃகு, செங்கற்சூளை, சிமெண்ட், வர்ணம், வன்பொருள், துப்புரவுக்கலன் போன்ற 250 உபதொழில்துறைகளில், தோராயமாக சுமார் 1.20 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

     இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு காரணமாக, ஒப்பளிக்கப்பட்ட வீடுகளைக் கட்டத் தேவையான சுமார் 568 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்டில்; 178 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட வீடுகளுக்கு சுமார் 130 லட்சம் டன்  இரும்பு தேவைப்படும் நிலையில், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 40 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரம், போக்குவரத்துத்துறை, திறன் மேம்பாடு, தோட்டக்கலை, நில சீரமைப்பு, போன்றவற்றிலும், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

     உலகளாவிய வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் – இந்தியா  வாயிலாக, பல்வேறு மாற்று மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.  இவை, இந்தியாவின் கட்டுமானத்  தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் ஊக்குவிக்குவிப்பதாக அமையும். நாட்டின் 6 மாநிலங்களில் 6 கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை புதுமை மற்றும் நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்தை பறைசாற்றும் ஆய்வுக் கூடமாக திகழ்வதுடன், விரைவான மற்றும் குறைந்த செலவிலான, நீடித்த பசுமை, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பேரழிவுகளைத் தாங்கக் கூடிய வீடுகளுக்கான தொழில்நுட்பத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கும். 

 

     தத்தெடுப்பு என்ற பெயரில், மாற்ற மேலாண்மைக்கான பிரச்சார இயக்கம் ஒன்றையும் வீட்டுவசதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.  புதிதாக கட்டிய வீட்டுக்கு குடிபெயர்வதால் ஏற்படும் வாழ்வியல் மாற்றத்தை பயனாளிகள் பின்பற்றுவதற்கு இந்தப் பிரச்சார இயக்கம் வழிவகை செய்யும்.  ஆயுஷ்மான் பாரத் மற்றும் உஜ்வாலா போன்ற அரசின் பிற திட்டங்களின்  பலனையும்,  பயனாளிகள் பெறுவதற்கும் இந்தப் பிரச்சார இயக்கம் உதவிகரமாக இருக்கும். இந்தப் பிரச்சார இயக்கம் தற்போது 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சென்றடைந்திருப்பதுடன், 2020 ஜனவரி 26-ம் தேதியன்று நிறைவடைய உள்ளது.

---


(Release ID: 1597808) Visitor Counter : 365