பிரதமர் அலுவலகம்
அசோசேம் அமைப்பின் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரை
5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமானதே என பிரதமர் தெரிவித்துள்ளார்
இந்த இலக்கை அடைய தேவையான வலுவான அடிப்படைப் பணிகளை கடந்த 5 ஆண்டுகளில் நாடு மேம்படுத்தியுள்ளது
இந்த முயற்சிக்கு உறுதுணையாக அடுத்த 5 ஆண்டுகளில் கட்டமைப்புப் பணிகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதுடன் கிராமப்புறங்களில் 25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்
பெரும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, வரிவிதிப்பு, தொழிலாளர் மற்றும் பிற சட்டங்கள் எளிமைப்படுத்தப்படும்
Posted On:
20 DEC 2019 2:13PM by PIB Chennai
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு எட்டக் கூடியதுதான் என பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று (20.12.2019) அசோசேம் அமைப்பின் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவது என்ற சிந்தனை உடனடியாக தோன்றியது அல்ல.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு தானாக வலிமையடைந்திருப்பதுடன், இது போன்ற மாபெரும் இலக்கை தானாக நிர்ணயித்திருப்பதோடு அதனை அடைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“5 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. எங்களது அரசு, அதனை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, பொருளாதாரத்தில் ஒழுங்கு முறைகளையும் கொண்டு வந்துள்ளது”.
“இந்தியாவின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களை நாங்கள் கொண்டு வந்ததன் மூலம், கட்டுக்கோப்பான முறையில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளின்படி செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. தொழில் துறையின் பல்லாண்டு கால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியிருப்பதுடன், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துள்ளோம்”.
“முறைப்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு வலுவான தூண்களைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். முறையான பொருளாதார வரம்பின் கீழ் மென்மேலும் பல துறைகளைக் கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம். அத்துடன், நமது பொருளாதாரத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைப்பதன் வாயிலாக, நவீனமயமாக்கல் பணிகளையும் நாங்கள் விரைவுபடுத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
“ஒரு புதிய கம்பெனியை பதிவு செய்ய முன்பு பல வாரங்கள் ஆன நிலையில், தற்போது, சில மணி நேரங்களிலேயே அது முடிக்கப்படுகிறது. எல்லைப் பகுதி வர்த்தகத்தை விரைவாக மேற்கொள்ள இயந்திரமயமாக்கல் உதவிகரமாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்புகளை திறம்பட இணைத்ததன் வாயிலாக, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சென்று திரும்பும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நவீன பொருளாதாரத்திற்கு உதாரணமாகும்.”
“தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதோடு அவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ளும் அரசை தற்போது நாம் பெற்றுள்ளோம், உங்களது ஆலோசனைகளையும் கேட்கும் அரசாகவும் உள்ளது.
இடைவிடாத முயற்சிகள் காரணமாக, தொழில் துவங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் நம் நாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
“தொழில் துவங்குவதற்கு உகந்த நாடுகள் என்பது, வெறும் 4 வார்த்தைகள்தான், ஆனால், இந்தப் பட்டியலில் முன்னேறுவதற்கு, அடிமட்ட அளவிலான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் மாற்றம் உள்ளிட்ட ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது”.
வரி செலுத்துவோருக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்புகளை தவிர்க்க, நாட்டில் ஆள் அறிமுகமற்ற வரி நிர்வாகத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.
“வரிவிதிப்பில் வெளிப்படைத்தன்மை, தொழில் திறன் மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக, முகத்தொடர்பு இல்லாத வரி நிர்வாகத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில் துறையினரின் பல்வேறு சுமைகளை குறைத்து, தொழிற்சாலைகள் அச்சமற்ற சூழலில் செயல்பட ஏதுவாக, பெரும் தொழில் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு சட்டப் பிரிவுகளை இந்த அரசு குற்றமற்றவையாக ஆக்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
“கம்பெனி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில், சிறு மாறுதல் ஏற்பட்டால் அது குற்றச் செயலாக கருதப்பட்டது. எங்களது அரசு தற்போது அந்த விதிமுறையை குற்றமற்றதாக மாற்றியுள்ளது. மேலும் பல பிரிவுகளையும் குற்றமற்ற செயலாக மாற்ற நாங்கள் முயற்சித்து வருவதையும் நீங்கள் அறிவீர்கள்”.
நாட்டில் தற்போதுள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கான வரி, இதற்கு முன்பு இல்லாத வகையில் மிக குறைவாக விதிக்கப்பட்டிருப்பது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“பெரும் தொழில் நிறுவனங்களுக்கான வரி தற்போது மிக குறைவாக உள்ளது. தொழில் துறையினரிடமிருந்து இந்த அளவுக்கு மிக குறைவான வரியை வசூலிக்கும் அரசு ஒன்று இருக்குமேயானால் அது, எங்களது அரசாகத்தான் இருக்க முடியும்”.
தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
வங்கித் துறை மேலும் வெளிப்படையானதாகவும், லாபகரமாகவும் செயல்பட ஏதுவாக மேற்கொள்ளப்படும் பெருமளவிலான சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, தற்போது 13 வங்கிகள் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதுடன், 6 வங்கிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலையை தாண்டியுள்ளன. வங்கி இணைப்புப் பணிகளையும் நாங்கள் விரைவுபடுத்தியிருக்கிறோம். தற்போது வங்கிகள், நாடு முழுவதும் கிளைகளை விரிவுபடுத்தி வருவதோடு, சர்வதேச அங்கீகாரம் பெறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன”.
இது போன்ற ஒட்டு மொத்த நற்பணிகள் காரணமாக, நமது பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைய ஏதுவாக, அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் 100 லட்சம் கோடி ரூபாயையும், கிராமப்புற கட்டமைப்பில் 25 லட்சம் கோடி ரூபாயையும் அரசு முதலீடு செய்யவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
***
(Release ID: 1597065)
Visitor Counter : 200