திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஒருமுகப்படுத்துதல், அளவை அதிகரித்தல், உள்ளக்கிடக்கைகளை நிறைவு செய்தல், மேம்பட்ட தரம் ஆகியவற்றுக்கான பல திட்டங்களை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் திறன் அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது
Posted On:
19 DEC 2019 12:35PM by PIB Chennai
நாட்டின் அனைத்து திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை மற்றும் சப்ளை இடைவெளியைக் களைதல், தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குதல், திறன்களை மேம்படுத்துதல், புதிய திறன்களை உருவாக்குதல், தற்போதுள்ள வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்படவுள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான புதுமை சிந்தனை ஆகியவற்றுக்கு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்திறன் அமைச்சகம் பொறுப்பேற்கிறது.
“பெரிய அளவிலும் மிக விரைவாகவும் உயர்தரத்துடனும் கூடிய திறன்கள் மூலம் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குதல் மற்றும் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சொத்துக்களையும், வேலைவாய்ப்பையும் தரக்கூடிய புதுமை அடிப்படையிலான தொழில்முனைவுத்திறனை மேம்படுத்துதல்” என்பதுவே அமைச்சகத்தின் தொலைநோக்கு ஆகும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சகம் 2019ல் ஒருமுகப்படுத்துதல், அளவை அதிகரித்தல், உள்ளக்கிடக்கைகளை நிறைவு செய்தல், மேம்பட்ட தரம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. இதனையடுத்து, திறன் பெறும் வாய்ப்புகள் அதிகரித்து நாட்டின் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து மக்களிடையே தொழில்முனைவுத்திறன் உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு :
ஒருமுகப்படுத்துதல் :
1) தேசிய திறன் பயிற்சி இயக்கம் : 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்திறன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் செயல்பாடு காரணமாக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்படி ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2) திறன் இந்தியா இணையதளம் : மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தனியார் பயிற்சி வழங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்த திறன் இந்தியா இணையதளம் உருவாக்கப்பட்டது. இது கொள்கை வரைவாளர்களுக்குத் தேவையான தரவுகளை வழங்கும். இந்திய குடிமக்களுக்கு திறன் வாய்ப்புகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் வழங்கவும் உதவும்.
அளவை அதிகரித்தல் :
3) தொழிலியல் பயிற்சி மையங்கள் :தொழிலியல் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 2014-ல் 11,964-ஆக இருந்தது. 2018-19ல் இது 14,939-ஆக உயர்ந்தது. இந்த நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை இதே காலத்தில் 16.9 லட்சத்திலிருந்து 23.08 லட்சமாக உயர்ந்தது.
4) பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம் : இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2016-19 ஆண்டுகளில் 54 சதவீதம் பயிற்சிகள் வேலைவாய்ப்பு இணைந்த பயிற்சி ஆக அமைக்கப்பட்டன.
5) பிரதமர் திறன் மையங்கள் : ஒதுக்கீடு செய்யப்பட்ட 812 திறன்மேம்பாட்டு மையங்களில் 681 அமைக்கப்பட்டுவிட்டன. இவற்றின் மூலம் 18 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கில் இதுவரை 9,89,936 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4,35,022 பேர் வெற்றிகரமாக வேலைகளில் சேர்ந்துள்ளனர்.
6) முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் (ஆர்பிஎல்) : பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின்படி செயல்படும் முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 26 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். நிறுவனங்களின் உதவியுடன் 11 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முறைப்படியான திறன் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
7) உச்சநீதிமன்றத்தில் ஆர்பிஎல் : உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் சமையல்காரர்கள், வாகன ஓட்டுனர்கள் ஆகியோருக்கான பயிற்சி டாட்டா ஸ்டிரைவ், மாருதி சுசுகி ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு நாள் பயிற்சியில் பாதுகாப்பு அம்சங்கள், மென் திறன்கள், சில நுட்ப அம்சங்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
8) இந்தியா போஸ்ட் செலுத்துகை வங்கியுடன் ஒப்பந்தம் : முந்தைய பயிற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டத்தின்கீழ் 1,70,000 கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பயிற்சித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா போஸ்ட் செலுத்துகை வங்கியுடன் செய்துகொள்ளப்பட்டது. இதுவரை 9,046 பேருக்கு இத்திட்டத்தின்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
9) மையங்களுக்கான சான்றிதழ் : ஸ்மார்ட் எனப்படும் மையங்களுக்கான சான்றிதழ் மற்றும் அங்கீகார இணையதளத்தின் மூலம் 11,977 மையங்களுக்கு சான்றிதழும் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
10) ஜம்மு, காஷ்மீரில் திறன் மேம்பாடு : ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களுக்கு நீண்டகாலத் திறன் பயிற்சி அளிக்க ஜம்முவில் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் செயல்படத்தொடங்கியுள்ளது. இதில், பயிற்சியாளர்களுக்கான, தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பின் ஆறாம் நிலை பயிற்சி, அளிக்கப்பட்டுள்ளது.
11) லே –யில் திறன் பயிற்சி : லே பகுதியில் தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் ஒரு விரிவாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
12) சங்கல்ப்: தேவைகளுக்கு ஏற்ற பயிற்சி அளிப்பதற்கான இந்தத் திட்டம் சார்ந்த, மண்டலப் பயிலரங்கு நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் 2019 செப்டம்பர் 3,4 தேதிகளில் நடைபெற்றது. இதனுடன் சேர்த்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிலரங்கும் நடைபெற்றது. ‘சங்கல்ப்’ திட்டத்தின் கீழ் தில்லி மற்றும் மகாராஷ்டிராவிலும் பயிலரங்குகள் நடைபெற்றன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் காணொலி மூலமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாநில திட்டங்களுக்கான வரைவுகள் சமர்ப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
13) ஸ்டிரைவ் : தொழிலியல் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் முதலாவது திட்டத்தில் 314 ஐடிஐ-க்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. செயல் திறன் அடிப்படையிலான மானிய ஒப்பந்தங்கள் 198 ஐடிஐ-களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதுவரை 31 மாநிலங்களுடன் செயல்திறன் அடிப்படை நிதி உதவி உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
14) சர்வதேச ஒத்துழைப்பு : சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரகம், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவையை நிறைவு செய்வதெற்கென சர்வதேச தரத்திலான பயிற்சிகளுக்கு இந்த நாடுகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
15) பிரதமர் – இளைஞர்கள் திட்டம் : இந்தத் திட்டத்தின்படி 300 ஐடிஐ-களுக்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பயிற்சித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் நோக்கம், தொழில்முனைவுத்திறனை மாற்று வாய்ப்பாக மேம்படுத்துவது ஆகும். திட்டத்தின்படி தொடக்க நிலைத் தொழில் முனைவு நடவடிக்கையின்போது பயிற்சி ஆதரவும் பின்னர் நீண்டகால நிலையான உதவியும் வழங்கப்படும்.
16) ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒத்துழைப்பு : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆறு பிரிவுகளில் பணிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் நடைபெற்றது. இவற்றில் 400 பேர் ஜியோ நிறுவனத்தின் பயிற்சியைத்தொடர்ந்த-வேலைவாய்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
17) சிஸ்கோ, கொஸ்ட் அலையன்ஸ், அக்ஸ்சென்ச்சர் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் : இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் பயிற்சி தலைமை இயக்குனரகத்துடன் கூட்டாக 6 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு திறன் சோதனைக்கூடங்களை அமைக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், ஐடிஐ பயிற்சி பெற்றவர்களுக்கு, டிஜிட்டல் எழுத்தறிவு, வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துதல், டேட்டா அனாலிடிக்ஸ் போன்ற உயர் தொழில்நுட்பத்திறன்களில் பயிற்சி வழங்கப்படும்.
உள்ளக்கிடக்கைகளை நிறைவு செய்தல் :
18) கவுசலாச்சார்ய விருதுகள் : எதிர்காலத்திற்கு உகந்த திறன்பெற்ற பணியாளர்களை உருவாக்குவதற்கு மிகச்சிறந்த பங்களித்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த 53 பயிற்சியாளர்களுக்கு 2019-க்கான கவுசலாச்சார்யா விருதுகள் வழங்கும் விழா 2019 செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்றது.
19) தேசிய தொழில்முனைவுத்திறன் விருதுகள் 2019 : நாட்டில் மிகச்சிறப்பான தொழில் முனைவுத்திறனை உருவாக்குவதில் உதவிய 30 இளம் தொழில்முனைவோர், ஆறு நிறுவனங்கள் / தனிநபர்கள் ஆகியோருக்கு 2019 தேசிய தொழில்முனைவுத்திறன் விருதுகளை அமைச்சகம் வழங்கியது.
20) திறன் சாத்தி ஆலோசனை திட்டம் : திறன் சாத்தி ஆலோசனை திட்டத்தையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது. திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு திறன் குறித்த ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன.
21) தொழில் கல்வி அளிப்பதற்கான கொள்கைத் திட்டம் : பள்ளிகளில் தொழிற்கல்வி அளிப்பதற்கும், இந்தக் கல்விக்கு பட்டப்படிப்பில் சேரும்போது இதரபாடங்கள் போன்ற தகுதி வழங்கவும் கொள்கை நடவடிக்கையை அமைச்சகம் தொடங்கியுள்ளது. தொழிற்கல்வி, பொதுக்கல்வி ஆகியவற்றிடையே மாறிக் கொள்வதற்கான வரைவு மதிப்பெண் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து இது இறுதியாக்கப்படும்.
22) அரசுப் பள்ளிகளில் 500 திறன் மையங்கள் : அரசுப் பள்ளிகளில் 500 திறன் மையங்களை அமைக்கும் திட்டத்தை அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. இவற்றின் மூலம் உயர் தரமுள்ள தொழில்நுட்ப அடிப்படையிலான திறன் பயிற்சிகளை பள்ளிகளில் வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
23) தொழில்பழகுத்திறன் இணைந்த பட்டப்படிப்பு : அமைச்சகம் மனிதவள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து ‘ஷிரேயாஸ்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி சில்லரை விற்பனை, ஊடகம், போக்குவரத்து ஆகிய தொழில்பழகுத்திறன் இணைந்த பட்டப்படிப்புகள் உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும். இதுவரை 25 கல்லூரிகளில் திட்டம் செயல்படுகிறது.
24) தொழில்பழகுத்திறன் இருவார விழா : அமைச்சகம் நாடெங்கும் தொழில்பழகுத்திறன் இருவார விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவற்றின்போது, தொழில் துறையினரும் மாநில அரசுகளும் நடப்பு நிதியாண்டில் 7 லட்சம் தொழில் பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்க உறுதியளித்துள்ளன.
25) இந்தியத் திறன்கள் நிறுவனம் : மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தை அமைக்கப்போவதாக அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் அளவிலும், தகுதியிலும் நாட்டில் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்று இருக்கும். இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்போது ஆண்டுக்கு 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் திறன் பெற்றதாக இருக்கும்.
26) பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் : 2019-20 நிதியாண்டில் வங்கிகளில், முன் அலுவலக நிர்வாகிகள் மற்றும் தொலை அழைப்பாளர்கள் பணிசார்ந்த 5,000 தொழில்பழகுனர்கள் நியமிப்பதற்கான ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கியுடன் அமைச்சகம் செய்து கொண்டுள்ளது.
27) திறன் வவுச்சர் : சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான திறன் வவுச்சர் திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்படி தொழில் முனைவோருக்கும் பயிற்சி பெறுவோருக்கும் அவர்கள் விரும்பிய பயிற்சித் திட்டங்களில் சேருவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.
28) உலக திறன்கள் சர்வதேச காஸான் 2019 : ரஷ்யாவில் உள்ள காஸான் என்ற இடத்தில் நடைபெற்ற உலக திறன்கள் சர்வதேச மாநாடு 2019ல் தேசியத் திறன்கள் போட்டியில் வெற்றி பெற்ற 22 பேர் மற்றும் நிபுணர்கள் இந்தியப் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற 63 நாடுகளில் இந்தியா 13வது இடத்தை பிடித்தது.
மேம்பட்ட தரம் :
29) 1961 தொழில்பழகுனர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் : இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்கள் வருமாறு :
- தொழில்பழகுனர் நியமனத்திற்கான உச்சவரம்பை 10 சதவீதத்தில் இருந்து 15-ஆக உயர்த்துவது
- 40 தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் தொழில்பழகுனர்களை நியமிக்க வேண்டியது கட்டாயம் என்ற வரம்பை 30 தொழிலாளர்கள் எனக் குறைத்தது
- முதலாமாண்டு தொழில்பழகுனர் பயிற்சி உதவித்தொகையை குறைந்தபட்ச ஊதியத்துடன் இணைக்காமல் குறிப்பிட்ட தொகையாக நிர்ணயிப்பது
- 2வது, 3வது ஆண்டு பயிற்சிகாலத்தில் உதவித் தொகையை 10 சதவீதம், 15 சதவீதம் உயர்த்துவது
- விரும்பிய கூடுதல் துறை பயிற்சிக்காலத்தை 6 மாதம் முதல் 36 மாதங்கள் வரை என மாற்றியமைப்பது
30) இரட்டைப் பயிற்சி முறை : ஐடிஐ-களின் இரட்டைப் பயிற்சி முறை திட்டத்தை குறைந்தது 1,000 ஐடிஐ-களில் செயல்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய தொழிற்பயிற்சி திட்டத்தின்கீழ்வரும் அனைத்து 138 பாடங்களையும் இரட்டை பயிற்சி முறையின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
31) புதிய யுகத் திறன்கள் : அமைச்சகம் 12 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் ஸ்மார்ட் ஹெல்த்கேர், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், 3டி பிரிண்டிங், ட்ரோன் பைலட், சூரிய சக்தி டெக்னீஷியன், ஜியோ டெக்னீஷியன் போன்ற புதிய யுக பாடங்களைத் தொடங்கியுள்ளது.
32) மாவட்டத் திறன் குழுக்கள் அமைத்தல் : ‘சங்கல்ப்’ திட்டத்தின் கீழ், முன்னேற்றத் திறன் பயிற்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திறன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
33) மகாத்மா காந்தி தேசிய ஃபெலோஷிப் : 6 மாநிலங்களைச் சேர்ந்த 75 மாவட்டங்களுக்கான மகாத்மாகாந்தி தேசிய ஃபெலோஷிப்புகளை அமைச்சகம் நிறுவியுள்ளது. இதன்படி 75 இளம் தொழில் நிபுணர்கள் தெரிவு செய்யப்பட்டு, பட்டியலில் உள்ள 75 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு, திறன் மேம்பாடு சார்ந்த திட்டமிடல், கண்காணிப்பு ஆகியவற்றில் மாவட்ட அதிகாரிகளுக்கு உதவுவார்கள்.
34) இந்தியத் திறன் மேம்பாட்டு பணிகள் (ஐஎஸ்டிஎஸ்) : அமைச்சகத்தின் அறிவிக்கை மூலம் புதிய நிர்வாக பணிப்பிரிவாக இந்தியத் திறன் மேம்பாட்டு பணிகள் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் “ஏ” குழு பணிகளின் ஒரு பகுதியாக இது அமையும். இந்த பணிப்பிரிவின் முதலாவது தொகுதி அதிகாரிகளுக்கு மைசூரில் உள்ள நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் 2019 செப்டம்பர் 9ஆம் தேதி பயிற்சி தொடங்கியது. இந்தப் புதிய பணிப்பிரிவில் அகில இந்திய அளவில் 263 பணியிடங்கள் உள்ளன.
35) சமுதாய பயிற்சியாளர்கள் (பிசினஸ் ஷகி) : சமுதாய பயிற்சியாளர்கள் மூலம் மகளிர் தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிப்பதற்கான ‘பிசினஸ் ஷகி’ திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. பெண்களிடையே தொழில்முனைவு மேம்பாட்டுக்கான, சமுதாய அடிப்படை, வர்த்தக ஆலோசகர்களாக பிசினஸ் ஷகிக்கள் செயல்படுவார்கள்.
36) பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி திட்டம் : பயிற்சியாளர்களுக்கான 5 நாள் பயிற்சி திட்டம் நாடெங்கிலும் உள்ள ஐடிஐ-ச் சேர்ந்த 4,068 ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
37) ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் அமைப்புக்கான எம்ஐஎஸ் இணையதளம் : ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் அமைப்புக்கான மேலாண்மைத் தகவல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் அமைப்பைத் தொடங்கவும் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
38) இ திறன் இந்தியா மேடை : இந்திய இளைஞர்களுக்கு மின்னணு திறன் வாய்ப்புக்களை அளிப்பதற்கான பன்மொழி இ-கற்றல் தொகுப்பு இணையதளத்தை தேசிய திறன்மேம்பாட்டு இயக்கம் உருவாக்கி உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மூலமாக இந்திய இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் திறன் பயிற்சிகள் வழங்க இது உதவுகிறது. இதன் மூலம் இந்தியாவை உலகின் திறன் தலைநகரமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயம், சுகாதாரப் பராமரிப்பு, தொலைத்தொடர்பு, வேளாண்மை, சில்லரை விற்பனை, தரவு அறிவியல், செயற்கை அறிவு போன்ற உயர் தரமுள்ள பயிற்சிகள் இந்த வலைதளத்தின் மூலம் வழங்கப்படும்.
******
(Release ID: 1596976)
Visitor Counter : 882