பிரதமர் அலுவலகம்

ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு மாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 06 DEC 2019 12:13PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு குறித்த 17வது மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறந்த எதிர்காலத்திற்கு உரையாடல்கள் அடித்தளம் அமைப்பதாக அவர் கூறினார். “அனைவருடம் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்” என்ற மந்திரத்தின் அடிப்படையில் தற்போதைய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அரசு உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

அரசு எடுத்த பல்வேறு முடிவுகளை பட்டியலிட்ட பிரதமர், அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ அகற்றியது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறினார். முஸ்லீம் பெண்கள் தற்போது முத்தலாக் நடைமுறையிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்றும், சட்டவிரோத குடியிருப்புகள் பற்றிய முடிவினால் 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த எதிர்காலத்திற்கும் புதிய இந்தியாவுக்கும் இத்தகைய மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

மருத்துவம், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிக் குறியீடுகளில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் மீது அரசு இப்போது முக்கிய கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். 112 மாவட்டங்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இவற்றின் மேம்பாடு மற்றும் ஆளுகை குறித்த அனைத்து அம்சங்களுக்கும் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த மாவட்டங்களில், ஊட்டச்சத்து குறைவு, வங்கி வசதிகள், காப்பீடு, மின்சாரம் போன்ற அனைத்து அம்சங்களும் அப்போதைக்கப்போது கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த 112 மாவட்டங்களின் சிறந்த எதிர்காலம், நாட்டிற்கு சிறந்த எதிர்காலமாக அமையும் என்றார் அவர்.

ஜல் ஜீவன் இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதில் அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்த இலக்கை அடைய வசதி ஏற்படுத்தி தருவோர், வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோர், மேம்படுத்துவோர் என்ற வகையில் அரசு உழைத்து வருவதாகக் கூறினார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வங்கிகள் இணைப்பு, தொழிலாளர் சட்டங்களை நெறிப்படுத்தியது, வங்கிகளுக்கு மறு மூலதனம் அளித்தது, கம்பெனி வரிகளைக் குறைத்தது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் கூறினார். வர்த்தகம் புரிதலில் எளிமை தரவரிசையில் இந்தியா மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா தனது தரவரிசையில் 79 புள்ளிகள் முன்னேறியிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார். நின்றுபோய் உள்ள வீட்டுவசதித் திட்டங்களுக்கு உதவ உருவாக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி சிறப்பு நிதியம் பற்றி அவர் விவரித்தார். மேலும் ரூ.100 லட்சம் கோடி மதிப்புள்ள அடிப்படை வசதி திட்டங்களை அரசு தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பயணம் மற்றும் சுற்றுலா போட்டியிடும் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தில் இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரிப்பதால் வேலைவாய்ப்புகள், குறிப்பாக ஏழை மக்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகும் என்று அவர் கூறினார்.

மனித வளத்தை மேம்படுத்தி, சீராக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் பேசினார். முடிவுகள் அடிப்படையிலான, பலன்களை எதிர்நோக்கும் அணுகுமுறையுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய, முக்கிய கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். “130 கோடி இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கென சரியான நோக்கம், தலைசிறந்த தொழில்நுட்பம், திறன்பட்ட அமலாக்கம்” என்பதுதான் அரசின் திட்டம் என்று பிரதமர் கூறினார்.



(Release ID: 1595257) Visitor Counter : 111