பிரதமர் அலுவலகம்

11 ஆவது பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர், பிரேசில் அதிபர் திரு ஜேர் மெஸ்ஸியாஸ் பொல்சனாரோவுடன் சந்திப்பு

Posted On: 14 NOV 2019 5:24AM by PIB Chennai

பிரேசிலியாவில் நடைபெறும் 11 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரேசில் அதிபர் திரு ஜேர் மெஸ்ஸியாஸ் பொல்சனாரோவை, பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 13 ஆம் தேதி சந்தித்தார்.

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரேசில் அதிபருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.  பிரேசில் அதிபர் இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.  

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  வர்த்தகம் தொடர்பான விசயங்கள் குறித்து விவாதிக்க தாம் ஆர்வமுடன் உள்ளதாக பிரதமர் திரு மோடி கூறினார்.  விவசாய உபகரணங்கள், கால்நடை பாதுகாப்பு, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், உயிரி எரிபொருட்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பிரேசிலிடம் இருந்து முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

பிரேசில் அதிபர் தமது தயார் நிலை குறித்து  தெரிவித்ததுடன் பெரும் வர்த்தகக்குழு தம்முடன் இந்தியா வரும் என்று பிரதமரிடம் கூறினார்.  விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.  இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு அனுமதி அளிக்கும் பிரேசில் அதிபரின் முடிவை பிரதமர் வரவேற்றார்.

*****************

 

 



(Release ID: 1591630) Visitor Counter : 130