பிரதமர் அலுவலகம்

பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சிமாநாட்டின் நிகழ்வுக்கு இடையே ரஷ்ய அதிபர் திரு விளாடிமீர் புதினுடன், பிரதமர் சந்திப்பு

Posted On: 14 NOV 2019 5:25AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமீர் புதினை பிரேசில் தலைநகர் பிரேசில்லியாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நவம்பர் 13 2019 அன்று சந்தித்தார். இந்த ஆண்டில் இரு தலைவர்களும் சந்திப்பது இது நான்காவது முறையாகும்.

     ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு பிரதமர் வருகை புரிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளின் நல்லுறவில் மேம்பட்டுவரும் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஆகியோர் ரஷ்யாவுக்கு வருகை புரிந்ததையும் அப்போது பிரதமர் முக்கியமாக எடுத்துரைத்தார்.

     2025-ம் ஆண்டை இலக்காக கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தக அளவை ஏற்கனவே எட்டியிருப்பது குறித்து இரு தலைவர்களும் திருப்தியடைந்தனர். மண்டல அளவிலான வர்த்தகத் தடைகளை அகற்றுவது குறித்து முதலாவது இருதரப்பு மண்டல அமைப்பின் கூட்டத்தை ரஷ்யா – இந்தியா அளவில் அடுத்த ஆண்டு நடத்துவது குறித்து இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

     எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை இரு தலைவர்களும் கவனத்தில் கொண்டனர். ஆர்டிக் பகுதியில் இயற்கை எரிவாயு திறன் குறித்து எடுத்துரைத்த அதிபர் திரு புதின் அப்பகுதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.

     உள்கட்டமைப்பில் முக்கியமாக ரயில்வேயில், நாக்பூர் – செகந்திராபாத் பிரிவு ரயில் பாதையில் வேகத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பாதுகாப்புப்பிரிவு மற்றும் சிவில் அணுசக்தித் துறையில் ஒத்துழைத்து வருவது குறித்து இருதலைவர்களும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர். இதர நாடுகளுடனும் சிவில், அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அவர்கள் வரவேற்றனர்.

     சர்வதேசப் பிரச்சினைகளில் இருதரப்பினரும் பொதுப்படையான நிலையை பகிர்ந்துகொள்வது குறித்தும், எதிர்காலத்திலும் நெருக்கமான ஆலோசனையைத் தொடர்வது குறித்தும் இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

     ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாஸ்கோ வருமாறு அதிபர் திரு புதின்  விடுத்த அழைப்பை பிரதமர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

                               

                                                                                             •••••



(Release ID: 1591627) Visitor Counter : 140