பிரதமர் அலுவலகம்

ஜெர்மனி பிரதமரின் இந்தியப் பயணத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

Posted On: 01 NOV 2019 3:20PM by PIB Chennai

1. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், அரசுகளுக்கு இடையேயான ஆலோசனையின் (ஐஜிசி) 5ம் சுற்றுக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2019 அக்டோபர் 31ம் தேதிநவம்பர் 1ம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தந்தார்பிரதமர் மெர்கலுடன் வெளியுறவு, அறிவியல் மற்றும் கல்வி, உணவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்களும், அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளும் உடன் வந்தனர். மேலும், ஜெர்மனி நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்ட தொழில்துறை பிரதிநிதிகள் குழுவினரும் பிரதமர் மெர்கலுடன் வந்தனர். இப்பயணத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை பிரதமர் மெர்கல் சந்தித்து பேசினார்.

2. இந்தியா-ஜெர்மனியின் ராஜதந்திர ஒத்துழைப்பு என்பது ஜனநாயகம், சுதந்திரமான, நியாயமான வர்த்தகம் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட சர்வதேச ஒழுங்கு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என பிரதமர் மோடியும், பிரதமர் மெர்கலும் வலியுறுத்தினர். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல் மயமாக்கல், பருவநிலை மாற்றத்தில் ஒத்துழைப்புடன் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல், திறன்மிக்க தொழிலாளர்களை சட்ட ரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இருநாட்டு மக்களிடையே ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குதல், பலதரப்பு நிறுவனங்களை வலுப்படுத்தி, புதுப்பிப்பதன் மூலம் நம்பகமான சர்வதேச ஒழுங்கிற்கான பங்களிப்பை அளிப்பது உள்ளிட்டவை ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.

I. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

3. செயற்கை நுண்ணறிவு வரும் காலங்களில் உலக மக்களின் வாழ்விலும், பணியிலும் அடிப்படை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட விரும்புகின்றன.

4. அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை முன்னோக்கி, வழக்கமான தொடர்புகள் மற்றும் ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்துவதற்கு டிஜிட்டல் கூட்டாண்மையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்புகளும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. சமூக நலன்களுக்காக வன்பொருள் மற்றும் மென்பொருளின் ஒருங்கிணைப்பை அதிகரித்து, இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை மேம்படுத்தி, இரு தரப்பிலும் நன்மைகளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவும், ஜெர்மனியும் கூட்டு ஒத்துழைப்பை கட்டமைக்க விரும்புகின்றன.

5. இரு தரப்பும் செயற்கை நுண்ணறிவில் தங்கள் நாட்டிற்கான யுக்திகளை வகுத்து, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புடன் சமூகத்தின் மீதான அதன் திறனை அங்கீகரித்துள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஒப்பீட்டு நன்மைகளைக் கட்டமைக்கவும் சுகாதாரம், இடம் பெயர்தல், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை போன்ற கவனிக்கத்தக்க துறைகள் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு செயற்கை நுண்ணறிவில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம், ஜெர்மனியும், இந்தியாவும் மேலும் ஒத்துழைப்பில் ஈடுபட விரும்புகின்றன. ஜெர்மனியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும் இணைந்து, பரஸ்பர நலன்களை அடையாளம் காணும் விதமாக, இந்தோ-ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலமாக வரும் 2020ல் பெர்லினில் இருதரப்பு பயிற்சி பட்டறையை நடத்த முடிவு செய்துள்ளன.

6. சர்வதேச ஒத்துழைப்பானது, நீண்ட ஆராய்ச்சி திட்டங்களின் முக்கிய அம்சமாக இருப்பதை உணர்ந்து, ஜெர்மனியும், இந்தியாவும் இணைந்து செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்து கூட்டு இருதரப்பு அல்லது பலதரப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இதோடு, உலகளாவிய மதிப்பு சங்கலிகளின் ஒரு பகுதியாக இருக்கும் ஜெர்மனி மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும் இதில் அடங்கும். இந்தியா, ஜெர்மனி இணைந்து சுகாதார துறையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை இரு தரப்புகளும் வலியுறுத்துகின்றன. இதற்காக 2019 செப்டம்பரில் பெர்லினில் முதல் பங்குதாரர் சந்திப்பை நடத்தவும், இதே போன்ற மற்றொரு கூட்டத்தை இந்தியாவில் நடத்தவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

7. வேளாண்மை துறையில் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். இது, துல்லியமான வேளாண்மை செயல்திறனை அதிகரிப்பது, வளங்களை சேமிப்பது, உணவு இழப்புகள் மற்றும் கழிவுகளை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். மேலும், இரு நாட்டு வேளாண்மை அமைச்சகங்களும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான திறந்த பயிற்சி தரவு தொகுப்பை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளன. இது சட்ட சிக்கல்களையும் தீர்க்கக் கூடியதாகும். இந்தியாவில் விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றில் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்ய, 2019 செப்டம்பர் 30ம் தேதி நிதி ஆயோக் மற்றும் ஜெர்மனி நிறுவனங்கள் இடையேயான வட்டமேசை கூட்டத்தை இரு தரப்பும் வரவேற்றன. பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் அதன் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை கூட்டு பயிற்சி பட்டறை மூலம் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக் கொண்டுள்ளன.

8. ஜெர்மனியும், இந்தியாவும் டிஜிட்டல் துறையில் வணிக ஒத்துழைப்பை வளர்க்க விரும்புகின்றன. எனவே, ஜெர்மனி மற்றும் இந்திய டிஜிட்டல் நிறுவனங்கள், ஒருவருக்கொருவர் நாடுகளில் சந்தை வாய்ப்பு மற்றும் இருதரப்பு முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் அவற்றின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழலுக்கு இடையே அதிக பிணைப்பை உருவாக்குவதற்கும் இணைந்து செயல்படும்.

 

9. டிஜிட்டல் மயமாக்கல்அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய துறைகளில் ஜெர்மனியும் இந்தியாவும் 2017 மே 30ம் தேதி பெர்லினில் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை நினைவுகூர்ந்து, இந்த டிஜிட்டல் உரையாடலை விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளன. இரு தரப்பினரும் கூட்டாக பரஸ்பர ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம் காணவும், பரிசீலிக்கப்பட வேண்டிய எதிர்கால கொள்கை முன்முயற்சிகளுக்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியடிஜிட்டல் நிபுணர் குழுஒன்றை அமைப்பதற்கான ஜெர்மனி மற்றும் இந்திய வணிகத்தின் முயற்சியை இரு தரப்பும் வரவேற்றன.

10. ஜெர்மனியின் இன்டஸ்ட்ரீ 4.0 பிளாட்பார்ம் மற்றும் வரவிருக்கும் சிஐஐ ஸ்மார்ட் உற்பத்தி பிளாட்பார்ம் ஆகியவற்றுக்கு இடையே இணைப்பை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு வழங்கவும், தரநிலைப்படுத்துதல், நெட்வொர்க் அமைப்புகளில் ஐடி பாதுகாப்பு, டெஸ்ட்பெட்ஸ் மற்றும் பயன்பாட்டு அமைப்புகள், வணிக மாதிரிகள், பி2பி பிளாட்பார்ம்கள் மற்றும் இன்டஸ்ட்ரீ 4.0வுக்கான எதிர்கால டிஜிட்டல் சூழல் அமைப்புகளை வடிவமைக்கும் தலைப்புகள்ஆகிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. ஜெர்மனியும், இந்தியாவும் இரு நாடுகளிலும் ஸ்டார்ட் அப் அமைப்புகளின் விரைவான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும், இதற்கான கருத்துக்களையும், திட்டங்களையும் தொழில்முனைவோர் பரிமாறிக்கொள்ளவும் வரவேற்பதை  அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஸ்டார்ட் அப்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் உணர்ந்துள்ளனர். இதுதொடர்பாக, ஸ்டார்ட் அப்களுக்கான துவக்க முகாம்களை நடத்துவதற்கான திட்டத்தை அவர்கள் வரவேற்றனர். இது டிஜிட்டல் பிரிவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், தொழில்முனைவோரை வளர்ப்பதற்குமான சூழலமைப்பை உருவாக்க உதவும்.

11. சர்வதேச சட்டத்தின் படி பொறுப்பு மற்றும் மனித மைய வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை உறுதிப்படுத்த சர்வதேச மன்றத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின. இதுபோன்று, ஜெர்மனியும், இந்தியாவும் செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய கூட்டுறவில் (ஜிபிஏஐ) பங்கேற்கும் வாய்ப்பை வரவேற்கின்றன.

12. சைபர் பாதுகாப்பு தொடர்பான சிறந்த அணுகுமுறைகளை அடையாளம் காண்பது மற்றும் இந்த விஷயத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு பகுதிகளை அடையாளம் காணும் சாதன முறைகள் குறித்து ஜெர்மனியும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் ஆலோசிக்க ஒப்புக் கொண்டன.

II. புதுமைகள் மற்றும் அறிவாற்றல் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் எல்லைகளை விரிவுபடுத்துதல்

13. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை தலைவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். இந்ததியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் உறுதிப்படுத்தின. மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன.

14. இரு தரப்புகளும், உலக வர்த்தக மையத்தோடு, விதிகள் சார்ந்த சர்வதேச வர்த்தக முறைக்கு தங்கள் வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தின. இதன் பின்னணியில், உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு முறையின் முழு செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பின் சீர்த்திருத்தத்திற்கும் அதன் சிறப்பு மற்றும் வேறுபட்ட நடத்தை, ஒருமித்த கருத்து அடிப்படையிலான முடிவெடுப்பது மற்றும் மேம்பாட்டு நோக்கங்கள் போன்ற அடிப்படைக் கொள்கைகள் குறைத்து மதிப்பிடப்படாமல், அனைத்து சீர்த்திருத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கஜகஸ்தானின் நர்சுல்தானில் அடுத்து நடக்க உள்ள உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டை வெற்றி பெறச் செய்ய இரு தரப்புகளும் முயற்சிக்கும்.

15. இரு தலைவர்களும் இருதரப்பு முதலீடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பாராட்டினர். ஜெர்மன் மிட்டல்ஸ்டாண்ட் மற்றும் அதன் 135க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் 1.2 பில்லியன் யூரோக்களுக்கு மேல் முதலீடு செய்வதாக அறிவித்த ‘மேக் இன் இந்தியா மிட்டல்ஸ்டண்ட்’ (எம்ஐஐஎம்) திட்டத்தின் வெற்றியை அவர்கள் வரவேற்றனர். ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா இடையே முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஆரம்ப முடிவுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கெண்டனர். இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறையாக இந்தியாவில் ஜெர்மனி நிறுவனங்களால் தகுதிவாய்ந்த நேரடி முதலீடுகளுக்கு முதலீட்டு உத்தரவாதங்களை வழங்குவதற்கான தனது கொள்கையை மீண்டும் நிலைநாட்டும் ஜெர்மனியின் முடிவை இந்தியா வரவேற்றது. தொழில் செய்வதற்கான நம்பிக்கையை வலுவாக்கும், ஃபாஸ்ட் டிராக் மெக்கானிசத்தின் பணிகளை தலைவர்கள் பாராட்டினர்.

16. இருதரப்பிலும் ஸ்டார்ட் அப் நிறுவன பரிமாற்றத்தை ஊக்குவிக்கும், ஜெர்மனி இந்தியா ஸ்டார்ட் அப் பரிமாற்ற திட்டத்தின் (ஜின்செப்) கீழ் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். புதிய ஜின்செப் திட்டம் மற்றும் புதிய ஜெர்மன் விரைவு (ஜிஏ) திட்டத்தின் ‘நெக்ஸ்ட் ஸ்டெப் இந்தியா’வின் அறிமுகம் மூலமாக இந்த முக்கியமான முயற்சியைத் தொடர்வதையும், பலப்படுத்துவதையும் அவர்கள் வரவேற்றனர். நெக்ஸ்ட் ஸ்டெப் இந்தியா திட்டமானது இந்தியாவில் ஜெர்மனி ஸ்டார்ட் அப்களுக்கான முழு ஜிஏ திட்டத்திற்கு வழிவகுக்கும்.

17. நிலையான வாழ்வாதாரத்தையும், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், திறமையான மனித வளங்களின் திறன்மிகு தளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் உணர்ந்துள்ளனர். திறமையான தொழிலாளர்கள் தேவைக்கும், பற்றாக்குறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவதென தங்களின் விருப்பத்தை இரு தரப்பும் வெளிப்படுத்தின. இதுதொடர்பாக நடந்துகொண்டிருக்கும் செயல்களில் அவர்கள் திருப்தி தெரிவித்ததோடு, கொத்து சார்ந்த கட்டமைப்புகளை நிறுவுதல், பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் கூட்டு பயிற்சி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்த கூட்டு நோக்கத்தை புதுப்பிப்பதை வரவேற்றனர். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் இயக்கம் மற்றும் ஆற்றல் - செயல்திறன் போன்ற புதிய, புதுமையான மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பதென இரு தரப்புகளும் ஒப்புக் கொண்டதோடு, இரு நாடுகளின் தனியார் துறையும் இந்த முயற்சிகளில் சேர ஊக்குவிக்கின்றன.

18. ‘ஜெர்மனியுடனான கூட்டு ஒத்துழைப்புக்கு பொருந்துதல்’ என்ற மேலாளர் பயிற்சித் திட்டத்திற்கான கட்டமைப்பில், பத்தாண்டுகளுக்கும் மேலான வெற்றிகரமாக ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 800க்கும் மேற்பட்ட இந்திய மேலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பு தொடர்வதை அவர்கள் வரவேற்றனர்.

19. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுடன் புதிய வடிவிலான பணிகள் குறித்த தேசிய முயற்சிகளை மேலும் பரிமாறிக் கொள்வதை தலைவர்கள் வரவேற்றனர். மேலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உட்பட குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கட்டாய உழைப்பை ஒழிப்பதில் முன்னேற, அர்ஜென்டினா ஜி20 தலைமையின் கீழ், உலகில் குழந்தை தொழிலாளர்கள், கட்டாய உழைப்பு, மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஜி20 அமைப்பின் யுக்திகளை பின்தொடர அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

20. மனித உரிமைகளை மதிக்க வேண்டிய தொழில் நிறுவனங்களின் பொறுப்பை தலைவர்கள் எடுத்துரைத்ததோடு, தொழில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐநா வழிகாட்டும் கோட்பாடுகள் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் ஜி20 அமைப்பின் கடமைகள் ஆகியவற்றின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர். நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்டிஜி) எட்டுவதில் தனியார் துறையால் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இரு தரப்புகளும் ஒப்புக் கொண்டதோடு, பொறுப்பான மற்றும் நிலையான வணிக நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர். குறிப்பாக, இந்திய மற்றும் ஜெர்மனியின் தேசிய செயல் திட்டங்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.  

21. ஜெர்மனி சமூக விபத்து காப்பீடு (டிஜியுவி) மூலம் காப்பீடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்சார் நோய்கள், புனர்வாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டதையும் வரவேற்றனர். இதன் மூலம், இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இயக்குநர் ஜெனரல் (வேலைவாய்ப்பு) தொழிற்சார் நோய்களைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதைத் தவிர, மாற்றுத்திறனாளி காப்பீடு நபர்களின் திறன் மேம்பாடு மற்றும் சமூக மறுவாழ்வு ஆகியவற்றை செயல்படுத்தவும் உதவும்.

22. வரிவிதிப்பு துறையில் டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிறகு, வரி சவால்களை எதிர்கொள்வதற்கான சமீபத்திய முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இதுதொடர்பான ஜி20 அமைப்பின் பணி திட்ட ஒப்புதலையும் வரவேற்கிறார்கள். இப்பணி இரட்டை தூண் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது ஓஇசிடியில் அடிப்படை சிதைவிலிருந்து லாபம் ஈட்டுதலை (பிஇபிஎஸ்) உள்ளடக்கிய கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது. இது, 2020ம் ஆண்டில் ஓர் அறிக்கையுடன் இறுதி செய்யப்படும். ஜெர்மனி மற்றும் இந்தியா சரியான நேரத்தில், 1 மற்றும் 2 தூண்களில் ஒருமித்த அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு சரியான நேரத்தில் தங்களின் பகிரப்பட்ட விருப்பத்தை வலியுறுத்தியது. இது அனைத்து தொழில் மட்டத்திலும் பிரதிபலிக்கும்.

23. இரு தலைவர்களும் இந்தியா, ஜெர்மனி நிதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தை மீண்டும் தொடங்குவதை வரவேற்றனர். இது, விவாதம், தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பொருளாதார நலனுக்கான ஓர் மன்றத்தை வழங்குகிறது. இந்த ஆண்டின் பரிமாற்ற நிகழ்வில், டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிறகு எழுந்துள்ள வரி சவால்கள், நிதி மற்றும் காப்பீட்டு துறை சவால்கள் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

24. போக்குவரத்து துறையைப் பொறுத்த வரையில், விமானப் போக்குவரத்து துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இது, தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பமற்ற பயிற்சியின் சிறந்த நடைமுறைகளின் ஒத்துழைப்பை செயல்படுத்துகிறது. அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக விமானங்களின் இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்திக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களையும் அவர்கள் ஊக்குவித்தனர்.

25. இந்தியாவும், ஜெர்மனியும் ரயில்வே ஒத்துழைப்பில் நீண்ட கால மற்றும் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளன. ரயில்வே நிபுணர்களுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் ரயில்வே பாதுகாப்பு, அதிவேகம் மற்றும் விரைவு ரயில்கள் போன்ற துறைகளில் தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் பல ஆண்டுகளாக கிடைக்கப்பெற்ற நன்மைகளை தலைவர்கள் பாராட்டின். இந்த்த் தகவல் பரிமாற்றம் எதிர்காலத்திலும் நீட்டிக்கப்படலாம். இந்தியாவில் அதிவேக மற்றும் விரைவு ரயில் திட்டங்களை மேற்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்த பொதுவான புரிதலை இரு தரப்பினரும் எட்டியுள்ளதற்கு தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

26. 2013ம் ஆண்டில் ஐஜிசியில் கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் தரமான உள்கட்டமைப்பு தொடர்பான இந்தியா-ஜெர்மனி செயற்குழுவின் நெருக்கமான ஒத்துழைப்பை இரு தரப்பினரும் பாராட்டினர். இரு அரசுகளும் இருதரப்பு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் கட்டமைப்பிற்குள் தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. மேலும், தனது உலகளாவிய திட்ட தர உள்கட்டமைப்பு (GPQI) மூலம் 2020க்கு அப்பாலும் செயற்குழுவை ஆதரிக்க பிஎம்டபிள்யுஐ விரும்புகிறது.

27. இரு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள விண்வெளி ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்ததோடு, புவி கண்காணிப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற பகுதிகளிலும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பையும் வரவேற்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் ஜெர்மனி விண்வெளி மையம் (டிஎல்ஆர்) ஆகியவற்றுக்கு இடையில் பணியாளர்களை பரிமாறிக் கொள்வதற்கான நடைமுறை ஏற்பாட்டில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர்.

28. நிலையான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்டிஜிக்கள்), பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான சென்டாய் கட்டமைப்பின் இலக்குகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ள பல்வேறு நாடுகளின் உலகளாவிய ஒத்துழைப்பு, ஐநா முகமைகள் மற்றும் திட்டங்கள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள், நிதி வழிமுறைகள், தனியார் துறை, கல்வி மற்றும் அறிவுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பேரழிவு எதிர்ப்பு உள்கட்டமைப்பிற்கான (சிடிஆர்ஐ) ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது. சிடிஆர்ஐக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததுடன், அதில் முறையாக சேருவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்து, இந்தியா மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து காலநிலை மற்றும் பேரழிவு எதிர்ப்பு மற்றும் நிலையான உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான பணியாற்றியது.

III. காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பது

29. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதன் மூலமும், கார்பன் தடம் குறைப்பதன் மூலமும் ஆற்றல் செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும் புவியின் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவை அவர்களின் ஒத்துழைப்பில் வழிகாட்டும் கட்டமைப்பாக செயல்படுகின்றன. இந்தியாவிலும் ஜெர்மனியிலும் வெற்றிகரமான எரிசக்தி மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு இரு நாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும், ஒருவருக்கொருவர் பயிற்றுவிக்க வேண்டும் மற்றும் காலநிலை பாதுகாப்பின் பொருளாதார திறனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

30. இரு தலைவர்களும் தற்போது உலகளாவிய காலநிலை நடவடிக்கை குறித்து மிகந்த கவலையை வெளிப்படுத்தினர். அனைத்து நாடுகளும் தங்களின் முயற்சிகளை முடுக்கிவிடுமாறும் அழைப்பு விடுத்தனர். சமமான, பொதுவான கொள்கைகள் அடிப்படையில் காலநிலை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை இந்தியாவும், ஜெர்மனியும் வலியுறுத்திய போதிலும், இரு நாடுகளின் மாறுபட்ட சூழ்நிலைகளால் பொறுப்புகளும், திறனும் வேறுபட்டலும்கூட, பாரீஸில் ஒப்புக் கொண்டபடி என்டிசிகளை மேலும் அபிவிருத்தி செய்வதில் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொள்கின்றன. அதே மனப்பான்மையில், ஐரோப்பியாவின் ஒரு பகுதியான ஜெர்மனியும், இந்தியாவும் பாரீஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 2ஐ கவனத்தில் கொண்டு நீண்டகால குறைந்த பசுமை இல்ல வாயு உமிழ்வு மற்றும் அபிவிருத்தி உத்திகளை வடிவமைக்க முயற்சிக்கிறது. மேலும், ஐபிசிசியின் சமீபத்திய விவரங்களின்படி, சமமான, பொதுவான நடவடிக்கைகள் அடிப்படையில், இரு நாடுகளின் மாறுபட்ட சூழ்நிலைகளால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அதனதன் திறன்களைக் கொண்டு நிலையான வளர்ச்சியை எட்டவும், வறுமையை ஒழிப்பதற்கான முயற்சியிலும் பாடுபடுகிறது.

31. பசுமை காலநிலை நிதியத்தை வெற்றிகரமாக நிறைவாக்குதன் முக்கியத்துவத்தை இந்தியாவும், ஜெர்மனியும் எடுத்துரைத்தன. பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் யுஎன்எப்சிசி ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளுக்கு ஏற்ப அதன் முதல் நிறைவாக்குதல் காலத்தில் பசுமை காலநிலை நிதிக்கு முதல் முறையாக பங்களிக்கும் வளர்ந்த மற்றும் பிற நாடுகள் தங்களின் பங்களிப்பை அதிகளவில் செய்ய வேண்டுமென ஊக்குவித்தன. சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை பேணுதல் மற்றும் இரட்டை எண்ணிக்கையைத் தவிர்த்து, நிலையான வளர்ச்சியைப் பாதுகாக்கும் சந்தை வழிமுறைகள் குறித்த தெளிவான விதிகளை ஏற்றுக் கொள்வது உட்பட வெற்றிகரமான சிஓபி25ஐ நோக்கி அனைத்து கூட்டாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.

32. இந்தியாவும், ஜெர்மனியும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால மற்றும் வெற்றிகரமான வளர்ச்சி ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. எரிசக்தி, நிலையான மற்றும் காலநிலைக்கு சாதகமான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் கிடைத்த பரஸ்பர நன்மைகளை தலைவர்கள் பாராட்டினர்.

33. வளர்ந்து வரும் மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரங்கள் ஆகிய இரண்டுக்குமே தற்போதைய காலத்தில் அனைத்து குடிமக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் குறைந்த கார்பன் மற்றும் நிலையான இயக்கத் தீர்வுகளை வழங்குவது முக்கிய சவாலாகும் என்று இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். ஜெர்மனி மற்றும் இந்தியா இரண்டும் பல தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மக்களுக்கு சாதகமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் இயக்கத் திட்டங்களை உருவாக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறைந்த கார்பன் இயக்கத் தீர்வுகளுக்கான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதோடு, பசுமை நகர்ப்புற இயக்கம் குறித்து இந்தியா-ஜெர்மனி கூட்டாண்மை குறித்த புதிய கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை வரவேற்றனர். இதில் பசுமை நகர்ப்புற இயக்க உள்கட்டமைப்பு மற்றும் சேவையை மேம்படுத்த ஆதரவளிக்கவும், இந்திய நகரங்களில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் ஸ்மார்ட் இயக்க தீர்வுகளை வடிமைத்து செயல்படுத்த தேசிய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்தவும் ஜெர்மனி தரப்பில் 1 பில்லியன் யூரோ கூடுதல் சலுகை நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளது. இதன் மூலம், இ-மொபைலிட்டி ஏற்கனவே நிறுவப்பட்ட ஆட்டோமோட்டிவ் கூட்டு செயல்பாட்டு குழுவின் கீழான முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதத்தில் உள்ளது.

34. வரும் 2030ம் ஆண்டில் பாரீஸ் ஒப்பந்தத்தின் நீண்டகால இலக்குகள் மற்றும் எஸ்டிஜிக்களை அடைவதை உறுதி செய்வதற்காக வெற்றிகரமான உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கான இரு நாடுகளின் விதிவிலக்கான முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இரு தலைவர்களும், இந்தியா-ஜெர்மனி எரிசக்தி அமைப்பு (ஐஜிஇஎப்), இந்தியா-ஜெர்மனி மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச காலநிலை முன்முயற்சியின் கீழ் முக்கியமான மற்றும் வெற்றிகரமான பணிகள் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஆற்றல் திறன் துறையின் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்தனர். 

35. நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களின் நிலையான மாற்றீட்டிற்கான பாதையை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர். உள்கட்டமைப்பு, எரிசக்தி திறன் மற்றும் தேவைக்கேற்ற மேலாண்மை, நெகிழ்வான மின் உற்பத்தி மற்றும் பெரிய அளவிலான சேமிப்பக தீர்வுகள் ஆகியவற்றின் மேம்பாடு மூலமாக, நிலையான எரிசக்தி மாற்றத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பெரிய அளவிலான கட்ட ஒருங்கிணைப்பில் இருக்கும். மேலும், சூரிய தொழில்நுட்பங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில், குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இந்தத் துறையில் குறிப்பாக மின்மயமாக்கலுக்கான சேமிப்பக செல் மற்றும் மைக்ரோ கிரிட் தீர்வுகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒத்துழைப்பு வழங்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

36. கடந்த 2015ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியா-ஜெர்மனி சோலார் ஒத்துழைப்பு மற்றும் 2013ல் நிறுவப்பட்ட பசுமை எரிசக்தி காரிடார்கள் மீதான ஒத்துழைப்பு ஆகியவை வெற்றி அடைந்திருப்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். நேர்மறையான முன்னேற்றங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், 2022ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 175 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டுமென்ற இந்திய அரசின் இலக்குகளை அடைவதற்கும், அடுத்த சில ஆண்டுகளில் 450 ஜிகாவட் இலக்கை எட்டுவதற்கும், 2050ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 80% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து வழங்க வேண்டுமென்ற ஜெர்மனி அரசின் இலக்கை எட்டுவதற்கும், இரு தலைவர்களும் இந்தியா மற்றும் ஜெர்மனி மின்சந்தைகளின் காலநிலைக்கு சாதகமான வளர்ச்சியை ஊக்குவிக்க ஒப்புக் கொண்டனர்.

37. சர்வதேச அளவில் காலநிலைக்கு சாதகமான திறன்மிகு எரிசக்தி தீர்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில், சர்வதேச சோலார் கூட்டணியில் (ஐஎஸ்ஏ) இணையும் ஜெர்மனியின் ஆர்வத்தை இந்தியா வரவேற்கிறது.

38. 2019 பிப்ரவரியில் டெல்லியில் நடந்த இந்தியா-ஜெர்மனி சுற்றுச்சூழல் மன்றத்தின் (ஐஜிஇஎன்விஎப்) முக்கியத்துவத்தை பிரதமர் மோடியும், பிரதமர் மெர்க்கலும் மீண்டும் வலியுறுத்தினர். இருநாடுகளின் கூட்டாட்சி கட்டமைப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு, மாநில மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

39. 2019ம் ஆண்டில் நடைபெற்ற நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை/பொருளாதார சுற்றறிக்கை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழு கூட்டங்களை இரு தலைவர்களும் வரவேற்றனர். ‘சுற்றுச்சூழல் அமைப்பில் கடல் கழிவுகள் தேங்குதலை தடுத்தல்’ என்ற முயற்சி தொடங்கப்படுவதை தலைவர்கள் வரவேற்றனர். இந்த முயற்சியானது, தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி அனைத்து பங்குதாரர்களுடன் கூட்டாக இணைந்து, திறன்மிக்க மற்றும் வளமான பொருளாதார அணுகுமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பதன் மூலம், எஸ்டிஜி 12ஐ அடைவற்கான முயற்சிகளை ஆதரிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கடல் குப்பை பற்றிய நோக்கத்தின் கூட்டு உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டதையும் அவர்கள் வரவேற்றனர்.

40. சர்வதேச காலநிலை முயற்சிக்கான இருதரப்பு கட்டமைப்பின் கீழ் 35 மில்லியன் யூரோவின் ஒரு பகுதியை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைப்பை விரிவாக்கம் செய்யவும், சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தவும் செலவிடுவது என்றும் மற்றொரு பகுதியை வன நிலப்பரப்பு மறுசீரமைப்பிற்காக செலவிடுவது என்றும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். வனநிலப்பரப்பு மறுசீரமைப்பிற்கான புதிய மாதிரிகள் இந்தியாவின் பான் சேலஞ்ச் குறிக்கோளுக்கும், 33 சதவீத வனப்பகுதியை எட்டுவதற்கான இந்தியாவின் குறிக்கோளுக்கும் பங்களிக்கக் கூடும். காலநிலையைப் பாதுகாக்கவும், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், நிலையான வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் காடுகள் இன்றியமையாதவை என்பதை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

41.வரும் 2020ம் ஆண்டுக்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை உள்ளடக்கிய உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான (சிபிடி) பேச்சுவார்த்தைகளுக்கான ராஜதந்திர கூட்டாளிகளாக பல்லுயிர் ஒத்துழைப்பைத் தொடரவும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஆர்வம் தெரிவித்தனர். கடலோர மற்றும் கடல் பல்லுயிர் பாதுகாப்பு, மகரந்தச் சேர்க்கை பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு, அந்நிய உயிரினங்களின் மேலண்மை, சுற்றுச்சூழல் நிதி இடமாற்றம் மற்றும் மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் பிற பல பயன்பாட்டு மரங்கள் தொடர்பான திட்டங்களில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருதரப்பினரும் அடையாளம் கண்டுள்ளனர்.

42. 2017ம் ஆண்டு மே மாதத்தில் கையெழுத்திடப்பட்ட நிலையான நகர அபிவிருத்திக்கான கூட்டு உடன்படிக்கையின் கீழ் அடைந்த முன்னேற்றத்துக்கு இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும் அவர்களின் வெற்றிகரமான ஒத்துழைப்பைத் தொடர தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச பொலிவுறு நகரங்கள் நெட்வொர்க்கில் இந்தியாவின் பங்களிப்பை முறைப்படுத்த ஒரு கூட்டு நோக்கில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர். இந்தியாவில் கட்டுமான தொழில்நுட்ப ஆண்டு 2019-2020ஐ திறம்பட செயல்படுத்துவதில், மலிவுவிலை வீட்டுத் திட்டங்களில் பங்கேற்கவும், புதிய கட்டுமான தொழில்நுட்பங்களின் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் ஜெர்மனி நிறுவனங்களை இந்தியா அழைத்தது. 2020ம் ஆண்டில் ஜெர்மனியில் நடக்க உள்ள நகர்ப்புற மேம்பாட்டுக்கான கூட்டு செயற்குழுவின் அடுத்த கூட்டத்தை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

43. கடந்த 2016ம் ஆண்டு வாழ்விடம் III மாநாட்டில் அடையாளம் காணப்பட்ட புதிய நகர்ப்புற இலக்குகளை நோக்கி உறுதிப்பாட்டுடன் செயல்படுவதாக இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை கொச்சி, கோயம்புத்தூர் மற்றும் புவனேஷ்வர் நகரங்களில் செயல்படுத்தும் இரு தரப்பு ஒத்துழைப்பைப் பாராட்டிய தலைவர்கள், இது மற்ற இந்திய நகரங்களுக்கும் விரிவுபடுத்த ஒப்புக் கொண்டனர்.

44. இந்திய மாநிலம் சட்டீஸ்கரில் காலநிலை நடவடிக்கைக்கான ஒத்துழைப்பு குறித்த கூட்டு அறிவிப்பை ஜெர்மனி வரவேற்கிறது. மேலும், இத்திட்டத்தில், மேலும் பிற இந்திய நகரங்கள் மற்றும் கூட்டாட்சி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுடன் மத்திய அரசும் இணைய ஊக்குவிக்கிறது.

45. வேளாண்மை, உணவுத் தொழில் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் ஆக்கப்பூர்வமான பங்கை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். இது தனது கடந்த கூட்டத்தை 2019 மார்ச் மாதம் டெல்லியில் நடத்தியது. உணவு பாதுகாப்பு, விவசாயப் பயிற்சி மற்றும் திறன், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விவசாய தளவாடங்கள் போன்ற துறைகளில் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருந்து வெளிவரும் உறுதியான திட்டங்கள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

46. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை ஆகிய துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியாவில் உள்ள ஜெர்மனி நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் விவசாய தளவாடங்கள் குறித்து பயிற்சி பட்டறையை 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் புதுடெல்லியில் நடத்திடும் வாய்ப்பையும் அவர்கள் வரவேற்றனர்.

47. விதை வளர்ச்சியில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். இது, உயர்தர விதைகளை விவசாயிகள் பெறுவதை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிக்கும் பொருட்டு, ஜூன் 2019ல் கூட்டு உடன்படிக்கையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். மேலும் இந்தியாவில் வேளாண் சந்தை வளர்ச்சியை வலுப்படுத்த சீர்த்திருத்த முயற்சிகளுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட புதிய இருதரப்பு ஒத்துழைப்பு திட்டத்தை நிறுவுவதற்கான கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதையும் வரவேற்றனர்.

48. இதுதவிர, இயற்கை வளங்களில் குறிப்பாக மண் மற்றும் நீர் ஆகியவற்றில் நிலையான மேலாண்மைக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் தலைவர்கள் வரவேற்றனர்.

IV. மக்களை ஒன்றிணைத்தல்

49. கலாச்சார துறையில் தற்போதுள்ள வலுவான ஒத்துழைப்புக்கு தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். தேசிய அருங்காட்சியகம், ஸ்டிப்டங் ப்ரூயிஷர் குல்தூர்பெசிட்ஸ் (பிரஷ்யன் கலாச்சர பாரம்பரிய அறக்கட்டளை) மற்றும் ஹம்போல்ட் மையம் உள்ளிட்ட ஜெர்மனி மற்றும் இந்திய அருங்காட்சியங்களுக்கு இடையேயான அருங்காட்சியக ஒத்துழைப்பு, கலாச்சார மரபுகளைப் பாதுகாத்தல் மற்றும் அருங்காட்சியக மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு உடன்படிக்கையையும் வரவேற்றனர்.

50. பயிற்சியாளர் கல்வி, திறன் ஆய்வு, கண்டுபிடிப்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வழங்கிடும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎப்எப்) மற்றும் டாய்சர் புட்பால் பண்ட் (ஜெர்மனி கால்பந்து சங்கம், டிஎப்பி) இடையேயான கூட்டு ஒப்பந்தம் இரு தரப்பிலும் வரவேற்கப்பட்டது.

51. புதுடெல்லியில், 2, நியாயா மார்க் பகுதியில் கட்டப்படும் ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கான திட்டம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இது ஜெர்மனியின் தூதரக பள்ளியாகவும், தூதரகத்தின் வணிக, பொருளதார, கலாச்சர மற்றும் அறிவியல் துறை நோக்கங்களுக்கான அரசு நிதியளிக்கும் நிறுவனங்களின் அலுவலகமாகவும் இயங்கும். இந்தியா, ஜெர்மனியின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன கட்டுமான திட்டத்திற்கு அவர்கள் முழு ஆதரவையும் அளித்தனர்.

52. கல்வித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பரிமாற்றம் வளர்ந்து வருவதற்கு இரு தரப்பினரும் தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். ‘இந்தியாவிற்கான ஒரு புதிய பாதை’ (ஏஎன்பிடிஎல்) என்ற திட்டத்தின் ஒரு பகுதியான ‘உயர்கல்வியில் இந்தியா, ஜெர்மனியின் ஒத்துழைப்பு’ (ஐஜிபி) திட்டத்தை வரவேற்ற தலைவர்கள், தற்போது ஜெர்மனியில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20,800 ஆக இருப்பதை மேலும் உயர்த்துவதற்காகவும், இந்தியாவில் படிக்கும் ஜெர்மனி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனர். அதே சமயம், ஜெர்மனி கல்வி நிறுவனங்களில் நவீன இந்திய மொழிகளை கற்பிப்பதை ஊக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உணர்ந்து, கடந்த 2015ம் ஆண்டிலேயே கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

53. வரும் 2020ம் ஆண்டில் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாட உள்ள இந்தியா-ஜெர்மனி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமான ஐஜிஎஸ்டிசியின் மூலம் நீண்டகால ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தியா-ஜெர்மனி நிலைத்தன்மை மையம் அமைத்து நீட்டிக்கப்பட்ட டியு9 மற்றும் ஐஐடியின் பல்கலைக்கழக ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.

54. பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், பிராங்க்பர்ட்டர் இன்னோவேஷன்ஜென்டிரம் பயோடெக்னாலஜி ஜிஎம்பிஎச் (எப்ஐஇசட்) மற்றும் இந்திய அரசின் ஆயுர்வேத அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனம் (ஏஐஐஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது, நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத மருத்துவக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

55. சுகாதாரத்துறையில், மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதில் பாரம்பரிய மருந்துகள், ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவற்றின் பங்களிப்பை கருத்தில் கொண்டும், ஆரம்பகால இந்தியாவில் சுகாதாரத்துறையில் பாரம்பரிய மருத்துவம் ஆற்றிய பெரும் பங்கை கருத்தில் கொண்டும், இரு நாடுகளும் பாரம்பரிய மருத்துவத்தின் தாக்கத்தை, குறிப்பாக மக்களின் நலனுக்கான யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை மேலும் மதிப்பீடு செய்ய ஒப்புக் கொள்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நடைமுறைகளில் ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம் காணும் இருதரப்பு திட்டங்கள், தரமான தரநிலையை உறுதி செய்து, பாரம்பரிய மருத்துவத்தின் உள்கட்டமைப்பில் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் பெரிதும் பாராட்டப்படுகின்றன.

56. அனைத்து தூதரக விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வழக்கமான தூதரக உரையாடல் வழிமுறையை நிறுவனமயமாக்குவதை இரு தலைவர்களும் பாராட்டினர். முதலாவது இந்தியா - ஜெர்மனி தூதரக உரையாடலை விரைவில் நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

57. குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை (எம்எல்ஏடி) இறுதி செய்வதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இரு தலைவர்களும் கவனித்தனர். இந்தியா-ஜெர்மனி இடம்பெயர்வு மற்றம் இயக்கம் கூட்டாண்மை உடன்படிக்கையின் முக்கிய கூறுகள் கொண்ட அறிக்கையின் அடிப்படையில், இரு அரசுகளுக்கு இடையே இடம்பெயர்வு மற்றும் இயக்கம் கூட்டாண்மையின் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, விரைவில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதாக தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

58. மும்பையில் உள்ள ஜெர்மன் துணைத் தூதகரத்தில் வரும் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஷெங்கன் விசா மையத்தை நிறுவுவதற்கான ஜெர்மனி மத்திய வெளியுறவு அலுவலகத்தின் முயற்சியை இந்தியா வரவேற்றது. இந்த மையம், விசா வழங்குவதற்கு மேலும் உதவி புரியும்.

V. உலகளாவிய பொறுப்பை பகிர்தல்

59. வரும் 2020ம் ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர ஒத்துழைப்பின் 20ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இருதரப்பினரும் தங்களின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் விரும்புகின்றன. இதற்காக, இந்தியா, ஜெர்மனி வெளியுறவு செயலாளர்கள் இடையே வெளியுறவு அலுவலக ஆலோசனை கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவதற்கான நடைமுறையை நிறுவனமயமாக்க இருதரப்பிலும் முடிவு செய்துள்ளனர். அதோடு, தேசிய, பிராந்திய மற்றும் ராஜதந்திர நலன்களில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட கொள்கை விவகாரங்களில் கூட்டு ஈடுபாடு மற்றும் நடவடிக்கைக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கும், முக்கிய பங்குதாரர்கள் இடையே ஆண்டுதோறும் கருத்துகள் மற்றும் யோசனைகளின் திறந்தவெளி பரிமாற்றத்தில் ஈடுபட உதவும் வகையில் டிராக் 1.5 ராஜதந்திர உரையாடலையும் அவர்கள் நிறுவினர். இரு தரப்பிலிருந்தும் ஊடக வல்லுநர்கள் வருகைக்கு வசதி செய்து தருவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான தகவல் பரிமற்றத்தை மேம்படுத்த இந்தியாவும், ஜெர்மனியும் உறுதி அளிக்கின்றன. இதன் மூலம், இரு தரப்புகளும், தமது ஜனநாயக சமூகங்களுக்கு பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரு தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே அடிக்கடி மற்றும் தீவிரமான தொடர்புகளை ஊக்குவித்தனர். கல்வி மற்றும் பேச்சுவார்த்தைகள் வடிவில் இத்தகைய தொடர்புகளை எளிதாக்குவதில் ஜெர்மனி அரசியல் அடித்தளத்தின் பங்களிப்பையும் அவர்கள் அங்கீகரித்தனர்.

60. வளரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், அரசு பத்திர கடனைக் கட்டுப்படுத்த, நிதி உதவிக்கு போதுமான அணுகலை அனுமதிக்கும் அதே வேளையில், அரசு மற்றும் தனியார் கடன் வாங்குபவர்க்கும், கடன் வழங்குநர்களுக்கும் இடையே பொறுப்பான, வெளிப்படையான, வலுவான மற்றும் நிலையான நிதி நடைமுறைகளை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். இதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் மற்றும் வளர்ந்து வரும் கடன் வழங்குநர்களை பரவலாக சேர்ப்பதற்கான சர்வதேச நிதியம், உலக  வங்கி குழு மற்றும் பாரீஸ் கிளப் (பிசி) ஆகியவற்றின் தொடர்ச்சியான பணிகள் மற்றும் முயற்சியை இந்தியாவும், ஜெர்மனியும் ஆதரிக்கின்றன. உத்தியோகப்பூர்வ இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்கான பிரதான அமைப்பான பிசியின் பங்கையும், அரசு பத்திர கடன் பிரச்னைகள் குறித்த அதன் பணிகளையும் இருதரப்பினரும் ஆதரிக்கின்றனர்.

61. உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை கூட்டாக எதிர்கொள்ள ராஜதந்திர கூட்டாளிகளாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக் கெண்டன. சர்வதேச, ஐரோப்பிய மற்றும் தேசிய விதிகளின்படி, ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யவும், இந்தியாவுடன் தொழில்நுட்ப பகிர்வு செய்து கொள்ளவும் ஜெர்மனி வழிவகை செய்யும். இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த, இந்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரேதச மாநிலங்களில் அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு உற்பத்தி மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா, ஜெர்மனி கடற்படை தொழில்களுக்கு (எகா: நீ்ர்மூழ்கிக் கப்பல்கள்) இடையிலான கடல்சார் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. பாதுகாப்பு துறையின் சோதனை மற்றும் அங்கீகாரமளித்தல், குறிப்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளின் வடிவமைப்பை அங்கீகரித்தல் மற்றும் தர உத்தரவாதம் அளித்தலுக்கான வலுவான ஒத்துழைப்பை உருவாக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளின் முக்கிய தொழில்களுடன் மற்ற நாடுகளின் சிறு, குறு தொழில்நிறுவனங்களை அவற்றின் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்க முயற்சிக்க வேண்டும் என்பதையும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

62. இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே, இந்தியாவிலும், ஜெர்மனியிலும் மாறி மாறி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வழக்கமான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முடிவை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு தலைவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட ‘இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஏற்பாட்டை அமல்படுத்துவதை’ வரவேற்றதுடன், இது, தற்போதுள்ள பாதுகாப்பு கொள்கைகள், புதிய கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். உலகளாவிய, பிராந்திய, கடல்சார் மற்றும் சைபர் பாதுகப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, ஐநா அமைதி காக்கும் பயிற்சி களத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை நீட்டிப்பது மற்றும் ஆழப்படுத்துவதன் மூலம் உயர்மட்ட மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கிடைக்கப்பெற்று பரஸ்பரம் நன்மை பயக்கும்.

63. மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி, அவரது நீடித்த மரபுக்கும், அகிம்சை மற்றும் நல்லிணக்கத்தின் தத்துவத்திற்கும் இரு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அனைத்து நாடுகளின் சமத்துவம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள், பலதரப்பு ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கன தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர். இரு தலைவர்களும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கும், அதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் உறுதிப்பாடு கொண்டிருப்பதையும் வலியுறுத்தினர். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் ஜெர்மனியும் நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்கவும், இருதரப்பு மற்றும் ஜி20, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பலதரப்பு அமைப்புகளின் கூட்டாளர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உறுதியாக உள்ளன. இந்த வகையில், குறிப்பாக இந்தியாவும் ஜெர்மனியும், வரும் 2022ம் ஆண்டில் இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாடும், ஜெர்மனி தலைமையில் ஜி7 மாநாடும் நடக்க உள்ள நிலையில், அதை எதிர்நோக்கி நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

64. சர்வதேச சட்டத்தின்படி, குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மாநாட்டின் கடல் சட்டம் (யுஎன்சிஎல்ஓஎஸ்) 1982ன்படி, தடையற்ற வர்த்தகம் மற்றும் அதற்கான சுதந்திரமான கடல் பாதையின் முக்கியத்துவத்தை இரு தரப்பிலும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.

65. இரு தலைவர்களும் நிலையான, ஒன்றுபட்ட, வளமான, பன்மை மற்றும் அமைதியான ஆப்கனிஸ்தனுக்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர். ஆப்கன் தலைமையிலான மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறையை உறுதிப்படுத்தும் வகையில், அரசாங்கத்தை உள்ளடக்கிய ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பதில் ஜெர்மனியின் முயற்சிகளை இந்தியா வரவேற்றது. வன்முறையை நிறுத்த வேண்டும், சர்வதேச பயங்கரவாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தல், பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் சொர்க்கமாவும், சரணாலயமாகவும் திகழ்வதை அகற்றுவது; அரசியலமைப்பு ஒழுங்கைப் பாதுகாப்பது மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆப்கானிய குடிமக்களின் உலகளாவிய மனித உரிமைகளுக்கான மரியாதை கிடைக்கச் செய்வது உள்ளிட்டவைகளை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டமைப்பதிலும், அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் இந்தியாவின் பங்களிப்பை ஜெர்மனி பாராட்டியது. ஆசியாவின் இதயம் - இஸ்தான்புல் செயல்முறை மற்றும் ஆப்கானிஸ்தனுக்கான சர்வதேச தொடர்பு குழு ஆகியவை பிராந்திய மற்றும் சர்வதேச நம்பிக்கையை வளர்ப்பதற்கும், ஆப்கனின் அரசியல் ஒத்துழைப்புக்கும் முக்கியமான வடிவங்களாக இருக்கின்றன என்பதை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

66. பயங்கரவாதம் உலகளாவிய துன்பம் என்பதை வலியுறுத்திய இரு தலைவர்களும், உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த வலுவான கவலைகளையும் அதை கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கான தீர்மானத்தையும் வெளிப்படுத்தினர். பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பளிக்கும் புகலிடங்களையும், உள்கட்டமைப்புகளையும் வேரறுப்பதற்கும், பயங்கரவாத நெட்வெர்க் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதை சீர்குலைப்பதற்கும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கும் அனைத்து நாடுகளுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பயங்கரவாதத்தை எதிர்க்கவும், வன்முறை தீவிரவாதத்தை தடுக்கவும் தகவல் மற்றும் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்ளுதல், மனித உரிமைச்சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டத்துடன் முழுமையாக இணங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வலுவான சர்வதேச ஒத்துழைப்பு அளிப்பதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

67. எந்த வகையிலும் மற்ற நாடுகளின் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்த தங்கள் நாட்டின் எந்த பிரதேசத்தையும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் கோடிட்டிக் காட்டினர். உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் முக்கியத்துவத்தையும், எந்த வடிவில் பயங்கரவாதம் வெளிப்பட்டாலும் அது சர்வதேச சமூகத்திற்கு ஏற்றதல்ல என்ற நிலையான செய்தியை அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த உலகளாவிய அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைப்பை முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் குறிப்பிடுகையில், வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாட்டை (சிசிஐடி) இறுதி செய்து, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

68. வளர்ந்து வரும் தீவிரவாதத்தைக் கையாள்வதில் உள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, பயங்கரவாத நெட்வொர்க்குகள் குறித்த தகவல் மற்றும் உளவுத்துறையை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட  பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் கட்டமைப்பிற்கு இந்தியாவும் ஜெர்மனியும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கூட்டு செயற்குழுவின் அடுத்த கூட்டத்தை விரைவில் திட்டமிடுமாறு இரு தரப்பு அதிகாரிகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

69. ஈரானுக்கும், E3+3க்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட விரிவான கூட்டு செயல் திட்டத்தை (ஜேசிபிஓஏ) தொடர்ந்து செயல்படுத்துவதற்கு இந்தியாவும் ஜெர்மனியும் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தின. அந்த செயல்திட்டத்தை சுற்றி எழுந்துள்ள பிரச்னைகள் அரசியல் பேச்சுவர்த்தையின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும். ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் ஐநா பாதுகாப்புத் தீர்மானம் 2231 தொடர்பான விரிவான கூட்டு செயல் திட்டத்துடன் (ஜேசிபிஓஏ) முழுமையான இணக்கம் தேவை என்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போதைய பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும், பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது உள்ளிட்ட தற்போதைய பதற்றத்தை போக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக் கொண்டன.

70. உலகளாவிய பரவலைத் தடுத்திடும் முயற்சிகளை வலுப்படுத்த தலைவர்கள் தங்கள் உறுதிப்பட்டை வெளிப்படுத்தினர். ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு, ஆஸ்திரேலிய குழு மற்றும் வாஸ்னார் ஏற்பாடு ஆகியவற்றில் நுழைந்ததற்கு ஜெர்மனி அளித்த ஆதரவுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா நுழைவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஜெர்மனி தனது உறுதியான ஆதரவு தெரிவித்து வருவதை வலியுறுத்தியது.

71. ஐநா பொதுச்சபையின் 74வது அமர்வின் போது தொடங்கப்பட்ட, பாதுகாப்பு கவுன்சிலின் சீர்த்திருத்தம் குறித்த உரை மீதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் ஜி4 மற்றும் சீர்த்திருத்த நோக்கமுடைய பிற நாடுகள் மற்றும் குழுக்களின் உறுதியான முயற்சிகளை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். சீர்திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்புக்குழுவில் இரு நாடுகளும் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு, ஒருவருக்கொருவர் தங்களின் முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்தினர். பலதரப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பு கவுன்சிலை சீர்த்திருத்துவது அவசியமாகும். சர்வதேச அமைதி, பாதுகாப்பிற்கான சர்வதேச ஒழுங்கின் மையமாக பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவம் இல்லாதது அதன் முடிவுகளின் நியாயத்தன்மையும், அதன் செயல் திறனையும் பாதிக்கிறது. நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், எங்களுக்கு வலுவான, நியாயமான மற்றும் பயனுள்ள ஐக்கிய நாடுகள் சபை தேவை.

72. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை பெறுவதற்கு வலுவான மற்றும் பயனுள்ள பலதரப்பு ஒத்துழைப்பு அவசியமாகும். தற்போதைய காலத்தின் முக்கிய சவால்கள், அதன் இயல்பு மற்றும் உலகளாவிய நோக்கத்தால், அவற்றை ஒவ்வொரு நாடும் தனித்தனியாக எதிர்கொள்ள முடியாது. எனவே நிச்சயம் அவை கூட்டாக கையாளப்பட வேண்டும்.

73. இரு தலைவர்களும், 5வது ஐஜிசியில் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு திருப்தி தெரிவித்ததோடு, ராஜதந்திர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த அவர்களின் அணுகுமுறைகளைத் தொடர்ந்து ஒருங்கிணைக்கவும் தீர்மானித்தனர். அன்பான விருந்தோம்பலுக்காகவும், ஐஜிசி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்கல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

******************



(Release ID: 1590617) Visitor Counter : 488