கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

“பிம்ஸ்டெக் துறைமுகங்கள்” மாநாட்டை திரு. மன்சுக் மாண்டவியா, விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்கிவைக்கிறார். சென்னை – தாய்லாந்து துறைமுகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

Posted On: 06 NOV 2019 11:10AM by PIB Chennai

வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் துறைமுகங்கள் மாநாடு 2019 நவம்பர் 7-8 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.  இந்த முதலாவது மாநாட்டை மத்திய கப்பல் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா நாளை தொடங்கிவைக்க உள்ளார்.

தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பிம்ஸ்டெக் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.  இந்த நாடுகளின் பிரதிநிதிகள், மாநாட்டில் பங்கேற்று பிம்ஸ்டெக் மற்றும் பிராந்திய துறைமுகங்கள் தொடர்பான தத்தமது நாட்டின் கருத்துகளை முன்வைக்க உள்ளனர். 

பிம்ஸ்டெக் நாடுகளின் இந்த முதலாவது துறைமுக மாநாடு, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்துகளை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதுதவிர, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள், துறைமுகங்களின் பாதுகாப்பு மற்றும் உற்பத்திக்கு பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில், குழுக்கள் அளவிலான ஐந்து அமர்வுகள் நடைபெறும்.  மாநாட்டின் முதல் நாளில் ‘துறைமுகம் சார்ந்த தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி’ என்ற தலைப்பிலான முதலாவது அமர்வு நடைபெறும்.  இந்த அமர்வில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், துறைமுகங்களுக்கு அருகே தொழில் வளாகங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டின் போது, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்களுக்கும் தாய்லாந்து துறைமுக ஆணையம் (ரனாங் துறைமுகம்) இடையேயான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாக  உள்ளது.

2019 நவம்பர் 8-ம் தேதி காலை, பிம்ஸ்டெக் பிரதிநிதிகள், உள்ளூர் மாணவர்கள் மற்றும் துறைமுகப் பணியாளர்களுடன் இணைந்து அமைச்சர் திரு. மாண்டவியா, விசாகப்பட்டினம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியையும் மேற்கொள்ளவுள்ளார்.  

 

****



(Release ID: 1590577) Visitor Counter : 182