பிரதமர் அலுவலகம்

தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்


இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம்: பிரதமர்
இந்தியாவின் முன்னுரிமைகளுக்கும் ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கும் தாய்லாந்து 4.0 துணை நிற்கும்: பிரதமர்
வணிகமும், கலாச்சாரமும் உலகை நெருக்கமாக கொண்டுவரும் ஆற்றல் கொண்டவை: பிரதமர்

Posted On: 03 NOV 2019 9:54AM by PIB Chennai

.
 

அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர், ஏராளமானோருக்கு வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் வழங்கிய மெச்சத்தகுந்த பணிக்காக ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே வலுவான கலாச்சார இணைப்புகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், வணிகமும், கலாச்சாரமும் உலகை நெருக்கத்தில் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவை என்று தெரிவித்தார்.

இந்தியாவில் பெரும் மாற்றங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் பல்வேறு வெற்றிக் கதைகளை பிரதமர் பகிர்ந்துகொண்டார்.  வழக்கமான பணியாற்றும் முறையை மாற்றி பெரும் மாற்றங்களை கொண்டுவர முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  முன்பு முடியாது என்று கருதப்பட்டதெல்லாம் இப்போது முடியும் என்று மாறியிருப்பதால், இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணமாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் நடத்த உகந்த நாடுகளின் உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 79 இடங்கள் முன்னேறியுள்ளது.  2014-ஆம் ஆண்டு 142-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ஆம் ஆண்டில் 63-வது இடத்திற்கு சென்றுள்ளது. சீர்திருத்தங்களை ஈடுபாட்டுடன் செயல்படுத்தியதால், தொழில் நடத்த உகந்த சூழல் நிலவுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 

உலகப் பொருளாதார அமைப்பில் பயணம் மற்றும் சுற்றுலா குறியீட்டிலும் இந்தியா முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார். 2013-ல் 65-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ல் 34-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  சிறந்த சாலைகள் மூலம் பாதுகாப்பு மற்றும் வசதி, தொடர்பு, ஆரோக்கியமான சூழல், சட்டம் – ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை 50% உயர்த்தியுள்ளது.

சேமிக்கப்பட்ட பணமானது, சம்பாதித்த பணமாகும் என்று கூறிய அவர், சேமிக்கப்படும் எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் எரிசக்திக்கு சமமாகும் என்று தெரிவித்தார். இடையூறுகளை களைந்து, திறனை மேம்படுத்தி, நேரடி பணம் மாற்றும் திட்டத்தின்மூலம் இதுவரை 2 ஆயிரம் கோடி டாலர் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  எல் ஈ டி விளக்குகள், கார்பன் உமிழ்வதைக் குறைத்துள்ளன என்று அவர் கூறினார்.

 

 

 

 

இந்தியா: முதலீடு செய்ய உகந்த இடம்

இந்தியாவில் மக்களுக்கு ஏற்ற வகையில் வரிவிதிப்பு உள்ளதாக கூறிய பிரதமர், நடுத்தரப் பிரிவு மக்கள் மீதான வரிச்சுமையை குறைத்தல், வரி மதிப்பீட்டு துன்புறுத்தலை அகற்றுதல், கார்பரேட் வரி விகிதக்குறைப்பு உள்ளிட்ட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். ஜி எஸ் டி அமலாக்கம், பொருளாதார ஒருங்கிணைப்பு என்ற நிதர்சனத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். மக்களுக்கு ஏற்ற வகையிலான பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம், அந்நிய முதலீடுகள் வந்து சேரும் என்றும் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ நா மாநாடு என்னும் அமைப்பு தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து 4.0-ன் உறுதுணை

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் திட்டம் குறித்து பேசிய பிரதமர், 2014-ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலராக இருந்த பொருளாதாரம், 2019-ல் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததை சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து 4.0 மற்றும் மாற்றத்துக்கான முன்னுரிமை குறித்துப் பேசிய அவர், மதிப்பு அடிப்படையிலான பொருளாதாரமாக உள்ள தாய்லாந்து, இந்தியாவின் முன்னுரிமைத் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, தூய்மை இந்தியா இயக்கம், பொலிவுறு நகரங்கள், ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றை வரவேற்றுள்ளதாகத் தெரிவித்தார். இரு நாடுகளும் புவி அரசியல் நெருக்கம், ஒரே விதமான கலாச்சாரம், நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமம்

22 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் முறைப்படி திறந்தபோது, திரு ஆதித்ய விக்ரம் பிர்லா தாய்லாந்தில் நூற்பாலையை நிறுவினார். இன்று இந்தக் குழுமம் தாய்லாந்தில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக 1.1 பில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு தொழில்களை மேற்கொண்டுள்ளது. ஜவுளித்தொழில், கார்பன் பிளாக், ரசாயனங்கள் என பல்வேறு அதிநவீன தொழிற்சாலைகளை தாய்லாந்து முழுவதும் ஆதித்ய பிர்லா குழுமம் நடத்தி வருகிறது.



(Release ID: 1590339) Visitor Counter : 150