பிரதமர் அலுவலகம்
தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Posted On:
03 NOV 2019 5:24PM by PIB Chennai
ஆசியான் அமைப்பின் 35வது உச்சி மாநாடு, 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 16வது இந்திய- ஆசியான் அமைப்பின் உச்சிமாநாடு ஆகிய நிகழ்வுகளுக்கு இடையே தாய்லாந்து பிரதமர் ஜெனரல் (ஓய்வு) பிராயுத் சான் ஓ சா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 நவம்பர் 3 அன்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இருதலைவர்களும் பரிசீலித்தனர். அடிக்கடி நடைபெறும் உயர்மட்ட அளவிலான சந்திப்புகள், அனைத்து மட்டங்களிலும் பரிமாற்றங்கள் ஆகியவை இந்த உறவில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய இரு தரப்பினரும், ராணுவ தளவாடத் தொழில் துறையில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் ஒப்புக்கொண்டனர். கடந்த ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள 20 சதவீத வளர்ச்சியை வரவேற்ற இத்தலைவர்கள், வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான வாய்ப்பு வசதிகள் குறித்து விவாதிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளைப் பணிப்பது என்றும் முடிவு செய்தனர்.
நேரடியான மற்றும் டிஜிட்டல் வகையிலான தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும், இரு நாட்டுப் பிரதமர்களும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்துத் தொடர்பு அதிகரித்து வருவதையும், பாங்காங் நகரிலிருந்து நேரடியாக கவுஹாத்தி நகருக்குச் செல்லும் விமான சேவை தொடங்கியிருப்பதையும் தாய்லாந்தின் ரனாங் துறைமுகம் மற்றும் கொல்கத்தா, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இந்தியத் துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் இறுதியாக்கப்படுவதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
பரஸ்பரம் நன்மைதரத்தக்க பகுதியளவிலான, பலதரப்பான விஷயங்கள் மீதான கருத்துக்களையும் இருதலைவர்களும் பரிமாறிக் கொண்டனர். ஆசியான் அமைப்பு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்காக தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆசியான் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றமைக்காக அவருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய- ஆசியான் அமைப்பின் யுத்த தந்திர ரீதியான கூட்டணிக்கான ஒருங்கிணைப்பு நாடு என்ற வகையில் தாய்லாந்து நாட்டின் பங்களிப்பையும் அவர் சாதகமான வகையில் மதிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தொடர்புகள் கொண்ட கடல்வழி அருகாமை நாடுகளாக இந்தியாவும் தாய்லாந்தும் விளங்குகின்றன. தற்காலப் பின்னணியில், இந்தியாவின் “கிழக்கை நோக்கிய செயல்பாடு” என்ற கொள்கையும், தாய்லாந்து நாட்டின் “மேற்கை நோக்கிய செயல்பாடு” என்ற கொள்கையும் இந்த உறவை மேலும் ஆழமானதாக, துடிப்புமிக்கதாக, பல்வகைத் தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.
***********
(Release ID: 1590336)
Visitor Counter : 81