பிரதமர் அலுவலகம்

மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 03 NOV 2019 6:40PM by PIB Chennai

2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

 

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, அருகாமை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை ஆகியவற்றில் ஒரு கூட்டாளியாக மியன்மர் இருப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். இதற்கென, மியன்மர் வழியாக தென்கிழக்கு ஆசியப் பகுதியோடு தொடர்புகொள்ள சாலைகளை, துறைமுகங்களை, கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா உறுதியோடு உள்ளது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். மியான்மர் நாட்டின் காவல் துறை, ராணுவம், அரசு ஊழியர்கள் அதே போன்று அதன் மாணவர்கள், குடிமக்கள் ஆகியவற்றின் கொள்ளளவை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரவு தரும். கூட்டணியின் அடித்தளத்தை விரிவுபடுத்த இரு நாட்டு மக்களின் நேரடி தொடர்பு பெரிதும் உதவும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். எனவே இரு நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து தொடர்புகளை விரிவுபடுத்துவதையும், மியன்மர் நாட்டில் உள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் நலன்கள் அதிகரிப்பதையும் 2019 நவம்பர் மாத இறுதியில் யாங்கோன் நகரில் கம்போடியா, லாவோஸ், மியன்மர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கென வர்த்த நிகழ்வு ஒன்றை நடத்த இந்திய அரசின் திட்டங்களையும் அவர்கள் வரவேற்றனர்.
மியன்மரில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தி வளர்ச்சியை ஆழப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து நீடித்த வகையில் அளித்து வரும் ஆதரவை பாராட்டியதோடு  இந்தியாவுடனான கூட்டணி குறித்து தமது அரசு கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் அரசு ஆலோசகரான டா சு குயி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
 

இந்தக் கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதற்கு நிலையான, அமைதியான எல்லையே மிக முக்கியமான அம்சமாக இருக்கும் என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்திய-மியன்மர் எல்லைப் பகுதியைத் தாண்டி கலக குழுக்கள் செயல்படுவதற்கு இடம் கிடைக்கப் பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் மியன்மரின் ஒத்துழைப்புக்கு இந்தியா அளித்து வரும் மதிப்பையும் பிரதமர் இத்தருணத்தில் வலியுறுத்தினார்.

 

முன்கூட்டியே கட்டப்பட்ட 250 வீடுகளை வழங்குவது என்ற முதல் இந்திய திட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, - இவை கடந்த ஜூலை மாதம் மியன்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன -  ராக்கைன் பகுதியில் உள்ள நிலைமை குறித்து குறிப்பிடுகையில் இந்த மாநிலத்தில் மேலும் சமூக-பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகவும், நீடித்த வகையிலும்  திரும்பி வருவதை விரைவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் இவ்வாறு அவர்கள் திரும்பி வருவது இந்தியா, பங்களாதேஷ், மியன்மர் ஆகிய மூன்று அருகாமை நாடுகளின் நலன்களுக்கு உகந்த ஒன்றாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
 

 

இரு நாடுகளின் அடிப்படையான நலன்களுக்கு உகந்த வகையில் ஒத்துழைப்பின் மூலம் வலுவான உறவுகளை அங்கீகரித்த இரு தலைவர்களும் வரவிருக்கும் நாட்களில் இத்தகைய உயர்மட்டத் தொடர்புகளை தொடர்ந்து நிலைநிறுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

 

                                                       **********



(Release ID: 1590298) Visitor Counter : 140