பிரதமர் அலுவலகம்

இந்தியா-சீனா 2-ஆவது முறைசாரா உச்சிமாநாடு

Posted On: 12 OCT 2019 4:13PM by PIB Chennai
  1. இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் சீன மக்கள் குடியரசின் அதிபர் திரு ஸீ ஜின்பிங் ஆகியோர் இடையேயான 2-ஆவது முறைசாரா உச்சிமாநாடு, இந்தியாவின் சென்னையில் 11-12 அக்டோபர் 2019-ல் நடைபெற்றது. 
  2. இருதலைவர்களும், இணக்கமான சூழலில், ஆழமாக கருத்துப் பரிமாற்றம் செய்ததுடன், நீண்டகால மற்றும் சர்வதேச, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும்  விவாதித்தனர். 
  3. தேச வளர்ச்சிக்கான தத்தமது அணுகுமுறைகளையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர். 
  4. இருதரப்பு உறவு, எத்தகைய சாதகமான முறையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மதிப்பீடு செய்ததுடன், இந்தியா-சீனா இருதரப்பு கலந்துரையாடல்கள், சர்வதேச அரங்கில் இருநாடுகளின் பங்களிப்பு எந்த அளவுக்கு பிரதிபலிக்கிறது என்பது குறித்தும் விவாதித்தனர்.
  5. சர்வதேச நிலைமை, குறிப்பிடத்தக்க மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது பற்றிய கருத்துக்களை இருதலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.  அமைதியான, பாதுகாப்பான, வளமான உலகை உருவாக்க வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை இந்தியாவும் சீனாவும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என கருத்துத் தெரிவித்த தலைவர்கள், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அந்தந்த நாடுகளின் வளர்ச்சியை விதிமுறை சார்ந்த சர்வதேச நெறிமுறைகளின்படி, தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 
  6. தற்போதைய சர்வதேச அரங்கில் இந்தியாவும், சீனாவும் நிலைத்தன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளன என, சீனாவின் வூஹான் நகரில் ஏப்ரல் 2018 –ல் நடைபெற்ற முதலாவது முறைசாரா உச்சிமாநாட்டின் போது ஏற்பட்ட கருத்தொற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், தங்கள் இடையேயான கருத்து வேறுபாடுகளை விவேகமான முறையில் தீர்த்துக் கொள்வது எனவும், கருத்து வேறுபாடுகள்  பிரச்சினையாக உருவெடுக்க அனுமதிப்பதில்லை என்றும் உறுதிபட தெரிவித்தனர்.
  7. 21 ஆம் நூற்றாண்டின் புதிய யதார்த்த சூழ்நிலையை  பிரதிபலிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் மூலம், விதிமுறை சார்ந்த மற்றும் உள்ளடக்கிய சர்வதேச விதிமுறைகளை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவும், சீனாவும் பொதுவான கருத்தைக் கொண்டுள்ளதாக இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக நடைமுறைகள் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், விதிமுறை சார்ந்த பலதரப்பு வர்த்தக நடைமுறைக்கு ஆதரவு அளித்து வலுப்படுத்துவது அவசியம் என்பதை இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய வர்த்தக நடைமுறைகளை உருவாக்க இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து பாடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
  8. பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு உள்ளிட்ட சர்வதேச வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான முயற்சிகளையும் இருதலைவர்களும் சுட்டிக்காட்டினர்.  இருநாடுகளும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் முயற்சிகள், சர்வதேச சமுதாயம் அதன் இலக்குகளை அடைய உதவும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். 
  9. பயங்கரவாதம் தொடர்ந்து பொதுவான அச்சுறுத்தலாக உள்ளது குறித்து இருதலைவர்களும் கவலை தெரிவித்தனர்.   பரப்பளவு பெரிதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ள இருநாடுகளும், உலகம் முழுவதும் தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி அளித்து நிதியுதவி செய்து ஆதரவு அளிப்பதற்கு எதிரான நடைமுறையை சர்வதேச சமுதாயம் பாரபட்சமற்ற முறையில் வலுப்படுத்துவதை உறுதி செய்ய தொடர்ந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொண்டனர்.
  10. தலைசிறந்த பாரம்பரியத்துடன் கூடிய தற்கால நாகரீகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற முறையில், இருநாட்டு மக்கள் இடையேயான கலாச்சார புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை அதிகரிப்பதன் அவசியத்தையும் இருதலைவர்களும் குறிப்பிட்டனர்.  வரலாற்று ரீதியான பெரும் நாகரீகங்கள் கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில்,  பேச்சுவார்த்தைகளை   அதிகரிக்கவும், உலகின் பிற பகுதிகளில் உள்ள கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை புரிந்து கொள்ளவும், ஒருங்கிணைந்து பாடுபடுவது என்றும் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
  11. வெளிப்படையான, உள்ளடக்கிய, வளமான மற்றும் நிலையான சூழல் இந்த பிராந்தியத்தில் நிலவ வேண்டியதன் அவசியம் பற்றிய கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.  பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய மற்றும் பிராந்திய அடிப்படையிலான, பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
  12. கடந்த 200 ஆண்டுகளில் இந்தியா- சீனா மக்களிடையேயான நேரடி தொடர்புகள் மற்றும் பண்டைக்கால வர்த்தகப் பிணைப்புகள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.  அந்த வகையில், தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திற்கும் இடையே சகோதர மாநில உறவை ஏற்படுத்தவும் இருதலைவர்களும் ஒப்புக் கொண்டதுடன், அஜந்தா மற்றும் துன்ஹூவாங் (Dunhuang) இடையிலான அனுபவத்தின் அடிப்படையில், மகாபலிபுரத்திற்கும், ஃபுஜியான் மாகாணத்திற்கும் இடையிலான பிணைப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதோடு, இருநாடுகள் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் விரிவான தொடர்புகளை கருத்தில் கொண்டு, சீனா-இந்தியா இடையேயான கடல்சார் உறவுகள் குறித்து ஆராய்ச்சி செய்யவும், அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
  13. அவரவர் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த, பரஸ்பர தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.  இந்தியாவும், சீனாவும் ஒரே நேரத்தில் வளர்ச்சி அடைவது, இருநாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  எனவே, நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான பொதுவான நோக்கத்தின் அடிப்படையில், இருநாடுகளும், சாதகமான, நடைமுறைக்கு உகந்த வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றுவதுடன், ஒருவர் மற்றவரது கொள்கைகளை மதிப்பீடு செய்வதை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.  அந்த வகையில், பரஸ்பர பயன் அளிக்கக்கூடிய அனைத்து விவகாரங்களிலும், இருநாட்டுத் தலைவர்கள் இடையிலான தொடர்பை தொடர்ந்து மேம்படுத்த ஒப்புக்கொண்ட அவர்கள்,  பேச்சுவார்த்தை நடைமுறைகளை முழுமையாக பயன்படுத்தி உயர்மட்ட அளவில் பரிமாற்றம் செய்து கொள்வதை தொடரவும் முடிவு செய்யப்பட்டது.
  14. இருதரப்பு நட்புறவை சாதகமான வழியில் முன்னெடுத்துச் செல்வதன் மூலம், அதனை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இருதலைவர்களும் தெரிவித்தனர்.  இந்த முயற்சிக்கு இருநாட்டு மக்களின்  ஆதரவு தேவை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.  எனவே, 2020 ஆம் ஆண்டை இந்தியா-சீனா கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான பரிமாற்றங்களுக்கான ஆண்டாக அறிவிக்க இருதலைவர்களும் முடிவு செய்ததுடன், இந்தியா – சீனா இடையேயான உறவுகள் ஏற்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைவதை  முழுமையாக பயன்படுத்தி, அனைத்து மட்டங்களிலும், பரிமாற்றங்களை அதிகரிப்பதுடன், குறிப்பாக சட்டப்பேரவைகள், அரசியல் கட்சிகள், கலாச்சார மற்றும் இளைஞர் அமைப்புகள் மற்றும் இருநாட்டு ராணுவம் இடையே பரிமாற்றங்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.   இருநாடுகள் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக, இருநாட்டு நாகரீகங்கள் தொடர்பான வரலாற்று ரீதியான பிணைப்பை ஆராய,  கப்பலில் மாநாடு நடத்துவது உட்பட,  இருநாடுகளிலும் 70 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 
  15. பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகரித்து, வளர்ச்சிக்கான நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் தொடர்ச்சியாக, உயர்மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான நடைமுறைகளை உருவாக்கவும், இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தில் சமச்சீரான தன்மையை அதிகரிக்கவும், இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். உற்பத்தியில் ஒத்துழைப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பரஸ்பர முதலீடுகளை ஊக்குவிக்கவும், இதுதொடர்பான கருத்துக் குறித்து இருநாட்டு உயர்மட்ட அளவிலான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைகளை மேம்படுத்துமாறு அந்தந்த நாட்டு அதிகாரிகளை அறிவுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  16. எல்லைப் பிரச்சினை உட்பட, இருநாடுகள் இடையே தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.  இருநாட்டு சிறப்புக் குழுவின் பணிகளை வரவேற்ற தலைவர்கள்,  இந்தக் குழுவினர் அவர்களது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, உண்மையான, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வை உருவாக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.  இந்த தீர்வு இருநாடுகளும் 2005-ம் ஆண்டில் ஒப்புக் கொண்ட அரசியல் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுக் கொள்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன், எல்லைப் பகுதியில் அமைதியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்ற, தங்கள் இடையேயான புரிந்துணர்வை மீண்டும் உறுதிப்படுத்தினர்.  இந்த குறிக்கோளை அடைய ஏதுவாக இருதரப்பிலும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  17. முறைசாரா உச்சிமாநாட்டு நடைமுறையின் நன்மைகளை பிரதமர் மோடியும், அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஆய்வு செய்ததோடு, ‘வூகான் உணர்வு’ மற்றும் ‘சென்னை சந்திப்பு’ அடிப்படையில் தலைவர்கள் அளவிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தி பேச்சுவார்த்தையை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.  இந்த நடைமுறையை எதிர்காலத்திலும் தொடரவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.   3-வது முறைசாரா உச்சிமாநாட்டிற்காக சீனா வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் ஸீ அழைப்பு விடுத்தார்.  இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

*************



(Release ID: 1587922) Visitor Counter : 209