பிரதமர் அலுவலகம்

குளோபல் கோல்கீப்பர் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 SEP 2019 7:12AM by PIB Chennai

திருமதி மற்றும் திரு கேட்ஸ் அவர்களே,

பெரியோர்களே,

நண்பர்களே,

இந்த கவுரவத்திற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். இந்த கவுரவம் எனக்கானது அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்குரியது. அவர்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் உறுதியை நிரூபித்தது மட்டுமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தினார்கள். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து இந்த விருதினைப் பெறுவது இரண்டு காரணங்களால் எனக்கு முக்கியமானது. முதலாவதாக, இந்த அறக்கட்டளை தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியப் பங்குதாரராக இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றியிருக்கிறது. இரண்டாவதாக, சொந்த வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்த பின் சமூக வாழ்க்கைக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தற்போது பங்களிப்பு செய்து வருகிறார்கள். பெரு வியப்போடு இதனை நான் பார்க்கிறேன்.

நண்பர்களே,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டில் இந்த விருதினைப் பெறுவது தனிப்பட்ட முறையிலும்கூட எனக்கு மிகவும் முக்கியமானதாகும். 130 கோடி இந்தியர்களும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்து விட்டால், எந்தவொரு சவாலையும் வெல்ல முடியும் என்பதற்கு இது நிரூபணமாகும். 5 ஆண்டுகளுக்கு முன், தூய்மை இந்தியா பற்றி நான் குறிப்பிட்டபோது, எந்த வகையான எதிர்வினைகள் இருந்தன என்பதை நான் நினைவில் கொண்டுள்ளேன். இன்றும் கூட மக்கள் என்னை இகழ்கிறார்கள். ஆனால், எந்தவொரு பணியும் ஒரு இலக்கோடு, ஒரு நோக்கத்தோடு, ஒரு உறுதியோடு இருக்கும்போது இத்தகைய விஷயங்கள் ஒரு பொருட்டே அல்ல. எமது நாட்டினைத் தூய்மைப்படுத்த 130 கோடி இந்தியர்களும் ஒருங்கிணைந்து வந்து கொண்டிருப்பதுதான் எனக்கு முக்கியம். தூய்மைக்காக 130 கோடி இந்தியர்களிடையே ஒரு பார்வையை உருவாக்குவதுதான் எனக்கு முக்கியம். இந்தியாவைத் தூய்மையாக்க 130 கோடி இந்தியர்களும் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் எனக்கு முக்கியம். எனவே, தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, தூய்மைக்குத் தங்களின் அன்றாட வாழ்க்கையில் உயர் முன்னுரிமை அளிக்கத் தொடங்கிய இந்தியர்களுக்கு இந்த கவுரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன். கிராமத்தில் கழிப்பறை கட்டுவதற்காகத் தனது ஆடுகளை விற்ற ஒரு மூதாட்டி பற்றி நான் இன்று குறிப்பிட விரும்புகிறேன். கழிப்பறைகள் கட்டுவதற்காகத் தங்களின் முழு ஓய்வூதியத்தையும் நன்கொடையாக வழங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பற்றி இன்று நான் குறிப்பிட விரும்புகிறேன். தனது வீட்டில் கழிப்பறை கட்டுவதற்காகத் தனது தாலியை விற்ற ஒரு பெண்ணைப் பற்றி நான் இன்று குறிப்பிட விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

சமீபத்தில் இத்தகைய ஒரு பிரச்சாரத்தை எங்கும் கேட்டதில்லை. எந்த நாட்டிலும் பார்த்ததில்லை. இந்தப் பிரச்சாரத்தை எமது அரசு தொடங்கியது.  ஆனால், மக்கள் தாங்களாகவே அதற்குத் தலைமையேற்று நடத்திச் சென்றனர். இதன் பயனாக, கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டமுடிந்துள்ளது. இது ஒரு சாதனையாகும். இதன் பயனாக     2014-க்கு முன் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த ஊரகத் துப்புரவு, தற்போது, ஏறத்தாழ 100 சதவீதத்தை எட்டியுள்ளது. சுதந்திரத்திற்குப்பின் 70 ஆண்டுகளில் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததையும், 5 ஆண்டுகளில் 100 சதவீதம் ஆனதையும் கற்பனை செய்து பாருங்கள். ஆனால், தூய்மை இந்தியா இயக்கம் எந்தவொரு எண்ணிக்கையையும் கடந்து, வெற்றிபெற்றிருப்பதாக நான் நம்புகிறேன். சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கு இந்த இயக்கம் மகத்தான பயனை அளித்திருக்கிறது என்றால் அது நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு,  நாட்டின் பெண்களுக்கு. ஓரளவு வசதிபடைத்தவர்கள், தங்களின் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று கழிப்பறைகள் கட்டுவது இயல்பு. ஆனால் இந்த வசதியைப் பெற முடியாதவர்கள் ஒரு நல்ல கழிப்பறை இல்லாததன் வலியை அறிவார்கள். பெண்களுக்கு, குறிப்பாக, மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு கழிப்பறை இல்லாதிருப்பது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் துயரமாகும். இது அவர்களின் கவுரவத்திற்கு எதிரானது. ஒட்டுமொத்த நிலையைப் பற்றி அக்கறை கொள்வதை தவிர வீட்டில் கழிப்பறைகள் கட்டுவதன் முக்கியத்துவம் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை என்பது எனது சொந்த அனுபவமாகும். பெண்கள், மாலைப்பொழுதின் வருகைக்காக ஒரு நாள் முழுவதும் காத்திருப்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா! திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் தவிர இவ்வாறு காத்திருப்பதும் பல நோய்களில் அவர்களைத் தள்ளுகிறது.

கழிப்பறைகள் இல்லாததன் காரணமாக பல சிறுமிகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். எமது புதல்விகள் படிக்க விரும்புகிறார்கள். ஆனால், கழிப்பறைகள் இல்லாததால் பள்ளியைவிட்டு  வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு வீட்டில் இருந்து கொள்கிறார்கள். இந்த நிலையிலிருந்து நாட்டில் உள்ள ஏழைப் பெண்களையும், புதல்விகளையும் மீட்பது எமது அரசின் பொறுப்பாக இருந்தது. இந்தப் பணியை எங்களின் அனைத்து பலத்தோடும், நேர்மையோடும் நாங்கள் செய்திருக்கிறோம். தூய்மை இந்தியா இயக்கம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை வழியாக மாறியிருப்பது எனக்கு மிகப்பெரும் திருப்தியை அளிக்கிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, தூய்மை இந்தியா திட்டம் காரணமாக மூன்று லட்சம் வாழ்க்கையைப் பாதுகாப்பது சாத்தியமாகியுள்ளது. இதே போல், கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதன் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை சேமித்திருப்பதாக யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் புதிய அறிக்கைபடி, இந்தியாவில் ஊரக சுகாதாரம் அதிகரித்திருப்பதால் சிறார்களிடையே இதயப் பிரச்சினை குறைந்துள்ளது. பெண்களின் உடல் எடை குறியீடு மேம்பட்டுள்ளது என நான் அறிகிறேன். தூய்மையால் இவ்வளவு பயன்கள் இருப்பதை அறிந்துதான் மகாத்மா காந்தி சுதந்திரத்தை விட தூய்மை மிகவும் முக்கியமானது என்று கருதினார். மகாத்மா காந்தியின் தூய்மைக் கனவு இப்போது நனவாகி இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். முழு தூய்மையாக இருக்கும்போது மட்டுமே, முழு நிறைவான கிராமத்தைக் கட்டமைக்க முடியும் என்று காந்தி அவர்கள் கூறுவார். இன்று நாங்கள் வெறும் கிராமங்களை மட்டுமல்ல, தூய்மையில் ஒட்டுமொத்த நாட்டையும் முழு நிறைவானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

 

சகோதர, சகோதரிகளே,

ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டதில் இருந்தே, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.  தூய்மை இந்தியா இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி இருப்பதோடு மட்டுமின்றி, அவர்களது கண்ணியத்தை பாதுகாத்திருப்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் மற்றொரு ஆய்வு குறித்தும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.  கடந்த ஐந்தாண்டுகளில் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, இதற்கு தூய்மை இந்தியா இயக்கம் முக்கிய பங்கு வகித்திருப்பதாக நான் நம்புகிறேன்.  தூய்மை இந்தியா இயக்கம் ஏற்படுத்தியுள்ள மற்றொரு விளைவு குறித்தும் இதுவரை பெரிதாக பேசப்படவில்லை.  இந்த இயக்கத்தின் வாயிலாக, 11 கோடிக்கும் மேற்பட்ட  கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதன் மூலம்,  கிராமப்புற அளவில் பொருளாதார மேம்பாட்டிற்கும் புதிய வழி பிறந்துள்ளது.  கழிப்பறை கட்டுவதற்கு தேவையான மூலப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் கட்டுமானப் பணியில் பெண்களுக்கு முக்கியப் பணி வழங்கப்பட்டிருப்பதன் மூலம், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள ஏழைகளுக்கு புதிய வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நண்பர்களே,

நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் மக்களை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான், ஜனநாயகம் என்பதற்கு எளிய அர்த்தமாகும்.  மக்களின் தேவைகளை மையப்படுத்தி கொள்கைகளை உருவாக்குவதுதான் வலுவான ஜனநாயகமாக இருக்க முடியும்.  மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளோடு, அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளும் ஒரே பாதையில் செல்லும்போதுதான், திட்டப் பணிகளை மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்.  ஜனநாயகம் அளித்துள்ள இந்த அதிகாரம்தான் தூய்மை இந்தியா இயக்கத்திலும் பிரதிபலித்தது.  அரசியல் சட்ட நடைமுறைக்கு உயிரூட்டுவதற்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றியும் ஒரு உதாரணமாகும். 

நண்பர்களே,

கூட்டாட்சி அரசமைப்பு முறையைத் தான் இந்தியா பன்னெடுங்காலமாக பார்த்து வருகிறது.  எங்களது அரசுதான் இதனை கூட்டுறவு கூட்டாட்சி முறையாக மாற்ற முயற்சித்து வருவதோடு, தற்போது போட்டி மிகுந்த கூட்டுறவு கூட்டாட்சிப் பாதையை நோக்கிச் செல்லவும் வழிவகுத்துள்ளோம்.  இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்ததற்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கழிப்பறைகள் கட்டுமானப் பணியிலும் பணியாற்ற வைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.  இந்த இயக்கத்தை மேற்கொண்ட போது, தூய்மைப் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும், மாநிலங்களையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டது.  பயிற்சி அளிப்பது முதல் நிதியுதவி அளிப்பது வரை எந்த வகையிலும் விட்டுவிடவில்லை.  பல்வேறு  வகையிலும் மாநிலங்களுக்கு உதவிபுரிவதோடு, தூய்மை இந்தியா இயக்கத்தை அவர்கள் விரைவுபடுத்தி அவர்களது முறையிலேயே செயல்படுத்தி முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.  தற்போது மேற்கொள்ளப்பட்ட சுகாதார ஆய்வின்படி, தூய்மைப்பட்டியலில் முதலிடம் பெறுவதில் மாநிலங்கள் இடையே போட்டி ஏற்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

நண்பர்களே, முக்கிய பிரமுகர்களே,

ஒட்டுமொத்த உலகையும் ஒரு குடும்பமாக நாம் கருதும் வேளையில், உலகிற்கு இந்தியா வழங்கியுள்ள இந்த பங்களிப்பு மனநிறைவை அளிக்கிறது.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு, “தாராளமான சரிதனம் வாசுதைவ குடும்பகம்” என்றே நமக்கு கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.  அதனால்தான் அடிமட்டத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, நல்ல மனதுடையவர்களாக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பமாக இருக்கிறோம்.  எனவேதான், துப்புரவு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகிக்க இந்தியா விரும்புகிறது. நமது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம்.  தூய்மைப் பணியில் இந்தியா தனது இலக்கை எட்டவுள்ள  நிலையில், மற்ற திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தும் முனைப்பில் இந்தியா பணியாற்றி வருகிறது.  கட்டுடல் இந்தியா இயக்கத்தின் மூலம், ஆரோக்கியமான உடல்  மற்றும் தடுப்பு மருத்துவ சேவையை ஊக்குவிக்கவும் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.  2025 ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவை காசநோய் பாதிப்பு இல்லாத நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதோடு, உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தையும், விரைவாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.  தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் மூலம், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளிலிருந்து இந்தியா வேகமாக விடுபட்டு வருகிறது.  ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் தண்ணீரை சேமிப்பதோடு, மறுசுழற்சி செய்வதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான அளவிற்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கச் செய்வதே நமது முக்கிய நோக்கமாகும். 

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை 2022 ஆம் ஆண்டுக்குள் தவிர்ப்பது குறித்தும், மாபெரும் இயக்கத்தை இந்தியா தொடங்கியுள்ளது.  தற்போது நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளையிலேயே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.  130 கோடி இந்திய மக்களின் வலிமையில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.  தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் அதுபோன்ற பிற இயக்கங்களும் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.  இந்த எதிர்பார்ப்போடு எனது உரையை நான் நிறைவு செய்துகொள்வதுடன்,  இந்த விருதை வழங்கியமைக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உரித்தாக்குவதோடு இங்கு குழுமியுள்ள பிற நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றிகள் பல!!!

***********



(Release ID: 1587124) Visitor Counter : 178