பிரதமர் அலுவலகம்

ஐநா பொதுச்சபையில் பிரதமர் உரை நிகழ்த்தினார்

Posted On: 27 SEP 2019 9:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 74 ஆவது அமர்வில் உரையாற்றினார்.

மகாத்மா காந்தியைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், காந்திஜியின் வாய்மையும், அஹிம்சையும் உலகத்தில் அமைதி வளம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு இன்றும் பொருத்தமாக உள்ளன என்றார்.

தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத், ஜன்தன் திட்டம், டிஜிட்டல் அடையாளம் (ஆதார்) போன்ற அரசின் மக்களுக்கு உகந்த  முன்முயற்சிகள் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்புக்கு இந்தியாவின் உறுதி பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு, அடுத்த ஐந்தாண்டுகளில் காசநோய் ஒழிப்பு போன்றவற்றில் அரசின் உறுதி பற்றியும் அவர் பேசினார்.

இந்திய கலாச்சாரம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், பொது நலன் என்பது எமது கலாச்சார மரபின் ஒரு பகுதியாகும் என்றார். பொதுமக்கள் பங்கேற்புடன் பொதுமக்கள் நலன் என்பது எமது அரசின் தாரக மந்திரமாக உள்ளது என்று அவர் கூறினார். 

130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதோடு, ஒட்டுமொத்த உலகம் பயனடைவதாகவும், அரசின் முயற்சிகள் உள்ளன என்றார். “எமது மக்களின் நல்வாழ்வுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நல்வாழ்வுக்காகவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம், அதனால் எங்களின் குறிக்கோள் அனைவரும் இணைவோம்-அனைவரும் வாழ்வோம், அனைவரையும் அரவணைப்போம் என்பதாக  உள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய சவாலாக இருப்பது பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட பிரதமர், மனித குலத்தின் நலனுக்காக அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  “உலகத்திற்குப் போரைத் தராமல், அமைதிக்கான புத்தரின் போதனையைத் தந்த நாடு இந்தியா” என்று பிரதமர் கூறினார். ஐநா அமைதிப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் அவர் எடுத்துரைத்தார். 

பலதரப்பு ஒத்துழைப்பு என்ற புதிய வழிகாட்டுதலை சர்வதேச சமூகம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.  உலகம் புதிய சகாப்தத்திற்குள் செல்லும் நிலையில், நாடுகள் தங்களின் விருப்பங்களைத் தங்களின் எல்லைக்குள்ளேயே சுருக்கிக் கொள்ள இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.  “பிளவுபட்ட உலகம் என்பதால் ஒருவருக்கும் பயனில்லை.  பலதரப்பு ஒத்துழைப்பு என்பதற்கு நாம் அழுத்தம் தர வேண்டும்.  ஐநா சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்”, என்றும் பிரதமர் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்த தமிழ் தத்துவ ஞானி கணியன் பூங்குன்றனார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மேற்கோள்களைப் பிரதமர் எடுத்துக்காட்டினார்.  ‘நல்லிணக்கமும்-அமைதியும்’ என்பது உலகின் மற்ற நாடுகளுக்கு  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் செய்தியாகும் என்று அவர் கூறினார்.

புவி வெப்பமயமாதல் குறித்து பேசிய பிரதமர், தனிநபர் விகிதத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ள போதும், இந்தப் பிரச்சினைக்கு எதிராக இந்தியா முன்னிலையில் உள்ளது என்றார்.  450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கு, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கம் உட்பட பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிட தமது அரசு மேற்கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் விவரித்தார்.

***************



(Release ID: 1586572) Visitor Counter : 155