பிரதமர் அலுவலகம்

நியூயார்க்கில் புளூம்பெர்க் உலக வணிக அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 25 SEP 2019 7:00PM by PIB Chennai

நண்பர்களே,

உலக வணிகம் மற்றும் பொருளாதாரத்தின்  முக்கிய மையமாக இருக்கும் நியூயார்க்கில் உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் உணர்வுகள் மற்றும் வளமான வாய்ப்புகள், இந்தியாவின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்ப லட்சியங்கள், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்கால பாதை குறித்துப் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக புளூம்பெர்க் வணிக அமைப்புக்கு நான் மிகவும் நன்றிக்குரியவனாக இருக்கிறேன்.

நண்பர்களே,

ஐந்தாண்டு கால பணியின் அடிப்படையில் மக்களைச் சந்தித்து அதிக உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதே அரசை இன்று நீங்கள் இந்தியாவில் மீண்டும் பார்க்கிறீர்கள். உங்களுடைய உரையாடல்களில் அடிக்கடி நீங்கள் வணிக விஷயங்கள் பற்றிக் குறிப்பிடுவீர்கள். 130 கோடி இந்தியர்கள் தங்களுடைய உணர்வுகளை மட்டும் காட்டவில்லை. ஆனால் வளர்ச்சி தான் மிகப் பெரிய முன்னுரிமைக்கான விஷயம் என்று அவர்கள் தீர்ப்புஅளித்துள்ளனர். வளர்ச்சிக்கு ஆதரவாக கிடைத்துள்ள இந்த வலுவான ஆதரவு, உண்மையில் இந்தியாவில் புதிய வாய்ப்புகளுக்கான அறிவிப்பாக இருக்கும் என்பதை இங்கு அமர்ந்துள்ள தொழிலதிபர்களால் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்கு, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்துவதற்காக மிகப் பெரிய மற்றும் மிகவும் கடுமையான முடிவுகளை எடுக்கத் தயங்காத அரசின் பக்கம் இந்திய மக்கள் நிற்கிறார்கள். தொழில் உலகம் மற்றும் சொத்து வளம் உருவாக்கத்தை மதிக்கக் கூடிய ஓர் அரசு இன்றைக்கு இந்தியாவில் இருக்கிறது.

நண்பர்களே,

கார்ப்பரேட் வரிகளைக் கடுமையாகக் குறைக்க சில தினங்களுக்கு முன்பு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதலீட்டு நிலையில் இது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கை. நான் சந்தித்த அல்லது பேசிய தொழிலதிபர்கள் அனைவரும் இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில், முதலீட்டை அதிகரிப்பதற்காக அரசு ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருந்த அதுபோன்ற 50க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை நாங்கள் ரத்து செய்திருக்கிறோம். புதிய அரசு பொறுப்பேற்று  மூன்று - நான்கு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். கடக்க வேண்டிய காலம் நிறைய இருக்கிறது. இந்தப் பயணத்தில் இந்தியாவுடன் பங்கேற்று செயல்பட தொழில் உலகத்தினருக்கு இது பொன்னான ஒரு வாய்ப்பு.

நண்பர்களே,

பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் எங்களுடைய வேகமான வளர்ச்சி  இருக்கும் என்ற பிரத்யேகமான நிலையில் இந்தியா இருக்கிறது.எங்கள் மக்கள் வறுமையை வேகமாக ஒழித்து, பொருளாதார ஏணியில் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வு பழக்கங்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர். நுகர்வு இருக்கும் ஒரு சந்தையில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். எங்களுடைய நடுத்தர வர்க்கம் என்பது அதிக மக்கள் தொகையைக் கொண்டது. உயர் விருப்பங்கள் மற்றும் உலகளாவிய பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நவீன போக்குகளும், அம்சங்களும் வரவேற்கப்படும் ஒரு சந்தையில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள். எங்களுடைய இளைஞர்கள் -ஆப் - பொருளாதாரத்தை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். உணவில் இருந்து போக்குவரத்து வரை, திரைப்படங்கள் முதல் தங்கள் பகுதியில் பொருட்களை வரவழைத்து வாங்குவது வரை, ஸ்டார்ட் அப் திட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. எனவே, பெரிய சந்தை வாய்ப்புள்ள ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள். எங்களுடைய கட்டமைப்பு உருவாக்கும் முயற்சிகள் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைகள் முதல் மெட்ரோக்கள் வரை, ரயில்வே தொடங்கி துறைமுகங்கள் வரை, விமான நிலையங்கள் தொடங்கி இருப்புக் கிடங்குகள் வரை ஒவ்வொரு துறையிலும் பெருமளவு முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மிகப் பெரிய கட்டமைப்பு சூழலில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் பெரு நகரங்களை நாங்கள் வேகமாக நவீனமயமாக்கி வருகிறோம். நவீன தொழில்நுட்ப வசதிகளை அங்கு உருவாக்கி, குடிமக்களுக்கு உகந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். எனவே, நகரமயமாக்கலில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புத் துறையைத் திறந்து விட்டிருக்கிறோம். இந்தியாவில் தயாரிக்க, இந்தியாவுக்காக மற்றும் உலகிற்காக தயாரிக்க நீங்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்.

நண்பர்களே,

இன்றைக்கு கட்டமைப்பு மேம்பாட்டில் எங்கள் அரசு முதலீடு செய்யும் அளவுக்கு, முன் எப்போதும் செய்யப்படவில்லை. வரக்கூடிய ஆண்டுகளில் நவீன கட்டமைப்பு வசதிகளுக்காக நாங்கள் 100 லட்சம் கோடி ரூபாய், அதாவது சுமார் 1.3 டிரில்லியன் டாலர்கள் செலவிட உள்ளோம். இதுதவிர, இந்தியாவின் சமூகக் கட்டமைப்புக்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கான தரம் மற்றும் அளவுக்கான பாதை வகுக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்தியாவுக்குப் பெரிய இலக்கு உள்ளது - 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுவது என்பது அந்த இலக்கு.

நண்பர்களே,

நாங்கள் 2014ல் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் மேலும் ஒரு டிரில்லியன் டாலர்களை சேர்த்திருக்கிறோம். இப்போது 5 டிரில்லியன் டாலர்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.

நண்பர்களே,

இந்தப் பெரிய இலக்கை எட்டுவதற்கான திறனும் தைரியமும் எங்களுக்கு உள்ளது. சூழ்நிலைகளும் எங்களுக்கு சாதகமாக உள்ளன. இன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சியில், உலகில் வேறெங்கும் கிடைக்காத, நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன. ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை மற்றும் தீர்மானிக்கும் தன்மை ஆகியவை அந்த 4 அம்சங்களாக உள்ளன. ஜனநாயகம் என்ற முதலாவது விஷயத்தைப் பற்றி நான் பேச முற்பட்டால், பல தசாப்தங்களுக்குப் பிறகு இத்தகைய அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. ஜனநாயகம், அரசியல் ஸ்திரத்தன்மை, கணிக்கக் கூடிய கொள்கை மற்றும் சுதந்திரமான நீதித் துறை இருந்தால், பாதுகாப்பு, முதலீட்டுக்கான உத்தரவாதம் மற்றும் வளர்ச்சி ஆகியவை தானாகவே ஏற்படும்.

நண்பர்களே,

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இளம் மற்றும் சக்திவாய்ந்த திறனாளர்களின் பங்களிப்பு காரணமாக இந்த வளர்ச்சி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைக்கு மிக அதிக அளவு பொறியியல் கல்வி அடித்தளம் கொண்டதாகவும், உலகில் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் உள்ள நாடாகவும் இந்தியா இருக்கிறது. ஊக்குவிப்பு காரணமாக இந்திய இளைஞர்கள் புதுமை சிந்தனைகளை உருவாக்கி வருவதால், ஒற்றை நோக்கம் கொண்ட பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

நண்பர்களே,

மூன்றாவது அம்சம் தேவை என்பதாகும். இந்தியாவின் பெருமளவு மக்கள் தொகை பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று வருவதால், வாங்கும் சக்தி அதிகரித்து வருகிறது, அதனால் தேவையும் அதிகரிக்கிறது. உதாரணமாக, விமான பயணப் போக்குவரத்து வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் இரட்டை இலக்கங்களில் உள்ளது. அதன் பயனாக, இன்றைக்கு உலக அளவில் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

நண்பர்களே,

ஜனநாயகம், மக்கள் தொகை,தேவை ஆகியவற்றுடன் இந்தியாவை இன்றைக்கு விசேஷமானதாக ஆக்கியுள்ள அடுத்த அம்சம் தீர்மானிக்கும் தன்மை. பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி ஜனநாயகமாக இருந்தாலும், இந்தியா முழுக்க தடையற்ற, பங்கேற்புடன் கூடிய, வெளிப்படையான செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நிறைய வரிகள் இருந்த இந்தியாவில், இப்போது ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஒரே மறைமுக வரி காலகட்டம் வந்துள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் வணிகக் கலாச்சாரமாக அது மாறியுள்ளது.

ஐ.பி.ஆர். மற்றும் டிரேட்மார்க் விதிகளை பலப்படுத்தவும் நாங்கள் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்.

அதேபோல,  திவால் மற்றும் முறிநிலையை எதிர்கொள்ளும் நிறுவனங்களைக் கையாள திவால் மற்றும் முறிநிலை விதிகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

வரி தொடர்பாகவும், பங்குச் சந்தை முதலீடு மீதான வரி தொடர்பாகவும் உலகளாவிய வரிகளுக்கு இணையாக, தேவையான சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.

வரி சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் மிகப் பெரிய நிதி பங்கேற்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக கடந்த 4 - 5 ஆண்டுகளில் 370 மில்லியன் மக்கள் வங்கிகள் நடைமுறையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து குடிமக்களும் பிரத்யேக அடையாள எண், செல்போன் மற்றும் வங்கிக் கணக்கு பெற்றிருக்கிறார்கள். அதன் பயனாக, பயனாளிகளுக்கு நேரடியாக சேவை கிடைக்கச் செய்யும் வசதி அதிகரித்துள்ளது. இடையில் பணம் வீணாவது நிறுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை பல மடங்கு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

புதிய இந்தியாவில், ஒழுங்குமுறைகளை தளர்த்த, உரிமங்களை தளர்த்த, தடைகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தொடங்கியிருக்கிறோம். அதுபோன்ற சீர்திருத்தங்களின் காரணமாக, ஒவ்வொரு உலகளாவிய தர மதிப்பீடுகளிலும் இந்தியா தொடர்ச்சியாக சிறப்பான இடத்தைப் பெற்று வருகிறது. சரக்கு கையிருப்பு செயல்பாட்டுக் குறியீட்டில் 10 புள்ளிகள் முன்னேற்றம், உலகளாவிய போட்டிநிலைக் குறியீட்டில் 13 புள்ளிகள் முன்னேற்றம், உலகளாவிய புதுமை சிந்தனைக் குறியீட்டில் 24 புள்ளிகள் முன்னேற்றம் மற்றும் மிக முக்கியமாக தொழில் செய்வதில் எளிதான நிலை குறித்த உலக வங்கி அறிக்கையில் 65 இடங்கள் முன்னேற்றம் ஆகியவை அபாரமானவை. மேலும் நண்பர்களே, இந்த முன்னேற்றங்கள் சாதாரணமாக நடந்து விடாது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். கள நிலைக்குச் சென்று அதற்கேற்ற ஏற்பாடுகள் / முறைமைகளை மேம்படுத்தி, விதிகளை எளிமையாக ஆக்கினோம். உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெற முன்பு பல ஆண்டுகள் ஆகும். இப்போது சில நாட்களிலேயே மின் இணைப்பு தரப்படுகிறது. அதேபோல ஒரு நிறுவனத்துக்குப் பதிவு செய்ய, முன்பு பல வாரங்கள் தேவைப்படும். இப்போது சில மணி நேரத்தில் நிறுவனத்துக்குப் பதிவு செய்ய முடியும். கடந்த 5 ஆண்டுகளில் என்ன மாறியுள்ளது என்பதற்கு நான் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 286 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பாதியளவு ஆகும். இந்தியாவில் அமெரிக்கா செய்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 50 சதவீத முதலீடுகள் கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்டவை. உலகெங்கும் வெளிநாட்டு நேரடி முதலீடு குறைந்து வரும் நிலையில், இங்கு அதிகரித்துள்ளது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. 90 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தானாக நடைபெறும் வழிமுறையில் வந்தவை. 40 சதவீத முதலீடுகள் கிரீன்பீல்டு முதலீடுகள். அதாவது இன்றைக்கு இந்தியா மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நீண்ட கால நோக்கில் அவர்கள் இங்கு வருகிறார்கள்.

நண்பர்களே,

புளூம்பெர்க்கின் அறிக்கையே இந்தியாவில் இப்போது நடந்து வரும் மாற்றங்களுக்கு அத்தாட்சியாக உள்ளது. புளூம்பெர்க்கின் தேசிய பிராண்ட் ட்ராக்கர் - 2018 கணக்கெடுப்பின்படி ஆசியாவில் முதலீட்டளவில் இந்தியா 1வது இடத்தைப் பிடித்துள்ளது. 10 குறியீடுகளில் 7 பெற்ற பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது - அரசியல் ஸ்திரத்தன்மை, கரன்சி ஸ்திரத்தன்மை, உயர்தரமான பொருட்கள், ஊழல் எதிர்ப்பு, குறைந்த விலையில் உற்பத்தி, முக்கியமான அமைவிடம் மற்றும் ஐ.பி.ஆர்.-க்கான மரியாதை ஆகியவற்றில் முதலிடத்தில் உள்ளது. மற்ற குறியீடுகளிலும் இந்தியா உயர் இடங்களில் உள்ளது.

நண்பர்களே,

உங்களுடைய உயர் விருப்பங்களும் எங்களுடைய கனவுகளும் முழுமையாகப் பொருந்தியுள்ளன; உங்கள் தொழில்நுட்பமும் எங்களுடைய திறமையும் உலகை மாற்ற முடியும்; உங்கள் அளவீடும் எங்களுடைய தொழில் திறனும் உலக பொருளாதார வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்தும்; உங்களுடைய எச்சரிக்கையான வழிமுறையும் எங்களுடைய நடைமுறை சாத்தியமான அணுகுமுறையும் மேலாண்மையில் புதிய சரித்திரங்களை உருவாக்கும்; உங்களுடைய அறிவார்ந்த வழிமுறைகளும், எங்களுடைய மாண்புகளும் உலகம் எதிர்பார்க்கும் வழியை உருவாக்க முடியும். மேலும் எங்காவது, ஏதாவது இடைவெளி இருக்குமானால், தனிப்பட்ட முறையில் நான் பாலமாக செயல்படுவேன்.

நன்றி!

***


(Release ID: 1586474) Visitor Counter : 295