பிரதமர் அலுவலகம்

கிழக்கத்திய பொருளாதார மன்றத்தின் 5-வது கூட்ட நிறைவு அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 05 SEP 2019 7:48PM by PIB Chennai

மேதகு அதிபர் புதின் அவர்களே,

அதிபர் பட்டுல்கா,

பிரதமர் அபே,

பிரதமர் மகாதிர் அவர்களே,

நண்பர்களே

வணக்கம்

Dobry Den!

விளாடிவோஸ்டோக் நகரில் அமைதியான மற்றும் இனிமையான சூழலில் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அற்புதமான அனுபவம். காலை நேர ஒளி, இங்கிருந்து பரவி, ஒட்டுமொத்த உலகுக்கும் சக்தியை அளிக்கிறது. நாம் இன்று மேற்கொள்ளும்  ஆலோசனைகள், தொலைதூர கிழக்குப்பகுதிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும்  முயற்சிகளுக்கும் புதிய சக்தியையும், புதிய சூழலையும் ஏற்படுத்தும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த முக்கியமான தருணத்தில் என்னையும் இணையச் செய்த நண்பரான அதிபர் புதின் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, அதிபர் எனக்கு அழைப்பு விடுத்தார். 130 கோடி இந்தியர்களும், என் மீதான அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். உங்களது அழைப்பும், அந்த நம்பிக்கையும் முத்திரையுடன் சீலிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, புனித பீட்டர்ஸ்பர்க் பொருளாதார மன்றத்தில் பங்கேற்க அதிபர் புதின் எனக்கு அழைப்பு விடுத்தார். ஐரோப்பாவின் முதல் பகுதியிலிருந்து பசிபிக் பகுதிக்கான நுழைவுவாயில் வரை, ஒட்டுமொத்த சைபீரியாவைக் கடக்கும் பயணத்தை நான் நிறைவுசெய்தேன். ஈரோஆசியா மற்றும் பசிபிக் பகுதி சங்கமிக்கும் இடமாக விளாடிவோஸ்டோக் திகழ்கிறது. இது ஆர்டிக் மற்றும் வடக்கு கடல் வழிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. ரஷ்யாவின் நிலப்பகுதியில் நான்கில் மூன்று பகுதி, ஆசியாவில் உள்ளது. இந்த மாபெரும் நாட்டின் ஆசிய அடையாளத்தை, இந்த தொலைதூர கிழக்குப் பகுதி வலுப்படுத்துகிறது. இந்திய நிலப்பரப்பு அளவில் இரண்டு மடங்கு அளவை இந்தப் பிராந்தியம் கொண்டுள்ளது. 60 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். எனினும், இந்தப் பிராந்தியத்தில் தாதுக்கள், எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள மக்கள், சோர்வில்லா கடின உழைப்பு, வீரம் மற்றும் புத்தாக்கங்கள் மூலம், இயற்கை சவால்களை முறியடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, தொழில் துறை மற்றும் சாகச நடவடிக்கைகள் என, விளாடிவோஸ்டோக் பகுதி குடிமக்களான தொலைதூர கிழக்குப் பகுதி மக்கள், சாதிக்காத பகுதிகளே இல்லை. அதேநேரத்தில், ரஷ்யாவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். உறைந்த நிலத்தை, மலர்ப்படுக்கையாக மாற்றியதன் மூலம், அற்புதமான எதிர்காலத்துக்கான தளமாக அமைத்துள்ளனர். அதிபர் புதினுடன், “தொலைதூர கிழக்கு வீதி” கண்காட்சியை நான் நேற்று பார்வையிட்டேன். இங்கு உள்ள பன்முகத்தன்மை, மக்களின் திறமை மற்றும் தொழில்நுட்ப உருவாக்கம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. வளர்ச்சிக்கும், ஒருங்கிணைப்புக்கும் சிறப்பான வாய்ப்புகள் இருப்பதை நான் உணர்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவுக்கும், தொலைதூர கிழக்குப் பகுதிக்கும் இடையேயான நல்லுறவு, இன்று உருவானது அல்ல, இது மிகவும் பழமையானது. விளாடிவோஸ்டோக் நகரில் தனது தூதரகத்தை திறந்த முதல் நாடு இந்தியா. அந்த நேரத்திலும், அதற்கு முன்னதாகவும், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அதிக அளவில் நம்பிக்கை இருந்தது. சோவியத் ரஷ்யாவில் மற்ற வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலும் கூட, இந்திய குடிமக்கள் வருவதற்கு விளாடிவோஸ்டோக் நகரில் அனுமதி அளிக்கப்பட்டது. அதிக அளவிலான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உபகரணங்கள், விளாடிவோஸ்டோக் வழியாக இந்தியாவுக்கு வந்தடைந்தன. இந்த ஒத்துழைப்பு மரம், இன்று வேர் விட்டு ஆழமாக விரிந்துள்ளது. இது இரு நாட்டு மக்களின் நலனுக்கான தூணாக மாறியுள்ளது. எரிசக்தி துறையிலும், வைரங்கள் போன்ற மற்ற இயற்கை வளங்களிலும் இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்திய முதலீட்டின் வெற்றிக்கான சிறந்த உதாரணமாக ஷகாலினின் எண்ணெய்க் கிணறு  திகழ்கிறது.

நண்பர்களே,

தொலைதூர கிழக்குப் பகுதி மீதான அதிபர் புதினின் உறவு மற்றும் அவரது இலக்குகள், இந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமன்றி, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கும் அளப்பரிய வாய்ப்புகளை கொண்டுவந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதை 21-ம் நூற்றாண்டின் தேசிய முன்னுரிமை என்று அவர் அறிவித்தார். அவரது முழுமையான நிலைப்பாடு, பொருளாதாரம் அல்லது கல்வி, சுகாதாரம் அல்லது விளையாட்டு, கலாச்சாரம் அல்லது தகவல் தொடர்பு, வர்த்தகம் அல்லது பாரம்பரியம் என எதுவாக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊக்குவிப்பு முயற்சியாக உள்ளது. ஒருபுறம், முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அவர், மற்றொருபுறம், சமூகத் துறைகளுக்கும் சமமான கவனம் மற்றும் முக்கியத்துவத்தை அளித்துள்ளார். அவரது தொலைநோக்கு திட்டத்தால் நான் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளேன். இதனை பகிர்ந்துகொண்டும் உள்ளேன். இந்த தொலைநோக்கு பயணத்தில் ஒவ்வொரு அடியிலும் ரஷ்யாவுடன் இணைந்து நடைபோட இந்தியா விரும்புகிறது. எனது அனுபவத்தின் அடிப்படையில், தொலைதூர கிழக்கு மற்றும் விளாடிவோஸ்டோக் பகுதியின் வேகமான, சரிசமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதிபர் புதினின் தொலைநோக்குத் திட்டம், நிச்சயமாக வெற்றிபெறும் என்று என்னால் கூற முடியும். ஏனெனில், இது உண்மையானது. மேலும், மதிப்புமிகுந்த வளங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் அளவில்லா திறனை ஆதரவாகப் பெற்றுள்ளது. அவரது தொலைநோக்குத் திட்டம், இந்தப் பிராந்தியம் மற்றும் இங்குள்ள மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவிலும் கூட, அனைவர் மீதான நம்பிக்கையுடன் அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் மூலம் புதிய இந்தியாவை கட்டமைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 2024-ம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற எங்களது உறுதியை நிறைவேற்ற நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதிவேகமாக வளரும் இந்தியா மற்றும் அதன் திறனுக்கும் இந்தப் பிராந்தியத்துக்குமான நட்புறவு என்பது வரலாற்றுப்பூர்வமான ஒன்றும், ஒன்றும் சேர்ந்து 11 வாய்ப்புகளை அளிப்பதைப் போன்றது.

நண்பர்களே,

இந்த ஊக்குவிப்புடன், கிழக்கத்திய பொருளாதார மன்றத்தில் எங்களது பங்களிப்புக்காக இதுவரை இல்லாத வகையில் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டோம். பல்வேறு அமைச்சர்கள், 4 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 150 தொழிலதிபர்கள் இங்கு வந்துள்ளோம். அவர்கள், தொலைதூர கிழக்குப் பகுதிக்கான அதிபரின் சிறப்புத் தூதர், 11 ஆளுநர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்தனர். ரஷ்ய அமைச்சர்கள் மற்றும் தொலைதூர கிழக்குப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த முயற்சிகள் அனைத்தும் மிகவும் சிறந்த பலனை அளித்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எரிசக்தி முதல் சுகாதாரம் வரை, கல்வி முதல் திறன் மேம்பாடு வரை, சுரங்கம் முதல் மரப் பொருட்கள் வரை பல்வேறு துறைகளிலும் 50 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், பல நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறோம்.

நண்பர்களே,

தொலைதூர கிழக்குப் பகுதியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா கடனாக வழங்க உள்ளது. ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதிக்காக நாங்கள் கடன் வழங்குவது இதுவே முதல்முறையாகும். எனது அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையின்கீழ், கிழக்கு ஆசியா-வுடன் தீவிரமாக தொடர்பு வைத்துள்ளோம். தொலைதூர கிழக்குப்பகுதிக்கான கொள்கை மீதான நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இன்றைய அறிவிப்பு திகழ்கிறது. நமது பொருளாதார நல்லுறவுக்கு இது புதிய பரிமாணத்தை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது நட்பு நாடுகளின் பிராந்திய மேம்பாட்டுக்கு, அவர்களது தேவைக்கு ஏற்ப நாங்கள் தீவிரமான பங்களிப்பை அளிப்போம்.

நண்பர்களே,

நமக்கு எந்த அளவுக்கு தேவையோ, அதனை இயற்கையிலிருந்து நாம் எடுக்க வேண்டும் என்று பழமையான இந்திய நாகரிக மதிப்புகள் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளன. இயற்கை வளங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். பல நூறு ஆண்டுகளாகவே, இயற்கையுடனான மிகுந்த பிணைப்பு என்பது, எங்களது இருப்பு மற்றும் மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

நண்பர்களே,

இந்திய வம்சாவளியினர் வசிக்கும் நாடுகளில் உள்ள தலைவர்களை நான் சந்திக்கும்போது, அவர்கள், இந்தியர்களின் தொழில், நேர்மை, ஒழுங்கு மற்றும் விசுவாசம் குறித்து பாராட்டு தெரிவிக்கின்றனர். உலகைச் சுற்றிலும் பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டுக்கு இந்திய நிறுவனங்களும், தொழிலதிபர்களும் பங்களிப்பை செய்கின்றனர். இதன்மூலம், வளத்தை உருவாக்க உதவிபுரிகின்றனர். உள்ளூர் உணர்ச்சிநிலை மற்றும் கலாச்சாரத்துக்கு இந்தியர்களும், எங்களது நிறுவனங்களும் எப்போதுமே மதிப்பளிக்கின்றன. இந்தியர்களின் பணம், இனிமை, திறமை மற்றும் தொழில்நேர்த்தி ஆகியவை தொலைதூர கிழக்குப் பகுதிக்கு வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். கிழக்கத்திய பொருளாதார மன்றத்தில் இந்தியா மேற்கொண்ட சாதனைகளின் சிறப்பான பலன்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக தொலைதூர கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 11 ஆளுநர்களும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை நானும், அதிபர் புதினும் நிர்ணயித்துள்ளோம். எங்களது நல்லுறவுக்கு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளோம். அவற்றை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். அரசு அமைப்புக்கு வெளியேயும் நல்லுறவை கொண்டுவந்ததன் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு இடையே திடமான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது நல்லுறவை நாட்டின் தலைநகரங்கள் என்ற அளவிலிருந்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் அளவுக்கு கொண்டுவந்துள்ளோம். நமது சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு நட்புறவின் வழிமுறைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்பை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், விண்வெளி தொலைவை தாண்டிச் செல்ல முடியும். மேலும், கடலின் ஆழத்திலிருந்து வளத்தை கொண்டுவர முடியும்.

நண்பர்களே,

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பின் புதிய பரிமாணத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். விளாடிவோஸ்டோக், சென்னை இடையே கப்பல்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கும்போதும், வடகிழக்கு ஆசிய சந்தையில் இந்தியாவின் முக்கியப் பகுதியாக விளாடிவோஸ்டோக் நகரம் மாறும்போதும், இந்தியா-ரஷ்யா இடையேயான நல்லுறவு மேலும் விரிவடையும். அதன்பிறகு, தொலைதூர கிழக்குப் பகுதியானது, ஒருபுறம், ஈரோஆசிய ஒன்றியம் சங்கமிக்கும் பகுதியாகவும், மறுபுறம், வெளிப்படையான, திறந்த மற்றும் அனைவருக்குமான இந்தோ-பசிபிக் பகுதியாகவும் மாறும். இந்தப் பிராந்தியத்தில் எங்களது நல்லுறவு, விதிகளின் அடிப்படையிலான நிலைத்தன்மை, இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, எல்லைப்பகுதி நல்லிணக்கம் மற்றும் ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது ஆகியவற்றின் வலிமையான அடித்தளமாக இருக்கும்.

நண்பர்களே,
பிரபலமான தத்துவஞானியும், எழுத்தாளருமான டால்ஸ்டாய், இந்திய வேதங்களின் தீவிர கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இந்த வார்த்தைகளை அவர் அன்புடன் வெளிப்படுத்தியுள்ளார். एकम सत विप्रःबहुधा वदन्ति।। இதனை தனது வார்த்தையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“இருப்பில் உள்ள அனைத்துமே ஒன்றுதான். இதனை மக்கள் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர்.”

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை, ஒட்டுமொத்த உலகமும் இந்த ஆண்டில் கொண்டாடி வருகிறது. டால்ஸ்டாயும், மகாத்மா காந்தியும் ஒவ்வொருவர் மீதும் அழிக்க முடியாத பிணைப்பை விட்டுச் சென்றுள்ளனர். இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட இந்தியா-ரஷ்யா ஊக்குவிப்பை வலுப்படுத்துவோம். ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் முக்கிய கூட்டாளிகளாக மாறுவோம். நமது ஒத்த தன்மையுடைய கனவுக்காகவும், உலகின் நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம். நமது நட்புறவில் இது புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும். நான் ரஷ்யாவுக்கு வரும்போதெல்லாம், இந்தியா மீது அன்பு, நட்பு மற்றும் மரியாதையை நான் இங்கு காண்கிறேன். இன்றும்கூட, இங்கிருந்து இந்த உணர்வுகளின் மதிப்பிட முடியாத பரிசு மற்றும் தீவிர ஒத்துழைப்புக்கான உறுதியுடன் செல்ல உள்ளேன். எனது நண்பர் அதிபர் புதினுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சந்திக்கும்போதெல்லாம், மிகவும் திறந்த மனதுடன் சந்திக்கிறோம். அதிக நேரத்தை செலவிடுகிறோம். நேற்று, தனக்கு இருந்த அனைத்துப் பணிகளுக்கு மத்தியில், என்னுடன் பல்வேறு இடங்களிலும் பல மணிநேரத்தை செலவிட்டார். இரவு ஒரு மணிவரை நாங்கள் ஒன்றாக இருந்தோம். இது என் மீது மட்டுமல்லாமல், இந்தியா மீதும் அவர் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. இங்கும், இந்தியாவிலும் மற்றொரு கலாச்சார ஒற்றுமையை நான் காண்கிறேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் Bye-Bye என்று சொல்வதற்குப் பதிலாக Aavajo என்று கூறுவோம். அதன் பொருள், மீண்டும் விரைவில் வாருங்கள் என்பதாகும். இங்கு அதனை Dasvidania என்று கூறுகிறீர்கள்.

எனவே, நான் ஒவ்வொருவருக்கும் Aavajo, Dasvidania என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு மிக்க நன்றி!
Spasibo Bolshoi!

***



(Release ID: 1584538) Visitor Counter : 181