மத்திய அமைச்சரவை

புதிய அமைச்சரவை செயலாளராக திரு ராஜீவ் கவ்பா பொறுப்பேற்றார்

Posted On: 30 AUG 2019 4:15PM by PIB Chennai

திரு பி கே சின்ஹா ஓய்வு பெற்ற பின் மத்திய அரசின் புதிய அமைச்சரவை செயலாளராக திரு ராஜீவ் கவ்பா பொறுப்பேற்றார்.  ஜார்க்கண்ட் கேடர் (1982 தொகுப்பு) ஐஏஎஸ் அதிகாரியான அவர், மத்திய உள்துறை செயலாளர், மத்திய  நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர், ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளர் போன்ற முக்கியமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்.  சர்வதேச செலாவணி நிதியம்-ஐஎம்எஃப்-ல் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். 

 

பாதுகாப்பு, மத்திய –மாநில அரசுகளின் நிர்வாகம் மற்றும் நிதிசார்ந்த அனுபவங்கள், சர்வதேச அமைப்புகளின் அனுபவம் ஆகியவற்றை திரு கவ்பா புதிய பதவிக்குக் கொண்டு வருகிறார். 

 

370-ஆவது பிரிவை ரத்து செய்யவும், ஜம்மு கஷ்மீரை மறுசீரமைக்கவும் மத்திய அரசு மேற்கொண்ட முடிவை அமலாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.  மேலும் இந்த முடிவை இடையூறு இன்றியும், சுமூகமாகவும்  அமலாக்கிய பெருமைக்குரியவர்.  மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்த போது  இதன் உருவாக்கம் மற்றும்  செயலாக்கத்திற்கு முன்னிலை வகித்தவர். சிறிய அளவிலான குழுவுடன் இந்த முடிவுக்கு அரசியல் சாசனம் மற்றும் சட்ட அம்சங்களில் இறுதிவடிவம் கொடுத்ததோடு, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பணியாற்றியவர். 

 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த போது, இடதுசாரி அதிதீவிரவாதத்தை முறியடிக்க 2015 ஆம் ஆண்டில் பலமுனை செயல்திட்டத்தைத் தயாரித்து அளித்தார்.  அத்துடன் அதன் அமலாக்கத்திற்கு வழிகாட்டியதால், மாவோயிச செல்வாக்கு உள்ள பகுதிகளில் அதன் பரவலாக்கம் கணிசமாகக் குறைந்தது. 

 

மத்திய உள்துறை அமைச்சகம் தவிர, ஊரக வளர்ச்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம்,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்  போன்ற மத்திய அரசின்  பல துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். 

 

ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளராக திரு கவ்பா இருந்தபோது, பெருமளவில் நிர்வாகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.  தொழில்முறை சார்ந்த படிப்புகளில் பட்டயம் பெற்றவர்களுக்குக் கால அளவை குறைத்தல், அமைச்சகங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், மறுசீரமைப்பு, தொழிலாளர் சீர்திருத்தங்கள் போன்றவை அவரது பணிகளில் அடங்கும்.  எளிதாக வணிகம் செய்வதில் மிகவும் அடிநிலையில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை இவரது பதவிக்காலத்தில் மூன்றாவது இடத்திற்கு உயர்த்தினார். 

 

சர்வதேச செலாவணி நிதியத்தின் குழுவில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்பவராக திரு கவ்பா நான்காண்டுகள் பணியாற்றினார். 

***********



(Release ID: 1583759) Visitor Counter : 133