பிரதமர் அலுவலகம்

பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

Posted On: 24 AUG 2019 11:42PM by PIB Chennai

பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

      “அரசுத் தலைவராக பிரதமர் என்ற முறையில் பஹ்ரைனுக்கான எனது பயணம் இருக்கலாம்.  ஆனால், எனது நோக்கம் என்பது இங்கு வசிக்கும் இந்தியர்களை சந்திப்பதும், லட்சக்கணக்கான பஹ்ரைன் நண்பர்களுக்குத் தகவல்களை தெரிவிப்பதுமாகும். இன்று ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வளைகுடாப் பகுதியில் ஜென்மாஷ்டமி நாளன்று கிருஷ்ணர் கதை கூறும் மரபு இன்னமும் தொடர்வதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நாளை நான் ஸ்ரீநாதர் ஆலயத்திற்கு செல்லவிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் உங்களை ஆதரிக்கும் நாட்டிற்கும் அமைதியும், வளமும் கிடைக்க நான் பிரார்த்திக்க உள்ளேன்” என்று பிரதமர் கூறினார்.

      “இந்தியாவிலிருந்து வந்துள்ள நீங்களும், பக்தர்களும் இந்தப் பண்டிகையை எவ்வளவு பக்தியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடுவீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த ஆலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை முறைப்படி தொடங்கவிருப்பதும், மகிழ்ச்சியான விஷயம்” என்று பிரதமர் மேலும் கூறினார்.

      பஹ்ரைனின் சமூகப் பொருளாதார வாழ்க்கையில், இந்தியர்களின் பெருந்தன்மை, விசுவாசம், திறமை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக அவர்கள் மீது பஹ்ரைனில் மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். “உங்களின் கடுமையான உழைப்போடு, உங்களுக்கான இடத்தை இங்கே பெற்றிருக்கிறீர்கள்.  இந்த நல்லெண்ணத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இங்குள்ள அரசு ஊழியர்கள், வணிகப் பெருமக்கள், இங்கே குடியிருக்கும் மக்கள், பணியாற்றும் மக்கள் இந்தியர்கள் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் எனது நெஞ்சம் மகிழ்ச்சியால் நிறைகிறது” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

      “இந்தியாவின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் வங்கி சேவைகளோடு, பெரும்பாலும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  செல்பேசிகள், இணையம் ஆகியவை இந்தியாவின் சாதாரண குடும்பத்திற்கும் சென்றுள்ளன.  உலகிலேயே இணையச் செலவு மிகவும் குறைவாக இருப்பது இந்தியாவில்தான்.  பல முயற்சிகள் செய்யப்பட்டதால் இந்தியாவில் அதிகப்படியான சேவைகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன” என்று பிரதமர் கூறினார்.   

      “ஒவ்வொரு இந்தியரும், இந்தியாவின் கனவுகள், விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள். எங்களின் இலக்குகள் அதிகபட்சமானவை. ஆனால், 130 கோடி மக்களின் கரங்களைப் பெற்றிருப்பது, ஊக்கமளிக்கிறது.  இந்தியா இன்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  அரசின் முயற்சிகளால் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களின் பங்களிப்பால், அரசு இயக்க மட்டுமே செய்கிறது.  நாட்டு மக்கள்தான், வேகத்தை அளிக்கிறார்கள்” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

      “பீம் செயலி, யூபிஐ, ஜன்தன் கணக்கு போன்ற வசதிகள் இந்தியாவில்  சாமானிய மக்களும் வங்கிச் சேவையைப் பெற உதவுகின்றன. எங்களின் ரூபே அட்டை உலகம் முழுவதும் பரிவர்த்தனைக்கான கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் வியாபாரிகளால் எங்களின் ரூபே அட்டைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

      “விரைவில் பஹ்ரைனிலும் நீங்கள் ரூபே அட்டை மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எங்களின் நோக்கம், இந்தியாவில் உள்ள உங்களின்  குடும்பத்திற்கு ரூபே அட்டை மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்பதுதான். ரூபேயுடன் பஹ்ரைன் பே என்று இப்போது உங்களால் சொல்ல முடியும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

      “இந்திய நாட்டில் உள்ள 130 கோடி மக்களோடு, வெளிநாடுகளில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களும் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 5 ஆண்டுகளில் எங்களின் பெருமுயற்சியாக இருந்துள்ளது. இன்று உலகம் இந்தியாவை மதிப்போடு பார்க்கிறது என்றால், அதற்குக் காரணமாக இருப்பவர்கள், உங்களைப் போன்ற லட்சக்கணக்கான நண்பர்கள்தான்” என்று அவர் கூறினார்.

      இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசிய பிரதமர், “தங்கு தடையின்றி, மக்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு வசதியாக ‘ஒரு நாடு-ஒரு குடும்ப அட்டை’ என்பதை நோக்கி இந்தியா செல்கிறது.  ஒட்டுமொத்த இந்தியாவும், ‘ஒருநாடு – ஒரு மின்தொகுப்பு’ என்றும், ஜிஎஸ்டி என்ற வடிவில் ‘ஒரு நாடு - ஒரு வரி’ என்றும் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் வாழ்க்கையை எளிதாக்குவது, வணிகத்தை எளிதாக்குவது என்பதற்காகவே உள்ளது. இந்தியாவில் அனைத்துத் தீர்வுகளும் இளைஞர்களால் கண்டறியப்படுகின்றன. ‘உலக நடைமுறையோடு உள்ளூர் தீர்வுகள்’ என்பதற்கு இந்திய இளைஞர்கள் முழு மூச்சோடு பணியாற்றி வருகிறார்கள். இந்தியத் திறன் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  உலகத் திட்டங்களிலும், நிறுவனங்களிலும் இது வெளிப்படுகிறது.  மிகக் குறைவான செலவில் சந்திரயான் போன்ற சாதனைகளை நிகழ்த்தியதற்காக இந்திய விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறார்கள். இத்தகைய தரம் எங்களின் ஆதாயம் மட்டுமல்ல, அடையாளமாகவும் இருக்கிறது. நாங்கள் வரவு-செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட, மன உறுதியில் நம்பிக்கை கொள்வதால், இலக்குகளை எட்ட முடிகிறது.

      2022-ல் சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை இந்தியா நிறைவு செய்கிறது. உங்கள் நிலையில் சில புதிய தீர்மானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் உங்களின் பஹ்ரைன் நாட்டு நண்பர்களை இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள, இந்தியாவில் உள்ள அழகான மலைப்பகுதிகளைக் காண ஆன்மீக, கலாச்சார பாரம்பரியங்களை அறிய ஊக்கப்படுத்துவதை ஒரு முடிவாக மேற்கோள்ள வேண்டும்.  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத இந்தியாவை 2022 ஆம் ஆண்டுக்குள் உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

        “பரஸ்பர நலன் மற்றும் மாண்புகள் சார்ந்து இந்தியாவும், பஹ்ரைனும் பணியாற்ற வேண்டும். தொன்மையான நாகரீகத்தோடு, நவீன நாடுகளாக இந்தியாவும், பஹ்ரைனும் விளங்குகின்றன.  இருநாடுகளும் ஏராளமான வளத்தைக் கொண்டுள்ளன. பஹ்ரைனில் உள்ள இந்தியர்கள் இந்த உறவை வலுப்படுத்துவார்கள் என்றும், இந்தியா-பஹ்ரைன் உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்றும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.   

 

*****



(Release ID: 1582983) Visitor Counter : 226