பிரதமர் அலுவலகம்

திரு. அருண் ஜெட்லி மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 24 AUG 2019 1:38PM by PIB Chennai

முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் திறமையான தலைவருமான திரு. அருண் ஜெட்லி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 “அருண் ஜெட்லி அவர்கள் மாபெரும் அரசியல் தலைவர், மிகச்சிறந்த அறிவாளி, சட்ட பேரொளி. இந்தியாவிற்கு பெரும் பங்களித்த சிறந்த தலைவர். அவரது மறைவு, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோகன் ஆகியோரை தொடர்பு கொண்டு எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டேன். ஓம் ஷாந்தி.

முழுமையான வாழ்க்கை, தேர்ந்த அறிவு, சிறந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய ஈர்ப்பு திறன் கொண்ட அருண் ஜெட்லி அவர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து சமுதாய மக்களாலும் போற்றப்பட்டவர். பன்முகத்திறன் கொண்ட அவர் இந்திய அரசியல் சாசனம், வரலாறு, பொது கொள்கைகள், ஆளுமை மற்றும் நிர்வாகத்தில் ஆழமான அறிவாற்றல் கொண்டவர்.

அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அருண் ஜெட்லி அவர்கள் பல்வேறு அமைச்சக பொறுப்புகளை வகித்தவர். இதன் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை அவரால் ஆற்ற முடிந்தது. நமது நாட்டின் பாதுகாப்பு திறனை வலுபடுத்தியது, மக்களுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கியது மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தியது ஆகியவற்றிலும் அவரது பணி குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சிக்கும் அருண் ஜெட்லி அவர்களுக்கும் இடையே பிரிக்கமுடியாத உறவு இருந்தது. மாணவ பருவத்தில் துடிப்பு மிக்க தலைவராக திகழ்ந்த அவர் அவசர நிலை காலகட்டத்தில் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முன் நின்றவர். கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் சமுதாயத்தின் அனைத்து மட்டத்திற்கும் கொண்டு சென்ற அருண் ஜெட்லி, எங்களது கட்சியில் அனைவராலும் விரும்பப்பட்டவர்.

அருண் ஜெட்லி அவர்களின் மரணத்தால் மதிப்புமிக்க ஒரு நண்பரை நான் இழந்துவிட்டேன். பல ஆண்டுகளாக அவரோடு நெருங்கி பழகி வந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. பிரச்சனைகள் மற்றும் பல்வேறு விஷயங்களின் நுணுக்கங்களை  புரிந்து கொள்ளும் திறனில் அவருக்கு நிகர் அவரே. மிகவும் சிறப்பாக வாழ்ந்த அவர், நம்மிடையே எண்ணற்ற மகிழ்ச்சி நிறைந்த நினைவுகளை விட்டு சென்றுள்ளார். நாம் அவரை இழந்திருக்கிறோம்!”, என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1582897) Visitor Counter : 141