பிரதமர் அலுவலகம்

திம்பு-வில் உள்ள ராயல் பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 AUG 2019 10:46AM by PIB Chennai

பூடான் பிரதமர் மேதகு டாக்டர் லோடே ஷெரிங் அவர்களே, பூடான் தேசிய சட்டப்பேரவை மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களே, ராயல் பூடான் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களே,

 

எனதருமை இளம் நண்பர்களே,

      குசோ ஸங்போ லா. நமஸ்காரம். இந்தக் காலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது மிகச்சிறப்பான தருணம் எனக் கருதுகிறேன். ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒரு சொற்பொழிவை கேட்க வேண்டியிருக்கிறதே, என நீங்கள் நினைக்கிறீர்கள் என உறுதியாக நம்புகிறேன். ஆனால், நான் ஆற்ற வேண்டிய உரையையும், அது தொடர்பான உங்களது தலைப்புகள் தொடர்பாகவும் சுருக்கமாக முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

      பூடானுக்கு பயணம் மேற்கொள்ளும் யாராக இருந்தாலும் இந்த நாட்டின் இயற்கை அழகு, அன்பான, பொறுமையான மற்றும் எளிமையான மக்களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பூடானின் கடந்த கால செழுமை மற்றும் அதன் ஆன்மீகப் பாரம்பரிய சிறப்புக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும் செம்டோக்கா ட்ஸாங் (Semtokha Dzong)-கிற்கு நான் நேற்று சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது பூடான் அரசின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருக்கமாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இந்தியா – பூடான் இடையேயான நட்புறவு குறித்த வழிகாட்டுதல் மீண்டும் ஒருமுறை கிடைக்கப் பெற்றேன். அவர்கள்(பூடான் தலைமை) செலுத்தும் நேரடி மற்றும் நெருங்கிய கவனத்தின் காரணமாக இந்த நட்புறவு எப்போதும் பயனளிப்பதாகவே உள்ளது.

      இப்போது, இன்று நான் பூடானின் எதிர்காலத் தலைமுறையினருடன் உள்ளேன். உங்களது சுறுசுறுப்பைக் கண்டு எனக்குள் சக்தி பெறுவதாக உணர்கிறேன். இவை அனைத்தும் இந்த சிறப்புக்குரிய நாடு மற்றும் அதன் குடிமக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என நான் நம்புகிறேன். பூடானின் கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என எதை நோக்கினாலும், ஆழ்ந்த ஆன்மீகப்பற்று மற்றும் இளமைத் துடிப்பு ஆகியவை பொதுவான மற்றும் நிலையான அம்சங்களாக உள்ளன.  இதுவே நமது இருதரப்பு நட்புறவின் வலிமையாகும்.

 

நண்பர்களே,

      பூடான் மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவது இயற்கையானதே. அனைத்திற்கும் மேலாக நாம் புவியியல் ரீதியாக மட்டும் நெருங்கிய நாடுகளாக இல்லாமல், நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்கள், இருநாடுகளிடையே தனிச்சிறப்பு வாய்ந்த ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் சித்தார்த்தன் கௌதம புத்தராக மாறிய பூமி இந்தியா என்பது ஒரு சிறப்பு வாய்ந்ததாகும். இங்கிருந்துதான் அவரது ஆன்மீகக் கருத்துகள், புத்த மத ஒளி, உலகெங்கும் பரவியது. பல தலைமுறைகளாக புத்த துறவிகள், ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் ஆன்மீகத் தேடல் உடையோர் இந்த ஒளிக்கீற்றுகளை பூடானில் சுடரொளிவிட்டு பிரகாசிக்கச் செய்தனர். அத்துடன் அவர்கள் இந்தியா-பூடான் இடையே சிறப்புமிக்க ஒரு பிணைப்பையும் உருவாக்கினர்.

      இதன் விளைவாக நாம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் உலகின் பொதுவான கருத்துக்களாக வடிவம் பெற்றது. வாரணாசியிலும், புத்த கயாவிலும் இதனை கண்கூடாகக் காணலாம்.  அதேபோன்று, ட்ஸோங் மற்றும் சோர்ட்டனிலும் இதனைக் காணலாம். இந்த மாபெரும் வரலாற்றுப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்ற முறையில் நமது மக்கள் பாக்கியசாலிகள்தான். உலகில் வேறு எந்த இருநாடுகளும் இந்த அளவிற்கு ஒருவரையொருவர் புரிந்துகொண்டதும் இல்லை, அல்லது பகிர்ந்து கொண்டதும் இல்லை. உலகில் வேறு எந்த இரு நாடுகளும் இதுபோன்று தத்தமது மக்களிடையே வளத்தை ஏற்படுத்தியதுமில்லை.

 

நண்பர்களே,

      இந்தியா தற்போது பல்வேறு துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை கண்டுகொண்டிருக்கிறது.

      இதுவரை இல்லாத வேகத்தில் இந்தியா வறுமையை அகற்றியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது இருமடங்காகியுள்ளது. அடுத்த தலைமுறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியேற்றுள்ளோம்.  உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், இந்தியாவில் செயல்படுத்தப்படுவதன் மூலம் நாட்டிலுள்ள 500 மில்லியன் மக்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

      உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியாவில்தான், குறைந்த கட்டணத்தில் இணையதள இணைப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் பெறுகின்றனர். உலகிலேயே மிகச்சிறப்பான தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணமாகும். இதுபோன்ற மற்றும் பிற மாற்றங்கள்தான், இந்திய இளைஞர்களின் முக்கிய கனவாகவும், எதிர்பார்ப்புகளாகவும் உள்ளது. 

     

நண்பர்களே,

      பூடானின் மிகச்சிறந்த மற்றும் ஆற்றல்மிக்க இளைஞர்களான  உங்கள் முன் இன்று நிற்கிறேன். உங்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதுடன், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றிலும் கலந்து கொண்டதாக உங்கள் நாட்டு மன்னர் நேற்று என்னிடம் தெரிவித்தார். நீங்கள்தான், எதிர்கால பூடானின் தலைசிறந்த தலைவர்களாக, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்களாக, தொழில் அதிபர்களாக, விளையாட்டு வீரர்களாக, கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக உருவெடுக்கவிருக்கிறீர்கள்.

       சில நாட்களுக்கு முன்பு எனதருமை நண்பர் டாக்டர் ஷெரிங் வெளியிட்டிருந்த முகநூல் பதிவு எனது இதயத்தைத் தொடுவதாக இருந்தது. அதில் அவர், “தேர்வு வீரர்கள்” பற்றி குறிப்பிட்டிருந்தார், இப்போதுகூட ஒரு மாணவர் அந்தப் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டார். தேர்வுகளை மாணவர்கள் மனஅழுத்தமின்றி எவ்வாறு அணுகுவது என்பது குறித்து நான் எழுதிய புத்தகம்தான் “தேர்வு வீரர்கள்” ஆகும். பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளிலும் வாழ்க்கை வகுப்பறையிலும் ஒவ்வொருவரும், தேர்வுகளை சந்தித்து வருகின்றனர். நான் உங்களுக்கு ஒன்றை சொல்லட்டுமா? “தேர்வு வீரர்கள்” புத்தகத்தில் நான் எழுதியிருப்பனவற்றில் பெரும்பாலானவை புத்தபிரானின் போதனைகளிலிருந்து உருவானவையாகும்.  குறிப்பாக, நல்லதையே நினைப்பதன் முக்கியத்துவம், அச்சம் தவிர்த்தல் மற்றும் தற்போதைய தருணத்திலோ அல்லது இயற்கை அன்னையுடனோ ஒற்றுமையாக வாழ்வது பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புவாய்ந்த பூமியில் பிறந்தவர்கள் நீங்கள்.

      எனவே, இதுபோன்ற பண்புகள் உங்களிடம் இயற்கையாகவே அமைந்து, உங்களது தனித்துவத்தை வடிவமைக்கிறது. நான் இளைஞனாக இருந்தபோது, இதுபோன்ற பண்புகளைத் தேடி, இமயமலைக்குச் சென்றேன்! ஆசிர்வதிக்கப்பட்ட இந்த மண்ணின் குழந்தைகள் என்ற வகையில், உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உங்களது பங்களிப்பை வழங்குவீர்கள் என நான் நம்புகிறேன்.

      ஆமாம், நிறைய சவால்கள் நம்மை எதிர்நோக்கியுள்ளன. ஆனால் ஒவ்வொரு சவாலுக்கும், புதுமையான தீர்வுகண்டு அதனை கடந்து வருவதற்கு நம்மிடையே ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்.  இதில் உங்களுக்கு எந்த வரையறையும் கிடையாது.

      இப்போது இருப்பதைவிட, வேறு எப்போதும் இளமையான பருவம் நமக்கு கிடைக்காது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதுவரை இல்லாத வகையில் உலகம் ஏராளமான வாய்ப்புகளை நமக்கு வழங்கியுள்ளது. தலைசிறந்து விளங்குவதற்கான ஆற்றலும், திறமையும் உங்களிடம் உள்ளது. அது பல தலைமுறைகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். உங்களது உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தி முழுப் பொறுமையுடன் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

  

நண்பர்களே,

      நீர்மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறையில் இந்தியா-பூடான் இடையேயான ஒத்துழைப்பு சிறப்புக்குரியதாகும்.  இந்த நட்புறவின் உண்மையான சக்தியும், ஆற்றலும் நமது மக்கள்தான். எனவே, மக்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த நட்புறவின் தளகர்த்தகர்களாக மக்கள்தான் எப்போதும் இருப்பார்கள். இந்தப் பயணத்தின் முடிவில் இந்த உணர்வு நிச்சயம் வெளிப்படும். பாரம்பரிய ரீதியான துறைகளைத் தாண்டி, பள்ளிகள் முதல் விண்வெளி வரை, டிஜிட்டல் பணப்பட்டுவாடா முதல் பேரிடர் மேலாண்மை என பல்வேறு புதிய துறைகளில் நாம் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்தத் துறைகளில் நம்மிடையேயான ஒத்துழைப்பு உங்களைப் போன்ற இளம் நண்பர்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு சில உதாரணங்களைக் கூற விரும்புகிறேன். தற்போதைய காலகட்டத்தில் எல்லை கடந்து அறிஞர்களையும், கல்வியாளர்களையும் இணைப்பது முக்கியமானதாகும்.  இதன்மூலமே நமது மாணவர்களின் புதிய சிந்தனைகள் மற்றும் திறமையை வெளிப்படுத்தி, அவர்களை உலகில் தலைசிறந்தவர்களாக உருவாக்க முடியும். இந்தியாவின் தேசிய அறிவாற்றல் கட்டமைப்பு மற்றும் பூடானின் டிரக்ரென் இடையேயான ஒத்துழைப்பு நேற்று வெளிப்பட்டு, குறிக்கோளை அடைய உதவியுள்ளது. 

 

          இந்த நடவடிக்கை, நம் இரு நாட்டு  பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், சுகாதாரச் சேவை மற்றும் வேளாண் அமைப்புகளிடையே பாதுகாப்பான மற்றும் விரைவான தொடர்புக்கு வழிவகுக்கும்.  இந்த வசதியை  முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

      விண்வெளித்துறை நமது ஒத்துழைப்புக்கான மற்றொரு உதாரணமாகும். இந்த சிறப்பு மிக்கத் தருணத்தில், சந்திரனை ஆராய்வதற்கான இந்தியாவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2, சந்திரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  2022-ஆம் ஆண்டு வாக்கில், இந்திய விண்கலத்தில், இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டு, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். இவை அனைத்தும் இந்தியாவின் சொந்த முயற்சி மூலம் படைத்த சாதனைகளாகும். நம்மைப் பொறுத்தவரை விண்வெளித்திட்டங்கள் நாட்டிற்கு பெருமை தேடித்தருவது மட்டுமல்ல. தேச வளர்ச்சிக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் இது மிகவும் அவசியமானதாகும்.

 

நண்பர்களே,

 

நேற்று, பிரதமர் ஷெரிங்கும், நானும், தெற்காசிய செயற்கைக் கோளுக்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை திம்புவில் தொடங்கி வைத்திருக்கிறோம். செயற்கைக் கோள்கள் மூலம், தொலை மருத்துவ பயன்பாடுகள்,  தொலைதூரக் கல்வி, இயற்கைவள ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்கை பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை தொலைதூரப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.  பூடான் சொந்தமாக தயாரிக்கும் சிறிய அளவிலான செயற்கைக் கோளை வடிவமைத்து விண்ணில் செலுத்த, பூடான் விஞ்ஞானிகள் இந்தியாவிற்கு வரவிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். வெகுவிரைவில், உங்களில் பலர் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளில் ஈடுபடுபவர்களாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

 

நண்பர்களே,

 

  கல்வி மற்றும் கற்றல் போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியா – பூடான் இடையேயான நட்புறவில் முக்கிய அம்சமாக திகழ்கின்றன. பண்டைக்காலத்திலும் புத்தமத ஆசிரியர்களும், அறிஞர்களும், நம் நாட்டு மக்கள் கல்வி கற்பதற்கு ஒரு பாலத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும், அதனை நாம் பேணிப்பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.  எனவே, கற்பித்தல் மற்றும் பவுத்தமத பாரம்பரியத்தை பயிற்றுவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாலந்தா பல்கலைக்கழகம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பூடானிலிருந்து பவுத்தமத கல்வி பயில மேலும் பல மாணவர்கள் இந்தியாவிற்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். நம் இருநாடுகளிடையே கற்றலில் உள்ள பிணைப்பு, மிகவும் தொன்மையானதும், நவீனமானதுமாகும். 20-ஆம் நூற்றாண்டில் ஏராளமான இந்தியர்கள் ஆசிரியர் பணியாற்றுவதற்காக பூடான் வந்தனர்.  பழங்கால தலைமுறைகளைச் சேர்ந்த பூடான் மக்கள், அவர்கள் படித்த காலத்தில், ஒரு இந்திய ஆசிரியரிடமாவது படித்திருப்பார்கள். அவர்களில் சிலர், பூடான் மன்னரால் கடந்த ஆண்டு கவுரவிக்கப்பட்டனர்.  மன்னரின் இந்த தாராள மனதிற்கும், செயல்பாட்டிற்கும் நாங்கள் மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

 

நண்பர்களே,

 

பூடானைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் கல்வி பயின்று வருகின்றனர். இந்த   எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். நமது இருநாடுகளையும் வளர்ச்சியடையச் செய்ய நாம் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நம்மையும், மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும்  கல்வி சார்ந்த அனைத்துத் துறைகளிலும் நாம் கூட்டாக செயல்படுவது அவசியம்.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-களுக்கும், புகழ்பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஒத்துழைப்புகளை மேற்கொள்ள நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கை, கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளில் நம்மிடையே மேலும் பல ஒத்துழைப்புகளுக்கு வழி வகுக்கும்.

 

நண்பர்களே,

 

உலகின் எந்தப் பகுதியிலும், பூடானுடன் உங்களுக்கு எத்தகைய தொடர்பு உள்ளது என்று கேட்டால், ஒட்டுமொத்த தேசத்தின் மகிழ்ச்சி என்பதே பதிலாக இருக்கும். இதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. மகிழ்ச்சியின் அவசியத்தை பூடான் உணர்ந்துள்ளது.  நல்லிணக்கம். ஒருங்கிணைந்து செயல்படுதல் மற்றும் கருணையின் அர்த்தத்தை பூடான் உணர்ந்துள்ளது. என்னை வரவேற்பதற்காக நேற்று சாலைகளில் அணிவகுத்து நின்ற குழந்தைகளிடம் இந்த உணர்வு எழுவதைக் காணமுடிந்தது. அவர்களது புன்முறுவலை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். 

 

நண்பர்களே,

 

“ஒவ்வொரு நாடும் தெரிவிக்க வேண்டிய ஏதாவது ஒரு தகவல் இருக்கும், நிறைவேற்ற துடிக்கும் காரியம் ஏதாவது இருக்கும், அடைய வேண்டிய இலக்கும் இருக்கும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.  நல்லிணக்கம்தான் மகிழ்ச்சிக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும். இந்த உலகம் மகிழ்ச்சியுடன் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன.  அர்த்தமற்ற வெறுப்புகளை  மகிழ்ச்சி வெற்றிகொள்ளும். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அங்கு நல்லிணக்கம் ஏற்படும், நல்லிணக்கம் இருந்தால் அங்கு அமைதி தவழும். அமைதி நிலவினால், நீடித்த வளர்ச்சி மூலம் சமுதாயம் மேம்பட வழி வகுக்கும்.  வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது, பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படும் வேளையில், பூடானிடமிருந்து உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது.  இங்கு (பூடானில்)  வளர்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படாமல் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. படைப்பாற்றல், உத்வேகம் மற்றும் இளைஞர்களின் உறுதிப்பாடு மூலம், தண்ணீர் சேமிப்பு அல்லது நீடித்த வேளாண்மை அல்லது ஒருமுறைப்பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது என நீடித்த எதிர்காலத்திற்கு  தேவையான அனைத்தையும் நம் நாடுகள் அடைய முடியும்.

 

நண்பர்களே,

 

நான் கடந்த முறை பூடான் வந்திருந்தபோது, ஜனநாயகத்தின் கோவிலாகக் கருதப்படும் பூடான் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தேன். இன்று, இந்த கல்விக் கோவிலுக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. மேலும், இன்றும் பூடான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இங்கு வந்துள்ளனர்.  அவர்களது சிறப்பு மிக்க வருகைக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஜனநாயகமும், கல்வியும்தான் நமது சுதந்திரமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். ஒன்று இல்லாமல் மற்றொன்று நிறைவடையாது. நமது முழுத்திறமையை அடையவும், நாம் சிறந்தவர்களாக உருவெடுக்கவும் இவை இரண்டும் உதவும். கல்வி போதிக்கும் இந்த இடம், சுதந்திரமாக கேள்வி கேட்கும் உணர்வுகளுக்கு வழி வகுப்பதுடன், மாணவர்கள், எப்போதும் நம்முடன் இணைந்து செயல்படுவதற்கும் வகை செய்யும்.

 

இத்தகைய முயற்சிகளில் பூடான் உயர்ந்த நிலையில் இருப்பதால், உங்களது 130 கோடி இந்திய நண்பர்கள், உங்களை, பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்நோக்குகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் உங்களுடன் இணைந்து செயல்பட்டு தகவல்களை பரிமாறிக் கொள்வதோடு, உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்கின்றனர். இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு, ராயல் பூடான் பல்கலைக்கழகத்தின் வேந்தரான மாட்சிமை தங்கிய மன்னருக்கும், இந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் ஆசிரியர்கள்  மற்றும் எனது அருமை இளம் நண்பர்களுக்கும், நன்றி கூறிக்கொள்கிறேன்.  என்னை இங்கு உரையாற்ற அழைத்ததோடு மட்டுமின்றி, நான் உரையாற்ற அதிக நேரம் ஒதுக்கியதுடன், என் மீது கவனம் செலுத்தி அன்பு காட்டி பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.  உங்களிடமிருந்து பெற்ற மகிழ்ச்சி மற்றும் உத்வேகத்துடன் நான் தாயகம் திரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

 

டசி டெலேக்!

 

 

-----

 



(Release ID: 1582306) Visitor Counter : 217