பிரதமர் அலுவலகம்

நான்காவது சுற்று அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு -2018 முடிவுகளை பிரதமர் வெளியிட்டார்

Posted On: 29 JUL 2019 11:32AM by PIB Chennai

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி,
4-வது சுற்று அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு – 2018 முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்கில் வெளியிட்டார்.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2967 ஆக அதிகரித்துள்ளது என இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசுகையில், இது இந்தியாவின் வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்ட பிரதமர், புலிகளைப் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். இந்த சாதனையை அடைய, இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் விரைவாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இது இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு மேலும் ஒரு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் ஏதாவது ஒன்றை செயல்படுத்த வேண்டுமென முடிவெடுத்து விட்டால், அவர்கள் விரும்பிய முடிவை எட்டுவதை எந்த படையாலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 3,000 புலிகள் உள்ள நிலையில், இந்தியா தற்போது மிகப் பெரிய மற்றும் மிகவும் பாதுகாப்பான வாழ்விடமாகத் திகழ்கிறது.

“குறிப்பிட்ட சிலருக்கு”ப் பதிலாக “கூட்டுப் பொறுப்பு” என்பதே எதிர்காலத்திற்கான வழிமுறை என்பதை திரு. நரேந்திர மோடி உறுதிப்படுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, விரிவான ஒட்டுமொத்த கண்ணோட்டம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே ஆரோக்கியமான சமச்சீர் நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். “நமது கொள்கைகளில், நமது பொருளாதாரத்தில், பாதுகாப்பு தொடர்பான கருத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்காக இன்னும் ஏராளமான வீடுகள் கட்டப்பட உள்ள வேளையில், விலங்குகளுக்கும் தரமான வாழ்விடத்தை உருவாக்க வேண்டும். இந்தியா வலுவான கடல்சார் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்பதோடு ஆரோக்கியமான கடல்சார் சூழலும் உள்ளது. இத்தகைய சமச்சீர் தன்மை, வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கு உரிய பங்களிப்பை வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும் இந்தியா வளம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவில் இன்னும் ஏராளமான சாலைகள் அமைக்கப்படுவதுடன் நதிகளும் தூய்மைப்படுத்தப்படும்; அத்துடன் ரயில் போக்குவரத்தும் மேம்படுத்தப்படுவதுடன், மரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில், அடுத்த தலைமுறையினருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட்டதுடன், நாட்டின் வனப்பரப்பளவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். “பாதுகாக்கப்பட்ட பகுதிகள்” அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-ல் 692 ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, 2019-ல் 860-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. “சமுதாய காப்பகங்கள்” எண்ணிக்கையும் 2014-ல் 43 ஆக இருந்த நிலையில் தற்போது 100-க்கும் அதிகமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை “தூய்மையான எரிபொருள் சார்ந்ததாக” –வும், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்ததாக”-வும் மாற்றியமைக்க நீடித்த முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். “கழிவுகள்” மற்றும் “உயிரி – நிறை” ஆகியவை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் பெரும் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் எல்இடி பல்ப் வழங்கும் “உஜ்வாலா” மற்றும் “உஜாலா” போன்ற திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நிறைவாக, புலிகளைப் பாதுகாக்க இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர்; இணையமைச்சர் திரு.பாபுல் சுப்ரியோ; இத்துறையின் செயலாளர் திரு.சி.கே.மிஸ்ரா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***


(Release ID: 1580616) Visitor Counter : 291