நிதி அமைச்சகம்

ஆண்டுக்கு ரூ. 400 கோடி வரை வரவுள்ள நிறுவனங்களுக்கும் குறைந்த விகிதமான 25% பெருநிறுவன வரி விரிவுபடுத்தப்படுகிறது. இந்த வரம்பு முன்பு ரூ. 250 கோடி வரை இருந்தது

Posted On: 05 JUL 2019 1:29PM by PIB Chennai

2019-20 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பெருநிறுவனங்களுக்கான குறைந்த விகித வரி விகிதமான 25%-ஐ ஆண்டுக்கு ரூ. 400 கோடி வரை வரவுள்ள நிறுவனங்களுக்கும் விஸ்தரித்துள்ளது. தற்போது இந்த வரிவிகிதம் ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரையில் வரவுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. 2019-20 நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  “இது மொத்தமுள்ள வர்த்தக நிறுவனங்களில் 99.3 சதவீத நிறுவனங்களுக்குப் பொருந்துவதாக இருக்கும். இந்த வரிவிகிதத்தில் இருந்து 0.7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே வெளியே இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) மற்றும் ஆதார் ஆகியவற்றை ஒன்றுக்கு பதிலாக மற்றொன்றை பயன்படுத்த அனுமதிப்பது என்றும் பட்ஜெட் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பான் அட்டை இல்லாதவர்கள் வருமான வரிக்கான விவரங்களை தாக்கல் செய்யும்போது தங்களது ஆதார் எண்ணை குறிப்பிட்டாலே போதும். அதைப் போன்றே நிரந்தர கணக்கு எண் கோரப்படும் இடங்களில் எல்லாம் இதே போன்று ஆதார் எண்ணை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

முன்னதாகவே நிரப்பப்பட்ட வருமான வரிப் படிவங்கள் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும். இதில் சம்பள வருமானம், பங்குகளில் இருந்து பெறப்பட்ட மூலதன லாபம், வங்கி வட்டி வருமானம், பங்குகளில் இருந்து பெறப்படும் ஈட்டுத் தொகை மற்றும் வரிப் பிடித்தம் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.

 

மின்னணு முறையின் மூலம் மனிதர்கள் நேரடியாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லாமல் நேருக்கு நேர் பார்க்காமல் மதிப்பீடு செய்வது என்ற திட்டமும் இந்த ஆண்டில் படிப்படியாக தொடங்கப்படவுள்ளது. இதில் தொடக்க முயற்சியாக, குறிப்பிட்ட வரவு –செலவுகள் குறித்தும் அல்லது குறைபாடுகள்  குறித்தும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமுள்ள விஷயங்களில் இத்தகைய மின்னணு முறையிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

எந்தவொரு வங்கிக் கணக்கில் இருந்தும் ஓர் ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக பணத்தை எடுக்கும் நிலையில் அதற்கு வரியாக 2 சதவீதம் தொடக்க நிலை வரிப்பிடித்தம் விதிக்கப்படுவதற்கும் இந்த பட்ஜெட் முன்மொழிந்துள்ளது.

 

பீம், யுபிஐ, யுபிஐ-க்யூ ஆர் கோட், ஆதார் பே, சில குறிப்பிட்ட கணக்கு அட்டைகள், நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் போன்ற குறைந்த செலவில் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதிகள் குறைந்த அளவிற்கு ரொக்கப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்.

 

 

வரி செலுத்தும் பிரிவின் கீழ் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதில் இந்தியாவின் செயல்பாடு குறித்த தரவரிசை 2017-ல் 172 ஆக இருந்தது இது 2019-ல் 121 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மேற்கண்ட தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் முறையாக வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

வருவாய் குறித்த விவரங்களை பதிவு செய்யாததற்காக கைது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ. 3,000 லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்துவது, வருமான வரி சட்டத்தின் 50சிஏ மற்றும் 56 பிரிவுகளின் விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகும் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட வரி செலுத்துவோரின் உண்மையான துன்பங்களை குறைக்கும் வகையில் வரிக்கான சட்டத்தை எளிமையாக்கவும் இந்த பட்ஜெட் திட்டமிட்டுள்ளது.

 

 

********


(Release ID: 1577515) Visitor Counter : 331