பிரதமர் அலுவலகம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பிரதமருடன் சந்திப்பு

Posted On: 26 JUN 2019 2:35PM by PIB Chennai

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. மைக்கேல் ஆர்.பாம்பியோ, இன்று காலை பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

மீண்டும் பிரதமரானதை முன்னிட்டு அதிபர் டிரம்பின் வாழ்த்துகளை திரு. மோடியிடம் தெரிவித்த அமைச்சர் திரு.பாம்பியோ, தேர்தலில் பெற்ற வெற்றிக்கு தனது வாழ்த்துகளையும் பிரதமருக்குத் தெரிவித்துக் கொண்டார்.

அமைச்சரின் அன்பான வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அதிபர் டிரம்பின் நல்வாழ்த்துகளுக்கும் தனது நன்றியை அவரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவுடனான உறவுக்கு, தான் அளிக்கும் முன்னுரிமையை உறுதிப்படுத்திய பிரதமர், தனது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நம்பிக்கை மற்றும் இருதரப்பு நலனின் அடிப்படையில் வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்ற தனது இலக்கை எடுத்துரைத்தார்.

இந்தியாவுடனான உறவை தொடர்ந்து வலுவாக்கி கொள்வதற்கும், இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கனவுகளையும், லட்சியங்களையும் நடைமுறைப்படுத்த இணைந்து செயல்படுவதிலும் அமெரிக்க அரசு ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் திரு. பாம்பியோ தெரிவித்தார்.

இரு நாட்டு உறவுகளின் முழு திறனைப் பயன்படுத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் சாதனை படைக்க வேண்டும் என்ற தனது ஈடுபாட்டையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

*****

 



(Release ID: 1575782) Visitor Counter : 119