பிரதமர் அலுவலகம்

மத்திய அமைச்சரவையின் முதல் முடிவை இந்தியாவை பாதுகாப்போருக்கு பிரதமர் அர்ப்பணிப்பு

Posted On: 31 MAY 2019 5:49PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு  நிதித் திட்டத்தின் கீழ் உள்ள பிரதமரின் கல்வி உதவித் தொகைத்திட்டத்தில் பெரிய மாற்றங்களுக்கு ஒப்புதல்

கல்வி உதவித்தொகை விகிதங்கள் உயர்த்தப்பட்டிருப்பதோடு மாநில காவல்துறையினருக்கும் திட்டம் விரிவாக்கம்

பாதுகாப்பான இந்தியா மற்றும் நாட்டை பாதுகாப்போரின் நலன் என்ற பிரதமரின்  தொலைநோக்குப் பார்வையோடு பிரதமராக திரு நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின், எடுத்த முதல் முக்கிய முடிவுபடி பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் உள்ள பிரதமரின் கல்வி உதவித் தொகைத்திட்டத்தில் பெரிய மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் இந்தத் திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விகிதம் மாணவர்களுக்கு மாதத்திற்கு 2000ரூபாயிலிருந்து 2500 ரூபாயாகவும், மாணவிகளுக்கு 2250 முதல் 3000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம் பயங்கரவாத மற்றும் நக்சலைட்  தாக்குதலில் வீரமரணமடைந்த மாநில காவல் துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.   இந்த புதிய கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு மாநில காவல் துறை அதிகாரிகளின் குழந்தைகள் 500 பேருக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைச்சகமாக  மத்திய உள்துறை அமைச்சகம் இருக்கும்.

பின்னணி

தேசிய பாதுகாப்பு நிதியகம் 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தாமாக வந்து நன்கொடைகளை பணமாகவோ,பொருளாகவோ வழங்கவும் அதனை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யவும் இந்த நிதியம் அமைக்கப்பட்டது.  தற்போது இந்த நிதி ராணுவம், துணை ராணுவம், ரயில்வே பாதுகாப்புப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களை சார்ந்து இருப்பவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதியை பிரதமரை தலைவராகக் கொண்டும் பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களின் உறுப்பினராகக் கொண்டும் செயல்படும் நிர்வாகக் குழு நிர்வகிக்கிறது. கல்வி உதவித்தொகை , ராணுவம். துணை ராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வீரமரணமடைந்தவர்களின் துணைவியர் மற்றும் அவரது குழந்தைகள் தொழில்நுட்பம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்படுகிறது. 

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  ஒவ்வொரு ஆண்டும் முப்படைகளைச் சேர்ந்த வீர்ர்களின் குழந்தைகைள் 5500பேருக்கும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் 2000 பேருக்கும், மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  படைகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் 150 பேருக்கும் வழங்கப்படுகிறது.

 தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு தாமாக முன்வந்து நன்கொடை வழங்குபவர்கள் ndf.gov.in என்ற இணையதள முகவரியில் செலுத்தலாம். 

நமது சமுதாயத்தை மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்குபவர்களுக்கு உதவுவது:  

பிரதமர் திரு.நரேந்திர மோடி நமது காவல் துறையினர் அளிக்கும் அளப்பரிய பங்கினை விரிவாக எடுத்துரைத்தார்.  கடுமையான கோடைகாலமாக இருக்கட்டும், குளிர்காலமாக இருக்கட்டும் அல்லது பலத்த பருவ மழைக்காலமாக இருக்கட்டும் நமது காவல் துறையினர் தங்களது பணிகளை தொய்வில்லாது செய்து வருகின்றனர்.  பெரும் விழாக்காலங்களில்கூட  நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது கூட நமது காவல் துறையினர் தங்களது கடமைகளை ஆற்றி வருகின்றனர்.

இப்படி பணியாற்றும் காவலர்களுக்கு நாட்டில் பாராட்டுக்களைத் தெரிவிப்பது மட்டும் நமது கடமையல்ல, அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடவேண்டும். இந்த உணர்வின் காரணமாகவே பிரதமர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில் தேசிய காவலர் நினைவகம் அமைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. நமது காவலர்களின் துணிவு மற்றும் தியாகத்தின் நினைவுச் சின்னமாக இந்த நினைவகம் நிற்பதோடு கோடிக்கணக்கான இந்தியர்களை இது தொடர்ந்து ஊக்கப்படுத்தும்.

-----  

 



(Release ID: 1572993) Visitor Counter : 231