பிரதமர் அலுவலகம்

ஃபானி புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம்

Posted On: 02 MAY 2019 2:39PM by PIB Chennai

ஃபானி புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், உயர்நிலைக்குழு கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், பிரதமரின் கூடுதல் முதன்மை செயலர், உள்துறை செயலர் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

      இந்தக் கூட்டத்தில், புயல் எந்த திசையை நோக்கி நகர்கிறது, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்கூட்டிய மற்றும் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டது.

      இதில் அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கச் செய்வது, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவப் படையினரை பணியில் அமர்த்துவது, குடிநீரை விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகள், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை உறுதிசெய்யும் இடைக்கால நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

      தற்போதைய சூழல்குறித்து ஆய்வு செய்த பிரதமர், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

*****



(Release ID: 1571540) Visitor Counter : 112