பிரதமர் அலுவலகம்

கொரியா பயணத்தில் இந்திய- கொரிய வணிகம் குறித்த கருத்தரங்கில் பிரதமரின் உரை

Posted On: 21 FEB 2019 12:31PM by PIB Chennai

மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு தொழில், வர்த்தகம், எரிசக்தித் துறை அமைச்சர் யுன்மோ சுங் அவர்களே,

தொழில், வணிகப் பெருமக்களே,

நண்பர்களே,

இனிய வணக்கம்.

தலைநகர் சியோலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 மாதங்களில் கொரிய வர்த்தகர்களுடன் நான் உரையாடுவது இது மூன்றாவது முறையாகும். இந்த தீவிரத்துக்குக் காரணம் உண்டு. கொரிய வர்த்தகர்கள் மேலும் மேலும் இந்தியாவின் மீது  கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். குஜராத் மாநில முதலமைச்சராக நான் இருந்தபோது கூட கொரியாவில் பயணம் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கொரியா பொருளாதார வளர்ச்சியில் ஒரு வழிகாட்டியாகவே கருதுகிறேன்.

நண்பர்களே,

இன்று 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அவையாவன :

வேளாண் சாரந்த பொருளாதாரம் தொழில் மற்றும் சேவைகளால் ஆன பொருளாதாரமாக மாறியுள்ளது.

மூடிக் கிடந்த பொருளாதாரம் தற்போது உலகளவில் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த பொருளாதாரம் இன்று ஒங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியா, ஏராளமான வாய்ப்புகளைக் கொண்ட நிலமாக மாறிவருகிறது. “இந்தியக் கனவு” நிறைவேற வேண்டும் என நாம் பாடுபட்டு வரும்போது, நம்மைப் போன்ற எண்ணமுள்ளவர்களை நாடுகிறோம். அவர்களில் தென்கொரியா உண்மையான, இயல்பான கூட்டாளியாக அமைந்துள்ளது.

இந்திய – கொரிய வர்த்தக உறவுகள் கடந்த பல ஆண்டுகளாக நீண்டுத் தொடர்கிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மிகவும் நெருங்கிவிட்டன. கொரியாவின் முதன்மையான பத்துக் கூட்டாளிகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கொரிய சரக்குகளை அங்கிருந்து தருவித்து இறக்குமதி செய்வதில் உலகின் ஆறாவது பெரிய நாடாகத் திகழ்கிறது. 2018ம் ஆண்டில் மட்டும் நமது வர்த்தக மதிப்பீடு 21.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 2030ம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தக மதிப்பீட்டை 50 பில்லியன் டாலராக உயர்த்தும் வகையில் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு உடன்பாட்டை மேம்படுத்துவதற்கான விவாதங்கள் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தகத்தில் மட்டுமின்றி, முதலீட்டிலும் சாதகமான நகர்வையே காண்கிறோம். இந்தியாவில்  கொரியா செய்யும் முதலீடுகள் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலரை எட்டிவிட்டன.

நண்பர்களே,

கொரியாவுக்கு 2015ம் ஆண்டில் நான் பயணம் மேற்கொண்டதை அடுத்து, வர்த்தகத்தின் அனைத்து கட்டங்களிலும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டவும் உதவுவதற்கும் “இந்தியாவில் முதலீடு செய்” திட்டத்தின் கீழ் “கொரியா பிளஸ்” (Korea Plus) என்ற பிரிவை அமைத்துள்ளோம். இந்தியாவில் ஹ்யூண்டாய், சாம்சங், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை நம்பகத் தன்மை கொண்ட நிறுவனங்களாக உள்ளன. இதில், விரைவில் கியா நிறுவனமும் இணைய இருக்கிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய இருக்கின்றன. மேலும், பல நிறுவனங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு நடைமுறையை எளிதாக்குவதற்காக கொரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கான விசா நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரிய வர்த்தக அலுவலகங்கள் இயங்குவதற்கு திறக்கப்படுவதற்கு ஊக்குவிக்கிறோம். கொரிய வர்த்தக முதலீட்டு மேம்பாட்டு முகமையின் (Korea Trade-Investment Promotion Agency - KOTRA) ஆறாவது அலுவலகம் அகமதாபாதில் திறக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன். தற்போது இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது குறித்து சிறிது கூற விரும்புகிறேன். எங்கள் நாட்டில் பொருளாதாரம் வலுவான அடித்தளத்துடன் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் விரைவில் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்ட இருக்கிறது. ஆண்டுதோறும் 7 சதவீத வளர்ச்சியை எட்டுகிறோம். வேறு எந்த பொருளாதார நாடும் இந்த வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லை. ஜிஎஸ்டி உள்ளிட்ட கடும் சீர்திருத்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில் வர்த்தகம் தொடங்குவதை எளிதாக்குவது என்ற உலக வங்கியின் மதிப்பீட்டில் 77 வது இடத்தில் இருந்த இந்தியா நான்கு ஆண்டுகளில் ஒரே பாய்ச்சலாக 65வது இடத்தைப் பிடித்துவிட்டது. அடுத்த ஆண்டு 50வது இடத்தை எட்டுவதற்கு உறுதிபூண்டுள்ளோம். அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் இன்று முன்னணியில் இருக்கிறோம். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் அனுமதி பெறுவது எளிதாக உள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் மீதான நம்பிக்கைப்படி 250 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவில், உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த காரணத்துக்காக நிதி விஷயத்தில் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த மூன்றாண்டுகளில், வங்கிக் கணக்கே இல்லாத 30 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் 99 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. அந்தக் கணக்குகளில் 120 மில்லியன் டாலர் அளவுக்கு சேமிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் ஓய்வூதியம், காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவது எளிது. முத்ரா திட்டத்தின் (Mudra scheme) கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 12 கோடியே 80 லட்சம் பேருக்கு மொத்தம் 90 பில்லியன் டாலர் அளவுக்கு சிறுகடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 74 சதவீதம் பெண்களுக்குக் கிடைத்துள்ளது. முந்தைய காலத்தில் வங்கிக் கணக்கு தொடங்காதவர்கள் மானியங்கள், சேவைளைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் அடையாளம், வங்கிக் கணக்குகள், கைபேசி ஆகியவற்றின் துணை புரிய செய்துள்ளோம். இவற்றின் மூலம் 50 பில்லியன் டாலர் அளவுக்கு அரசின் உதவிகள் நேரடியாக பயனாளிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளன.

கிராமப்புறங்களில் மிகப் பெரிய அளவில் மின்சார வசதியை ஏற்படுத்தியுள்ளோம். உலகிலேயே கிராமங்களில் மின்சார வசதியை மிகப் பெரிய அளவில் 2018ம் ஆண்டில் வெற்றிகரமாக அமைத்துத் தந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை சர்வதேச மின்சக்தி முகமை (International Energy Agency) நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பொறுத்தவரையில் உலகின் மிகப் பெரிய ஆறாவது நாடு என்ற இடத்தை அடைந்துள்ளோம். பன்னாட்டு சூரிய சக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance) முன்முயற்சியின் கீழ் பசுமை உலகப் பொருளாதாரத்தை  எட்டுவதில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. இதில் பசுமையான நீடித்த திட்டத்துக்காக நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. இது ஆளுகையையும் பொது சேவையையும் மாற்றி வருகிறது.

நண்பர்களே,

பொருளாதார முன்னேற்றம் உலகத் தரம் வாய்ந்த கட்டுமானத்துடன் தொடர்புள்ளது. கொரியாவில் தொழில்நுட்பத் திறன்கள், செயல்வல்லமைகள் வலுவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் போக்குவரத்து, மின்சாரம், துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், வீட்டு வசதிகள், நகர்ப்புறக் கட்டமைப்பு மேம்பாடு, இவற்றுக்குப் பெரிய தேவை உள்ளது.

2022ம் ஆண்டில் கட்டுமானத்திற்கு 700 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் (Sagarmala Project) அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுகத் திட்டங்களுக்கு 10 பில்லியன் டாலர் தேவைப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புறத் தேவைகளின் மேம்பாட்டுக்கும் பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்கும் தூய்மையான எதிர்காலத்துக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. 2015ம் ஆண்டில் நாட்டு மக்களில் 50  கோடி பேர் நகர்ப்புற வாசிகளாக இருப்பர். இது பொலிவுறு நகரங்களைக் கட்டமைப்பதற்குக் கிடைக்கும் ஒத்துழைப்பைக் காட்டுகிறது.

இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சிக்குத் துணைபுரிவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், இந்தியாவும் கொரியாவும் 1000 கோடி டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 71,115 கோடி) திட்டங்களை அடையாளம் கண்டுள்ளன. கொரிய பொருளாதார மேம்பாட்டு கூட்டமைப்பு நிதியம் மற்றும் ஏற்றுமதி கடனுதவித் திட்டத்தின் கீழ் இத்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

இந்தியா அதி வேக பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான கொள்கைகளையும் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, ஆட்டோமொபைல் தொழிலைப் பொறுத்த வரையில், தேசிய மின்சார வாகன இயக்கம் (The National Electric Mobility Mission) செலவு குறைந்த, திறன்மிக்க மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்களைத் தயாரிப்பதில் முதலிடம் வகிக்கும் தென்கொரியா இத்தொழிலைத் தொடங்குவதற்கு இந்தியாவில் நிறைய வாய்ப்ப்பு உள்ளது.

நண்பர்களே,

நான்காவது தொழில் புரட்சி யுகத்தில் ஆய்வு மற்றும் புதுமையாக்கம் உந்து சக்தியாக இருக்கும். அதற்கு அரசு முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இது விஷயத்தில், இந்தியாவில் தொடங்கு (Start-up India) என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, அதற்குச் சாதகமாக நான்கு ஆண்டுகளுக்கு 1.4 டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, ஆற்றல் மிக்க அதிபர் மூன் தலைமையில் தென்கொரியா 2020ம் ஆண்டில் 9.4 டாலர் அளவுக்கு செலவிட முன் வந்துள்ளது. இது இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான மூலதன சப்ளையை அதிகரிக்கவும் முதலீட்டுக்கு உகந்த சூழலை அமைக்கவும் உதவும். இத்தகைய கொள்கைகள் இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் பொதுவான நலன்களின் விளைவாக உள்ளன.

இந்திய – கொரிய தொழில்தொடக்க மையத்தை அமைப்பது என்ற எங்களது லட்சியம் தொழில் தொடங்கும் கொரியர்களுக்கும், இந்தியத் திறனாளர்களுக்கும் இடையில் எளிதாகத் தகவல் தொடர்புக்கு வழிசெய்யும். தென்கொரிய தேசிய தகவல் தொழில்நுட்ப தொழில் மேம்பாட்டு முகமை (South Korean National IT Industry promotion Agency) தனது அலுவலகத்தை இந்தியாவில் பெங்களூரில் ஏற்கெனவே திறந்து செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் தொழில்தொடங்க முன் வரும் கொரியர்களுக்கு இது உதவும். இரு நாடுகளும் “இந்திய – கொரிய எதிர்கால உத்திக் குழு” (India-Korea Future Strategy Group), “இந்திய கொரிய ஆய்வு புதுமையாக்க ஒத்துழைப்பு மையம்” (India-Korea Centre for research and Innovation Cooperation) என்ற இரு அமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன. எதிர்காலத்தை மையப்படுத்தி ஆய்வு, புதுமையாக்கம், தொழில்முனைவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேற்கொள்ள இவை செயல்படும்.

நண்பர்களே,

இரு நாட்டு குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், கொரிய குடியரசுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவின் விருப்பமாகும். தொழிலதிபர்களாகிய நீங்கள் உங்களது கனவுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் அரசின் முயற்சிகள் எதுவும் செயலுக்கு வராது.

“தனியாகச் சென்றால் வேகமாகச் செல்வீர்கள், ஆனால், இணைந்து சென்றால் நீண்ட தூரம் பயணிப்போம்” என்ற கொரிய வரிகளைக் குறிப்பிட்டு இந்த உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி,

வணக்கம்.

*****(Release ID: 1565876) Visitor Counter : 142